

புக்கர் விருதுபெற்ற இந்தி எழுத்தாளர் கீதாஞ்சலி எழுதிய நாவல் இது. புகழ்பெற்ற பல்கலைக்கழகம் ஒன்றின் உணவகத்தில் குண்டுவெடிப்பு நடக்கிறது. அதில் இளைஞர்கள் 19 பேர் உயிரிழக்கின்றனர். அவர்களில் ஒருவரான 18 வயதுப் பையனின் சிதறிய உடல் பாகங்களை அவனுடைய அம்மா அடையாளம் காண்கிறார்.
அதிர்ஷ்டவசமாக மூன்று வயதுச் சிறுவன் ஒருவன் உயிர் பிழைக்கிறான். அவனை அழைத்துச் செல்ல யாரும் வராததால் 18 வயதுப் பையனின் அம்மா, அவனைத் தன்னுடன் அழைத்துச் செல்கிறாள். இந்த மூன்று வயதுச் சிறுவன், 18 வயதுப் பையனின் வெற்றிடத்தை நிரப்பச் செல்கிறான். 18 வயதுப் பையனின் அறை, உடை என எல்லாவற்றையும் எடுத்துக்கொள்கிறான்.
பிறந்தநாளைக்கூட இந்தச் சிறுவன் எடுத்துக்கொள்கிறான். 18 வயதுப் பையனின் அப்பாவும் அம்மாவும் உயிரிழந்த தங்கள் மகனுக்கான மாற்றாக இவனைப் பாவிக்கிறார்கள். 3 வயதுச் சிறுவன் வளர வளர அவனுக்குத் தான் யார் என்ற அடையாளச் சிக்கல் ஏற்படுகிறது. அதை கீதாஞ்சலி உள்ளும் புறமுமாக இந்த நாவலில் சித்தரித்துள்ளார். - ஜெய்
தி எம்ட்டி ஸ்பேஸ் (The Empty Space)
கீதாஞ்சலி ஸ்ரீ(ஆங்கிலத்தில்: நிவேதிதா மேனன்)
பென்குயின்
ராண்டம் ஹவுஸ்
விலை: ரூ.599
சிற்றிதழ் அறிமுகம்: பன்முக இதழ்: மே 2023இல் இருந்து அரும்பத் தொடங்கியிருக்கும் இதழ் இது. இலக்கிய இதழ் என்கிற அடையாளத்துடன் மலர்ந்திருந்தாலும் காத்திரமான சமகால அரசியல் கட்டுரைகளின் தொகுப்பாக இந்த இதழ் இருக்கிறது. ‘மக்களை அதிகாரப்படுத்தும் இறையாண்மை மிக்க அரசு தேவை’ என்கிற த.வெ.நடராசனின் கட்டுரையும் புர்கினா பாசோ முன்னாள் அதிபரும் மார்க்சியவாதியுமான தாமஸ் சங்கரா குறித்த அறிமுகமும் குறிப்பிடத்தகுந்தவை.
ரஷ்ய-உக்ரைன் போர் குறித்த சூழலை விரிவாகத் தன் கட்டுரையில் எழுதியுள்ளார் தே.நா.மதன்மோகன். லத்தீன் அமெரிக்க இலக்கியம் குறித்து மொழிபெயர்ப்பாளர் அமரந்தாவின் கட்டுரையும் இதழுக்குச் சிறப்பு சேர்க்கிறது. பேரா. க.பஞ்சாங்கத்தின் கட்டுரை, சிலப்பதிகாரக் கதையின் வழக்குரை காதையை இன்றைய காலகட்டத்தில் வைத்து அமைப்புகளைச் சமூக விமர்சனம் செய்கிறது.- விபின்
வையம் (மாத இதழ்: தனிச்சுற்றுக்கு மட்டும்)
ஆசிரியர்: சந்திரசேகரன்
தொடர்புக்கு: 9715146652