Published : 25 Nov 2017 10:27 AM
Last Updated : 25 Nov 2017 10:27 AM

நல்வரவு: தெரு விளக்கும் மரத்தடியும்

தமிழகத்தின் கிராமங்கள்தோறும் 1990-களின் தொடக்கத் தில் பற்றிப் படர்ந்த எழுத்தறிவு இயக்கமான அறிவொளிச் சுடரைத் தூக்கிப் பிடித்தவர்களுள் முதன்மையானவர் பேராசிரியர் ச.மாடசாமி. கல்லூரிப் பணியிலிருந்து விலகி, கிராமத்து மக்களோடும், கற்பிக்கும் பணியில் தன்னார்வத்தோடு ஈடுபட்ட அறிவொளித் தொண்டர்களோடும் அவர் உரையாடிய அனுபவங்களெல்லாம் எழுத்தில் பதிவாகாத கல்வி வரலாறு. ‘வார்த்தைகளின் முன்பக்கம் ஓர் அர்த்தம் இருக்கிறது. சில நேரங்களில் முதுகுப் பக்கம் வேறு ஓர் அர்த்தம் வந்துவிடுகிறது’ என்று எதையும் கூர்ந்து பார்ப்பதோடு, மெலிதான நகைச்சுவையோடும் எழுதும் நூலாசிரியரின் இந்தக் குறுநூல் கல்வியியலில் புதிய ஒளி.

தெரு விளக்கும் மரத்தடியும் – ச.மாடசாமி
விலை: ரூ.80, புதிய தலைமுறை வெளியீடு,
சென்னை-600032. : 044-45969501

 

தமிழ்ப் படைப்பிலக்கிய வெளியில் தனித்த சொல்லாடலாக இன்றைக்கு தலித் எழுத்துகள் கவனம் பெற்றுள்ளன. தலித் விடுதலைக்கான சிந்தனையை முன்னெடுக்கும் தலித்திய நோக்கிலான படைப்புகள் பற்றிய ஏழு ஆய்வுக் கட்டுரைகள் இந்நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. தலித்திய நோக்கில் கல்வி, தலித்தியமும் தலித் இலக்கியமும், சங்க இலக்கியப் பரப்பில் சாதி எதிர்ப்புக் குரல், நவீன படைப்புகளில் வடிவம் மாறிய சாதிய வன்மம், மாற்றுப் பண்பாட்டில் தலித் சமூகத்தின் இயங்கு வெளி, தொல்காப்பிய ‘விருந்தும்’ நவீன இலக்கியப் புனைவுகளும் என ஒவ்வொரு கட்டுரையும் தலித்திய சிந்தனைப் பார்வையை முன்வைத்திருக்கின்றன.

அத்து - பதிப்பும் தொகுப்பும்: முனைவர் ந.இரகுநாதன்
விலை: ரூ.140 | சந்தியா பதிப்பகம், சென்னை-600083
தொடர்புக்கு:044-24896979

 

மலையாள எழுத்தாளரும் கல்வியாளருமான ஷீபா இ.கே., 2002- ல் குஜராத்தில் நடைபெற்ற இனப்படுகொலைகளின்போது உண்டான மன உந்துதலில் எடுத்த குறிப்புகளை அடிப்படையாகக் கொண்டு எழுதிய நாவல். 2004-ல் கல்லூரி மாணவி இஷ்ரத் ஜஹானும் அவரது மூன்று நண்பர்களும் என்கவுண்டரில் கொல்லப்பட்டதால் எழுத்தாளர் அடைந்த அதிர்ச்சியும் இந்த நாவலின் கதைக்களனாகியுள்ளது. மொழிபெயர்ப்பு நாவலுக்கான நெருடலின்றி வாசிக்க வைக்கிறது யூமா வாசுகியின் நேர்த்தியான மொழிபெயர்ப்பு.

துனியா - ஷீபா இ.கே.
தமிழில்: யூமா வாசுகி
விலை: ரூ.110 | என்சிபிஹெச், சென்னை-600098
தொலைபேசி: 044-26241288

 

சுரேஷ் பிரதீப் ‘ஒளிர் நிழல்’ நாவலுக்கு அடுத்ததாக இந்தச் சிறுகதைத் தொகுப்புடன் வந்திருக்கிறார். இந்தத் தொகுப்பில் மொத்தம் 15 கதைகள். தற்கொலை செய்துகொண்ட கணவனுக்குப் பிறகு மகனையும் குடும்பத்தையும் ஒற்றை மனுஷியாய் தூக்கி சுமக்கும் பெண்ணை பற்றி மகனின் பார்வையில் சொல்லப்பட்டிருக்கும் ‘குற்றுளம்’ கதை கவனிக்க வைக்கிறது. ஊர் என்ன சொல்லும் என்பதைப் பற்றிக் கவலைப்படாமல் தன்னியல்பில் இருக்கும் ஒரு பாத்திரம்தான் அந்த அம்மா. இதுபோல 'அகம்’ என்கிற கதையும் நல்ல கதை. எல்லா கதைகளிலும் மொழிநடை ஒரே மாதிரியாக இருப்பது தொகுப்பின் பலமும் பலவீனமும்.

நாயகி நாயகர்கள் - சுரேஷ் பிரதீப்
விலை ரூ. 125 | கிழக்கு, சென்னை - 14
தொடர்புக்கு: 044-42009603

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x