

ந
வீனத்தின் சாயலை மேல்பூச்சாய்க் கொண்டிருந்தாலும், தொன்மையில் வார்த்தெடுக்கப்பட்டது மதுரை மாநகரம். அது ஒரு மாயத் தாமரை. வெளிப்புற வீதிகளின் பகட்டு ஒளிரும் ஷாப்பிங் மால்கள், பலமாடி துணிக் கடைகள், பிக்பஜார், கே.எ.ஃப்.சி, உயர்ரக தங்கும் விடுதிகளைக் கடந்து நகரின் மையத்தை நோக்கி நகர்ந்தோமெனில் கபாடபுரத்தின் பழமைக்கு நம்மை இழுத்துச் செல்லும் அத்தாமரையின் மையப் புள்ளியில் மீனாட்சியின் சந்நிதி. அதுவே நகரின் அனைத்து இயங்குதலுக்கும் ஆதாரப் புள்ளி. 64 திருவிளையாடல்கள் அரங்கேறிய மதுரை. பட்டர்பிரானுக்குப் பொற்கிழி அளித்த மதுரை. சமணப் பள்ளிகள் செழித்திருந்த மதுரை. கவிதைகளை சங்கப் பலகை தரம் பார்க்கும் மதுரை. நக்கீரனை உயிர்ப்பித்த பொற்றாமரைக் குளப் படிக்கட்டு, நாம் அமரவும் இடம் கொடுக்கிறது. பாலை மணல் கொண்டு பெருங்கோடு இழுத்தாற்போல் வைகை வருடம் முழுவதும் அழகரின் வருகையை எதிர்நோக்கி தன் இருப்பை அர்த்தப்படுத்துகிறது.
மதுரை நகரின் இன்றைய சித்திரம் தொன்மைக்கும் நவீனத்துவத்துக்குமான இருவேறு சிறு நகரங்களாய்த் தோன்றுகிறது. அவ்வாறான சித்திரத்தை எனக்கு சமீபத்தில் அளித்தவை ந.ஜயபாஸ்கரனின் ‘சிறுவெளி வியாபாரியின் ஒருவழிப் பயணம்’ கவிதைத் தொகுப்பும் மற்றும் லிபி ஆரண்யாவின் ‘உபரி வடைகளின் நகரம்’ கவிதைத் தொகுப்பும். இவ்விரு தொகுப்புகளும் 2013-ல் வெளிவந்தவை.
ஜயபாஸ்கரன் தனது கவிதைகளைப் பற்றிக் கூறும்போது "ஒரே இடத்தில் ஆணி அடித்து நிறுத்தப்பட்ட இருப்பு, அதனால் கல்வாரி என்று கற்பிதம் செய்து மயங்கவும் வாய்ப்பு" என்கிறார். சில சமயம் சிறை ஆகவும், சில சமயம் தாயின் கருப்பை ஆகவும் உருக்கொள்கிற கடை என்றும் தன் தினசரியை விவரிக்கிறார்.
எனவேதான், ‘ஆகப்பெரிய அலுமினிய வட்டைகளின் உள்ளே மட்டும் உணர்வதான பரவெளி’ என்று அவரால் கவிதை எழுத முடிகிறது.
மீனாட்சி கோயிலுக்கு மிக அருகில் தன் பெரும் பொழுதைக் கழிக்கும் இவரது கவிதைகளில் கோயிலின் இருண்ட வெளிப் பிராகாரங்களின் வாசனை தெரிகிறது. எனவேதான்,
‘அச்சுறுத்தல் பாதுகாப்பு
அறியாக் காலத்தில்
பார்த்துத் தீராத
மீனாட்சி கோவில் சிற்ப மோகினி
ஆரா அமுது பரிமாறிய பின்
இடை குழைந்து
நீட்டும் அகப்பையின் வெறுமை
இவனை நோக்கி’
என்கிறார் ஜயபாஸ்கரன்.
கடையின் வழியே மதுரையின் பரபரப்பான வீதியை அளக்கும் செயலில்,
‘எதிர்க்கல் சந்தில்
வெள்ளைப்பூண்டுக்
கட்டைப் பைகளையும்
செல்போனையும்
இயல்பாய்க் கைமாற்றி
இறங்கி
வரும்
பெண்களின்
பர்தா துறந்த
சிரிப்பு’
இது போன்ற மென் காற்று அவ்வப் போது கடக்கிறது.
