

மகாபாரதக் கதையை எழுத்தாளர்கள் பலரும் மீள் புனைவாக்கம் செய்துள்ளனர். எண்ணற்ற கதாபாத்திரங்களும் கிளைக் கதைகளும் கொண்ட மாபெரும் இலக்கியப் படைப்பு அது. மலையாள எழுத்தாளர் எம்.டி.வாசுதேவன் நாயர், ‘இரண்டாமூழம்’ (இரண்டாம் இடம்) என்கிற பெயரில் எழுதியுள்ளார். எஸ்.எல்.பைரப்பா ‘பர்வா’ (பருவம்) என்கிற பெயரில் மீளாக்கம் செய்துள்ளார்.
தமிழ் எழுத்தாளர்கள் ஜெயமோகனும் எஸ்.ராமகிருஷ்ணனும் மகாபாரதத்தைத் தனிப் பார்வையில் புனைந்துள்ளனர். இந்த வரிசையில் கன்யூட்ராஜ் குந்தியை நாயகியாகக் கொண்டு மகாபாரதத்தைப் புனைந்துள்ளார்.
பாண்டவர்களின் தாய், பாண்டுவின் மனைவி என்பதைத் தாண்டி, குந்தி யார் என்பதை நூலில் ஆசிரியர் விவரித்துள்ளார். அவள் சூரசேனனின் மகளாக வண்ணத்துப்பூச்சியைப் பிடித்தோடிய காலத்தில் தொடங்கி பெரும் பாரதக் கதையில் அவளது பங்கை இந்நூல் சுவாரசியமாக விவரித்துச் செல்கிறது. - ஜெய்
குந்தியின் கதை (நாவல் வடிவில்)
கன்யூட்ராஜ்
நியூ செஞ்சுரி
புக் ஹவுஸ்
விலை: ரூ.985
தொடர்புக்கு: 044 26251968
மருத்துவர் வள்ளுவர்! - வான் புகழ் கொண்ட வள்ளுவம் பல கருத்துகளுக்கும் மேற்கோள் காட்டப்படும் நூல். அதனால்தான் அதை உலகப் பொதுமறை என்கிறோம். நூலாசிரியர் மருத்துவர் என்பதால் வள்ளுவரை ஒரு மருத்துவ வல்லுநராகப் பார்த்து இந்த நூலை எழுதியிருக்கிறார்.
‘மருந்தென வேண்டாவாம் யாக்கைக்கு அருந்தியது/ அற்றது போற்றி உணின்’ என்பது போன்ற குறள்களை மருந்து அதிகாரத்தில் வள்ளுவர் எழுதியிருக்கிறார். என்றாலும் மற்ற அதிகாரங்களிலும் மருத்துவம் பற்றியதான குறள்களை நூலாசிரியர் தேர்ந்து அடைந்துள்ளார்; அப்படியான குறள்களைச் சொல்லி அதற்கான விளக்கத்தை எளிய தமிழில் விவரித்துள்ளார். - விபின்
டாக்டர் வள்ளுவர்
டாக்டர் எஸ்.முருகுசுந்தரம்
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்
விலை: ரூ.100
தொடர்புக்கு: 99404 46650
அயல்மொழி நூலகம்: கொலையும்... விசாரணையும்... பஞ்சாபின் புகழ்பெற்ற தனி இசைப் பாடகரான சித்து மூஸ்வாலா பட்டப்பகலில் சுட்டுக் கொல்லப்பட்டார். பஞ்சாப் மாநிலத்தின் ரவுடிக் கும்பல் கலாச்சாரம்தான் இதன் பின்னாலுள்ள காரணம். லாரன்ஸ் பிஷ்னோய் என்கிற ஒரு ரவுடிதான் இந்தக் கொலைச் சம்பவத்தின் சூத்ரதாரி எனக் கண்டறியப்பட்டு விசாரணை நடைபெற்றுவருகிறது.
அகாலிதளக் கட்சி செயற்பாட்டளரான விக்கி மிதுகெரா கொலைக்குப் பழி தீர்க்கும் செயல் இது என பிஷ்னோய் கும்பல் தரப்பில் சொல்லப்பட்டது. மூஸ்வாலாவை முன்னிறுத்தி இந்தக் கொலையை விசாரிக்கும் வகையில் ஜூபிந்தர்ஜித் சிங் இந்த நூலை எழுதியுள்ளார். பஞ்சாப் ரவுடிக் கும்பல் கலாச்சாரத்தின் தீவிரத்தையும் பின்னணியையும் இந்த நூல் வழி அறிந்துகொள்ள முடிகிறது. - குமரன்
ஹூ கில்டு மூஸ்வாலா
(Who Killed Moosewala?)
ஜூபிந்தர்ஜித் சிங்வெஸ்ட்
லேண்ட் புக்ஸ்
விலை: ரூ.499
தலைமறைவு வாழ்க்கையின் சுவடுகள்: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர்களில் ஒருவர் பி.ஸ்ரீனிவாச ராவ். பி.எஸ்.ஆர்.என்று அழைக்கப்பட்ட அவர், 54 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்தார்; அதில் 19 ஆண்டுகளைக் கீழத் தஞ்சையில் விவசாய சங்கப் பணிகளுக்காகச் செலவிட்டார்.
1947 ஜனவரி முதல் ஆகஸ்ட் 15 வரையில் தலைமறைவு வாழ்க்கையில் இருந்த ஸ்ரீனிவாச ராவ், ‘சுந்தர்ராஜ்’ என்கிற புனைபெயரில் தன்னுடைய தோழர் சர்மாவுக்கு (சாகர்) எழுதிய கடிதங்கள் நூலாகத் தொகுக்கப்பட்டிருக்கின்றன. கம்யூனிஸ்ட் கட்சிக்கு ஏற்பட்ட இடர்களும் தலைமறைவாய்ச் சென்ற தோழர் எதிர்கொண்ட துயர்களும் பதிவாகியுள்ள இக்கடிதங்கள் பொது வாசகர்களுக்குமானவை. - அபி
தலைமறைவு வாழ்க்கையில் எனது அனுபவம்
பி.ஸ்ரீனிவாச ராவ்
வெளியீடு: பரிசல் புத்தக நிலையம், சென்னை.
தொடர்புக்கு: 9382853646
விலை: ரூ.150