Published : 11 Nov 2017 09:56 AM
Last Updated : 11 Nov 2017 09:56 AM

தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் வாசிப்புப் பயணம் எங்கெங்கும் பரவட்டும்!

மிழ்நாடு முழுவதும் முன்னெப்போதும் இல்லாத அளவுக்குப் புத்தக இயக்கங்கள் புதுவேகம் எடுத்துவருவது உவகை அளிக்கிறது. ஒருபுறம் ‘தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்க’மான ‘பபாசி’ சிறு நகரங்களை நோக்கிச் செல்ல, மறுபுறம் தமிழ்நாடு அறிவியல் இயக்கம் பள்ளிகளை நோக்கிச் சென்றுகொண்டிருக்கிறது. மிக ஆரோக்கியமான முன்னெடுப்பு இது.

தமிழ்நாடு அறிவியல் இயக்கம் கடலூரில் தற்போது பாரதி புத்தகாலயத்துடன் இணைந்து தொடங்கியிருக்கும் ‘சிறுவர் புத்தகக் காட்சி’ பெரும் நம்பிக்கையை ஏற்படுத்தியிருக்கிறது. புத்தகங்களைச் சிறுவர்களை நோக்கி எடுத்துச்செல்வதில் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்துடன் நீண்ட காலமாகவே பாரதி புத்தகாலயம் கைகோத்துச் செயல்பட்டுவருகிறது. வெறுமனே புத்தகங்களைப் பதிப்பிப்பதோடு நிறுத்திக்கொள்ளாமல், புதிய வாசகர்களை உருவாக்குவதில், பல்வேறு தளங்களிலும் புத்தகங்களைக் கொண்டுசெல்வதில் பாரதி புத்தகாலயம் எடுத்துவரும் முயற்சிகள் மிகுந்த பாராட்டுக்குரியன. பாரதி புத்தகாலயத்தின் நிர்வாகியாக நாகராஜன் பொறுப்பேற்றதிலிருந்தே நிறையப் புதுப் புது முயற்சிகள் தொடங்கின. அவற்றில் முக்கியமானது சிறுவர்களுக்கான புத்தகங்களிலும் அது தீவிர கவனம் செலுத்தத் தொடங்கியது. கால் நூற்றாண்டுக்கும் மேலாக மாணவர்களிடையே வாசிப்பையும் அறிவியல் சிந்தனை களையும் எடுத்துச் செல்லும் பணியில் ஈடுபடுத்திக்கொண்டிருக்கும் தமிழ்நாடு அறிவியல் இயக்கத்தின் பொதுச் செயலாளராக அ.அமலராஜன் பொறுப்பேற்றது முதலாக இந்த முயற்சி மேலும் வலுப்பெற்றது.

முன்னதாக இரு தரப்பினரும் சேர்ந்து தமிழ்நாட்டில் வாய்ப்புள்ள இடங்களிலெல்லாம் உள்ளூர் அமைப்புகளுடன் கைகோத்து புத்தகக் காட்சிகளை நடத்தினார்கள். அடுத்த முயற்சியாக இப்போது சிறுவர்களுக்கான புத்தகக் காட்சிகளைத் தொடங்கியிருக்கின்றனர். புத்தகக் காட்சிகளின்போது சிறுவர்களுக்குச் சிறப்புத் தள்ளுபடியில் புத்தகங்கள் வழங்குவது, பரிசாகப் புத்தகங்கள் வழங்குவது, புரவலர்கள் உதவியுடன் இலவசமாகப் புத்தகங்கள் வழங்குவது, புத்தகங்கள் வாங்குவதற்கான தொகையைச் சேமிப்பதற்காக மாணவர்களுக்கு உண்டியல்கள் வழங்குவது, நடமாடும் புத்தகக் காட்சிகள், புத்தகப் பேரணிகள் நடத்துவது, பள்ளிகளுக்குச் சென்று புத்தகக் காட்சிகள் நடத்துவது என்று இந்த அமைப்புகளின் செயல்பாடுகள் தொடர்ந்து உற்சாகத்தை ஏற்படுத்துகின்றன.

முன்னதாக, கடந்த ஆகஸ்ட் 31 அன்று ‘ஒவ்வொரு குழந்தைக்கும் ஒரு நூலகம்’ இயக்கத்தை தமுஎகச அமைப்பும், பாரதி புத்தகாலயமும் இணைந்து தொடங்கின. தமிழகம் முழுவதும் பள்ளிகளை மையப்படுத்தி அக்டோபர் 2 முதல் நவம்பர் 14 வரை தமிழகம் முழுவதும் பள்ளிகளை மையப்படுத்தி 500 இடங்களில் புத்தகத் திருவிழாவை நடத்துவது, ஒரு லட்சம் குழந்தைகளை நோக்கிப் பயணத்தை மேற்கொள்வது என்று வெற்றிகரமாக இந்த இயக்கத்தை நடத்திவருகிறார்கள். இந்த இயக்கத்தின் முக்கியப் பலனாளிகள் நகரங்களின் விளிம்புநிலைச் சமூகங்களைச் சேர்ந்த குழந்தைகளும் நூலகங்கள், நூல் நிலையங்கள் வசதி இல்லாத கிராமத்துக் குழந்தைகளும்தான் என்பது முக்கியமானது.

முக்கியமான ஒரு காலகட்டத்தில் நடக்கும் மிக முக்கியமான ஒரு காரியம் இது. தமிழும் அறிவு வளமும் பெருகட்டும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x