

புனைவு - அபுனைவு இரண்டும் சந்தித்துக்கொள்ளும் புள்ளியில் மையங்கொண்டிருக்கிறது சுகாவின் எழுத்து. முதல் வாசிப்பில் ஒரு கட்டுரைக்கான தரவுகளோடு நம்மைக் கவனப்படுத்தும் சுகாவின் எழுத்து நடை, மறுவாசிப்பில் ஒரு கதைக்கான கூறுகளோடு நம் மனதில் அப்படியே தங்கிவிடுகிறது.
கோவிட் காலத்தில் உலகமே வீடடங்கிக் கிடந்தபோது, சுகாவின் எழுத்து மனம், திருநெல்வேலி வீதிகளில் அலைந்து திரிந்து, வாசகர்களுக்கான எழுத்து நல்விருந்தைப் படைத்திருக்கிறது. ‘ஆங்காரம்’ தொடங்கி, ‘இவளே…’ வரையிலான 22 குறுங்கட்டுரைகள் உள்ளன.
‘ஒடம்பைக் கொறைக்கலாம்னு இருக்கேன் சார்’ என்று நண்பரும் திரைப்பட ஒலிப்பதிவாளருமான மனோஜ் சொல்வதாகத் தொடங்கும் ‘கறுப்பு கவுனியும் கருங்குறுவையும்’ கட்டுரையில், நெய்யில் முக்கித் தருகிற செளகார்பேட்டை தோசைக் கடை, போரூர் நல்லெண்ணெய் தோசைக் கடை, திருச்சி சங்கீதா ஹோட்டலில் கிடைக்கும் வெஜிடபிள் ஆம்லேட், டிங்கிரி டோல்மா தோசை, குன்றக்குடி புளியோதரை, ஸ்ரீரங்கம் பிரசாதம் என வாசிக்கையில் நமக்கு வயிறு நிறைந்து, இரண்டு கிலோ எடை கூடியது போலான உணர்வு உண்டாகிறது.
‘பிரதம மந்திரி கை தட்டச் சொல்லும் வரை ஒன்றும் தெரியவில்லை. அடுத்தடுத்த வாரங்களில் மெல்ல நிலைமை மாறி, சகஜநிலைக்குத் திரும்பி விடலாம் என்ற நம்பிக்கை இருந்தது. விளக்கேற்றிய வாரத்தில் எங்கள் தெருவில் ஜனநடமாட்டம் இயல்பாக இருந்தது. காய்கறிக்காரர் முகக்கவசம் அணியாமல் கத்திரிக்காயும் முட்டைக்கோஸும் விற்றார்.
சைக்கிளின் பின்னால் பெரிய எவர்சில்வர் கேனைக் கட்டி டீ விற்றார் மற்றொருவர்’ என்று ‘கோவிட் காலத்தை’ப் பதிவுசெய்திருக்கும் சுகாவின் பார்வை, ஜெயமோகன் எழுதிய தினம் ஒரு கதைக்குள் நுழைகிறது. அப்படியே பிறந்த நாள் வாழ்த்துச் சொல்ல, இளையராஜாவைச் சென்று பார்க்கிறது. நடிகர் இளவரசு உடன் சரவண பவனில் காப்பி குடிக்கிறது. பாலுமகேந்திராவின் நினைவலைகள் அவரது மாணவனான எழுத்தாளருக்குள் பல கட்டுரைகளினூடாக வந்துவந்து போகிறது.
குற்றாலத்தில் சாரல் விழுந்துகொண்டிருந்த பொழுதில் நடைபெற்ற ‘பாபநாசம்’ படப்பிடிப்பைப் பற்றிச் சொல்லும்போதே, கமல் ஹாசனின் சிறப்புகளையும் சொல்லி, ‘திருநெல்வேலி பகுதிகளில் அண்ணாச்சி என்ற சொல் அண்ணனை மட்டும் குறிக்காது. அங்கு அண்ணாச்சி என்றால் அன்பு, மதிப்பு, தோழமை, பிரியம், பாசம்.
இவை அனைத்தும் எனக்கு கமல் ஹாசன் அவர்களிடம் இருக்கிறது. அதனால்தான் அவர் எனக்கு கமல் அண்ணாச்சி’ என்கிறார். எதையும் நீட்டி முழக்காமல் சுருக்கமாகவும் சுவையாகவும் எழுதும் கலைக்கு சுகாவின் இந்தக் கட்டுரைகள் ஒரு நல்ல உதாரணம் - மு.முருகேஷ்
திருநெல்விருந்து
சுகா
சுவாசம் பதிப்பகம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 81480 66645