

கல்வெட்டு, தொல்லியல் ஆகிய துறைகளில் ஆய்வாளர்களின் தேடல், அவர்களின் ஆய்வுத் துணிபு ஆகியவற்றின் வழிதான் பழந்தமிழர்களின் வாழ்க்கையையும் வரலாற்றையும் சிறப்புகளையும் இன்று நாம் அறிந்துகொள்கிறோம்.
ஆலங்குடியிலும் ராமநாதபுரத்திலும் கிடைத்த நுண்கற்காலக் கருவிகள், ராமநாதபுரத்துக் கல்வெட்டுகள் மூலம் வணிகம், சேதுபதி செப்பேடுகளின் மூலம் முத்துக்குளித்தல், பல்லவர் கால மூத்ததேவி சிற்பம், மரக்கால்கள், நங்கூரங்கள், மரக்காயர்கள் என இந்த நூலில் உள்ள 12 கட்டுரைகள் சுவாரசியமாக எழுதப்பட்டுள்ளன.
படங்களும் சேர்க்கப்பட்டுள்ளது நூலுக்குச் சிறப்பு. தமிழ்ப் பல்கலைக்கழக அருங்காட்சியகத் தலைவராக இருந்தபோது, அங்குள்ள பொருள்களை உற்றுநோக்கியதன் மூலம் இந்த நூலின் சில பகுதிகளை எழுத ஆர்வம் ஏற்பட்டதாகச் சொல்லியிருக்கிறார் நூலாசிரியர் ஆ.ராஜா. - சுஜாதா
பழந்தமிழர் வாழ்வியலும் வரலாறும்
முனைவர் ஆ.ராஜா
காவ்யா பதிப்பகம்
விலை: ரூ.160
தொடர்புக்கு: 9840480232
ஞானத்தின் வழி: இப்னுல் அறபி எனும் சூஃபி ஞானி எழுதிய ‘பிரபஞ்ச மரமும் நான்கு பறவைகளும்’ என்னும் நூலே இந்த நாவலுக்கு அடிப்படையாக உள்ளது. யாசீன் என்னும் 30 வயது ஊமன் செவில் அருங்காட்சியகத்தில் 28 நாள்களுக்காகப் பணியமர்த்தப்படுகிறான்.
ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் எழுதப்பட்ட சில கடிதங்களை மொழிபெயர்ப்பது அவன் வேலை. அந்த 28 நாள்களில் இப்னுல் அறபியின் எழுத்துகள் யாசீனை எப்படி மாற்றுகின்றன; உண்மையான ஞானத்தை அவனுக்கு எப்படிப் போதித்தன என்பதை இந்நாவல் உயிரோட்டத்துடன் பதிவுசெய்துள்ளது. - ஹுசைன்
அஹில்லா: நிலவின் 28 தோற்றங்கள்
முஅதஸ் மத்தர் (தமிழில்: ரமீஸ் பிலாலி)
சீர்மை வெளியீடு
விலை: ரூ.220
தொடர்புக்கு: 80721 23326