‘ஒன்றாம் எண் சந்துக்கும்
பிட்சாடனர் சந்நிதிக்கும்
நேர்கோட்டு வழி இருக்கிறது’
என்ற ரகசியத்தையும் பகிர்ந்துகொள்கிறார். திருநீற்றின் பெருமை பேசும் தேவாரப்பாடலின் சாயலில் இன்று மதுவின் பிடியில் தள்ளாடும் மதுரையை ‘போதம் தருவது நீறு’ என்று விவரிக்கிறார்.
‘இன்று
மது சாலைகளில்
மோகினி
தற்போதமும் பிறிதின் போதமும்
கலக்கித்
தந்து’
என்று தன் விளக்கமாய் இப்படி எழுதுபவர்,
‘இரவில் கடைப்பூட்டுடன்
கதவில் தொங்கும் சுயம்
தலைகீழாய்க் காண்பது
பஜாரின் ஒடுக்கம்’ என்கிறார்.
உலகமயக் கொள்கைகள் அமல்படுத்தப்பட்ட காலத்தில், பல்வேறு மாற்றங்களைக் கண்ணுற்றுக் கவிதை எழுதத் தொடங்கிய லிபி ஆரண்யாவின் கவிதைகளில் உலகமயத்தின் கோர விளைவுகளும், ஆட்சியாளர்களின் அலட்சியப் போக்கும் முக்கிய இடத்தைப் பிடிக்கின்றன. முன்னுரையிலேயே "தமது சாமான்களைப் பரத்தி வைக்கத் தோதான சந்தையாகிச் சுழலும் ஒரு மகா உருண்டையை அத்தனை லேசில் நமது எசமானர்கள் விட்டு விடுவார்களா என்ன?’ என்று கேள்வி எழுப்புகிறார்.
பகடியாய்த் தொடங்கும் கவிதைகள் பென்சிலில் வரைந்த கோட்டோவியமாய் ஆரம்பித்து, கூர்முனை ரத்தக் காயத்தை ஏற்படுத்துவதைப் போல் மனதில் தைக்கும் வரிகளால் நிறைவடைகின்றன. "ஒரு செவ்வகத் தாளிற்கென பிள்ளைகளைக் கத்தரிப்பவர்கள்" கவிதையில்
‘முடிந்தால்
இந்தப் பிறந்தநாளில்
போன்சாய்
மரமொன்றைப் பரிசளிப்போம்
பறவைகள்
வந்தமர முடியாதபடிக்கு
துயரத்தின் கிளையை
விரித்து நிற்கும்
போன்சாயறியும்
நமது குழந்தைகளின் வலியை’
என்று பதிவு செய்கிறார்.
‘கேவலம் கொசுக்கடிக்கு
நமது குழந்தைகளைத்
தூக்கித் தந்துவிட்டு
விஞ்ஞானத்தைப்
புகுத்திக்கொண்டிருக்கும்’
என்று லிபி எழுதியது 2013-ல். முந்தைய டெங்கு காலம் போல! இன்றும் பொருந்துவது எத்தனை துயரம்.
‘ஆகப் பெரிய சவ்வுத்தாள் பையின் வாகான கைப்பிடிக்கு பாம்பட நினைவிலாடிய நமது கிழவிகளின் காதுகள் கச்சிதமாயிருப்பதாக’ எனும் வரிகளின் கற்பனை மலைக்க வைக்கிறது. சிற்றூரில் இளம்பிராயத்தைக் கழித்த சிறுவனின் மனவலியை ‘ஆட்டையில் சேராதவளின் அன்பு’ மிக அழகாய் வெளிப்படுத்துகிறது.
வெயில், கடும் வெயில், மிகக் கடும் வெயில் காலம் கொண்டிருக்கும் மதுரையில் நெரிசலான சாலைகளில் வண்டி ஓட்டுகையில், மென்காற்றை ஸ்கூட்டிகள்தான் வீசிச் செல்கின்றன போலும்.
ஒரே பெண்ணை, இரு வேறு ஓவியர்கள் வரைந்ததை ஒரே நேரத்தில் பார்த்ததைப் போல், ஒரே காலகட்டத்தில் இரு கவிஞர்கள் மதுரையைப் பற்றிப் பதிவு செய்திருப்பதைப் படித்தது அலாதியான அனுபவம்.
தொன்மத்தின் போர்வை போர்த்தி, நகரின் இயக்கத்தைப் பார்த்துப் பதிவு செய்யும் ஜயபாஸ்கரனின் மதுரையும், உலகமயமாதலின் கொள்கைகளால் பாழ்பட்டிருக்கும், லிபி ஆரண்யாவின் மதுரையும் வேறு வேறா என்ன?