

எழுத்தாளர் கு.அழகிரிசாமியின் நூற்றாண்டை ஒட்டி அவரது படைப்புகளின் விலையில்லாப் பதிப்பைக் கொண்டு வர, தன்னறம் நூல்வெளிப் பதிப்பகம் தீர்மானித்தது. அதன்படி இளம் வாசகர்களுக்குக் கு.அழகிரிசாமியை அறிமுகப்படுத்தும் விதமாகக் கட்டுரைகள், கதைகள், மொழிபெயர்ப்புகள், கடிதங்கள் ஆகியவற்றில் சிலவற்றைத் தொகுத்துத் தன்னறம் நூல்வெளி வெளியிட்டுள்ளது.
அழகிரிசாமியின் 11 கதைகள், 7 கட்டுரைகள், 14 சிறுவர் கதைகள், கடிதங்கள் உள்பட வாசகர்கள் அழகிரிசாமியின் ஆளுமையை அறிய இந்தத் தொகுப்பு ஒரு நல் அறிமுகம். தொகுப்பாசிரியர்: ராணிதிலக். விலையில்லாப் பதிப்பைப் பெறுவதற்கான தொடர்பு எண்: 9843870059.
இலக்கிய வீதி இனியவன் மறைவு: லட்சுமிபதி என்கிற இயற்பெயர் கொண்ட இனியவன் (81) கடந்த வாரம் சென்னையில் காலமானார். ‘இலக்கிய வீதி’ என்கிற அமைப்பை 1977இல் தொடங்கி நடத்திவந்தார். இதன் வழி இலக்கியக் கூட்டங்கள், புத்தக வெளியீடுகள் செய்துவந்தார். சென்னை கம்பன் கழகத்தின் செயலராக இருந்தவர். சிறுகதைகள், நாவல்கள் எனப் பல வகையில் இலக்கியப் பங்களிப்புச் செய்தவர். எழுத்தாளர்கள் பலருக்கும் மேடை அமைத்துத் தந்தவர் என்கிற இவரது பண்புக்காக இன்றும் இவர் போற்றப்படுகிறார்.
தூரன் விருது: விஷ்ணுபுரம் அறக்கட்டளை வழங்கும் தூரன் விருது, ஆய்வாளர் மு.இளங்கோவனுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. தூரன் சிறப்பு விருது ஆய்வாளரும் கவிஞருமான எஸ்.ஜே.சிவசங்கருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. விருது விழா ஈரோட்டில் ஆகஸ்ட் மாதம் நடைபெறவுள்ளது.