Published : 25 Nov 2017 10:13 AM
Last Updated : 25 Nov 2017 10:13 AM

தொடுகறி: கி.ரா. வீட்டு மீன் குழம்பு!

முதுபெரும் எழுத்தாளரான கி.ராஜநாராயணன் நல்ல சாப்பாட்டுப் பிரியர் என்பது அவரை அறிந்த எல்லோருக்கும் தெரிந்திருக்கும். எதுவுமே அவருக்கு இரு பிடி அளவுதான். ஆனால், ருசியாக இருக்க வேண்டும். அதிலும் கோவில்பட்டி பாணி என்றால், கூடுதல் இஷ்டம். வயதாகிவிட்ட அம்மாவின் சிரமத்தைக் குறைக்கும் வகையில், அப்பாவுக்கான அசைவச் சமையல் பொறுப்பை இப்போது கி.ரா.வின் இளைய மகன் பிரபாகர் ஏற்றுக்கொண்டிருக்கிறார். வீட்டில் மீன் குழம்பு, கோழிக்குழம்பு என்றால், மனைவி நாச்சியாரை ஓரங்கட்டிவிட்டுச் சமையலறையை முழுவதுமாகத் தன் கட்டுப்பாட்டில் கொண்டுவந்துவிடுகிறார். “நமக்கு ஊட்டி வளர்த்தவங்களுக்கு இப்போகூட இல்லாட்டி எப்போ நாம ஊட்டிவிடப்போகிறோம்” என்கிறார்.

 

பள்ளிக்குள் ஒரு புத்தகக் காலம்!

சமயபுரம் எஸ்.ஆர்.வி. மேல்நிலைப் பள்ளியில், ‘வீட்டுக்கொரு நூலகம்’ என்னும் முழக்கத்துடன், பத்து ஆண்டுகளாக நடைபெற்றுவருகிறது புத்தகத் திருவிழா. நவம்பர் 23 தொடங்கிய இந்தப் புத்தகக் காட்சி நவம்பர் 26 வரை நடக்கிறது. மாணவர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் என இருபதாயிரம் பார்வையாளர்கள் பார்வையிடுகின்றனர். சென்ற ஆண்டு 10 லட்சம் ரூபாய்க்கு புத்தகங்கள் விற்பனையாகின.

தி இந்து, பாரதி புத்தகாலயம், என்.சி.பி.எச்., கிழக்குப் பதிப்பகம், விகடன், காலச்சுவடு, க்ரியா, எதிர், ஞானபாநு, திருச்சி புக் ஹவுஸ், என்.பி.டி., எஸ்.ஆர்.வி. தமிழ்ப் பதிப்பகம் உட்பட 40 பதிப்பகங்கள்; 4,000 தலைப் புகள் என ஒரு லட்சம் புத்தகங்கள் இந்தப் புத்தகக் காட்சியில் வைக்கப்பட்டிருக்கின்றன. இந்த ஆண்டு பன்னிரண்டு லட்சம் ரூபாய்க்கான புத்தகங்கள் விற்பனையாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. பாடப் புத்தகங்களைத் தாண்டியும் விரிந்த புத்தக உலகம் இருக்கிறது என்பதை மாணவர்களுக்கு உணர்த்துவதற்கு எஸ்.ஆர்.வி. பள்ளிக்கூடம் எடுக்கும் முயற்சிகளை மற்ற தனியார் பள்ளிகளும் பின்பற்றாலாமே!

குழந்தைகளுடன் உரையாடிய ‘க்ரியா’ ராமகிருஷ்ணன்

சென்னை திருவான்மியூரில் உள்ள மாவட்ட முழுநேரக் கிளை நூலகத்தில் நடைபெற்றுவரும் தேசிய நூலக வார விழாவில், பதிப்பாளர் ‘க்ரியா’ எஸ்.ராமகிருஷ்ணனைப் பார்க்க முடிந்தது. நூலகங்களுக் குச் செல்வது, அங்கு வரும் குழந்தைகளுடன் புத்தக வாசிப்பு குறித்து உரையாடுவது என்ற வழக்கத்தைத் தொடங்கியிருக்கிறார் ராமகிருஷ்ணன். ஒரு அகராதி எப்படி உருவாக்கப்படுகிறது என்பதைச் சுருக்கமாகக் குழந்தைகளுடன் பகிர்ந்துகொண்டார் ராமகிருஷ்ணன். ‘நேச்சர் கன்சர்வேஷன் ஃபவுண்டேஷன்’ உருவாக்கிய ‘தமிழகப் பறவைகள்’ என்ற குறுங்கையேட்டைக் குழந்தைகளுக்கு அவர் இலவசமாக வழங்கினார். மாதத்தில் ஒரு நாள் என்று எல்லா எழுத்தாளர்களும் பதிப்பாளர்களும் இப்படித் தொடங்கினால் நன்றாகத்தான் இருக்கும்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x