

வட கன்னடப் பகுதியில் ஆட்சியாளர்களுக்கு அள்ளித்தரும் வள்ளலாக மிளகு இருந்திருக்கிறது. பொது ஆண்டு 1590களில் சாளுவ வம்சத்து ராணி சென்னபைரா தேவி மிளகு உற்பத்தியில் மிகுந்த கவனம் செலுத்தி, போர்த்துக்கீசியர்களுடன் வணிகம் செய்வதில் கொடிக்கட்டிப் பறந்திருக்கிறார்; திருமணமே செய்துகொள்ளாமல், கிட்டத்தட்ட 54 ஆண்டுகள் தொடர்ச்சியாக ஆட்சி செய்திருக்கிறார். அவரைப் பற்றிய தகவல்கள் வரலாற்றில் அதிகம் பதியப்படவில்லை.
இலக்கியங்களில் ஏதோ ஒரு சில வரிகளில் மட்டும் குறிப்புகள் கிடைக்கின்றன. இப்படியான வெற்றிடம்தான் படைப்பாளிகளுக்கு ஈர்ப்பானது. ஆங்காங்கே கிடைக்கின்ற புள்ளிகளைத் தங்களின் புனைவுகள் வழியே இணைத்துக்கொண்டே இருப்பார்கள். அப்படியான ஒரு ஆக்கம்தான் இரா.முருகனின் ‘மிளகு’ நாவல்.
அறிவியலையும் வரலாற்றையும் இணைத்து ஒரே நேர்க்கோட்டில் பயணிக்கச் செய்யும் வித்தை முருகனுக்குக் கைவந்த கலை. கூடவே, புன்முறுவல் பூக்கச்செய்யும் பகடியும் இந்த நாவலுக்குச் சுவாரசியம் சேர்க்கிறது. வாசிக்கும்போது உங்களை அறியாமல் புன்னகைத்துக்கொண்டே இருப்பீர்கள்.
பரமேஸ்வரன் என்கிற பரமனின் கதாபாத்திரம் தமிழ் இலக்கிய உலகுக்குப் புதிதானது. எழுபது வயதில் விமானத்தில் பயணிக்கையில் நாக்பூரில் காணாமல் போய்விடுகிறார். நாற்பது வருடங்கள் அவர் எங்கிருக்கிறார் என்று யாருக்கும் தெரியவில்லை. 110 வயதில் மறுபடி திரும்பி வந்து, மகனுடன் வாழ்கிறார். காணாமல் போன நாற்பது வருடங்களில் காலக்குமிழில் பின்னோக்கி நானூறு வருடங்கள் பயணித்து, சென்னபைரா தேவிவாழ்ந்த கெருஸப்பாவுக்குச் சென்றுவிடுகிறார்.
நிகழ்காலத்தில் வாழ்ந்த ஒருவர் இறந்த காலத்து மனிதர்களுடன் உரையாடினால் எப்படி இருக்கும்? சமகாலத்து நிகழ்வுகளைப் பற்றி அவர்கள் எப்படி உள்வாங்கிக் கொள்வார்கள்? அதேபோல கொங்கணப் பிரதேசத்தின் கெருஸப்பாவில் போர்த்துக்கீசியர் வருகை, மிளகுக்காக இங்குள்ள அரசர்களிடம் கெஞ்சித் தண்டனிட்ட சம்பவங்களை இன்றைய தலைமுறையினர் எப்படி ஏற்றுக்கொள்வார்கள்? ஆனால், இந்த நாவலில் பரமன் என்கிற கதாபாத்திரம் மூலம் அதைச் சாத்தியமாக்குகிறார் முருகன்.
போர்த்துக்கீசிய அரசப் பிரதிநிதி பெத்ரா கிட்டத்தட்ட ஒரு அடிமையைப் போல சென்னபைரா ராணியின் கேலியையும் கிண்டல்களையும் பொறுத்துக்கொண்டு மண்டியிடுகிறார். ஐரோப்பிய முறைப்படி தாழ்பணிந்து வணங்கி, ராணியின் கரங்களை மென்மையாகப் பற்றி அவர் முத்தமிட்டபோது, ராணியின் பணிப்பெண் அவசரமாக வந்து, ரோஜா அத்தர் தெளித்த பட்டுத்துணியால் மகாராணியின் கரங்களைத் துடைக்கும்போது அவமானத்தில் எரிச்சலடைகிறார் பெத்ரா. ஒரு காலத்தில் வெள்ளைக்காரர்கள் இந்திய மன்னர்களை இழிபிறவிகளாக, தீண்டத்தகாதவர்களாக எட்டி நிறுத்திய சம்பவங்கள் உண்டு. ஆனால், 16ஆம் நூற்றாண்டில் அதுவும் ஒரு பெண்ணரசி ஐரோப்பியர்களை விரலசைவில் ஆடவைத்திருக்கிறார்.
இசை பற்றிய விவரணைகளில் முருகனின் ஆழ்ந்த ஈடுபாடு வியக்க வைக்கிறது. அதுபோலவே மிளகை மையப்படுத்திய நாவல் என்பதால், உணவு பற்றிய தகவல்கள் நாவல் நெடுக வந்துகொண்டே இருக்கின்றன. உத்தரகன்னடப் பிரதேசத்தின் நிலவியல் வர்ணனை, மகாராணி சமண மார்க்கத்தை ஏற்றவள் என்பதால், சமணம் குறித்த தகவல்கள், சாளுவ வம்சத்தின் வரலாறு, ஐரோப்பியர்களின் கலாச்சாரம் எனப் பரந்துபட்ட தளங்களில் பாய்கிறது நாவல். மிர்ஜான் கோட்டை, அம்பலப்புழை, ஹொன்னாவர், காந்தஹார், கெருஸப்பா போன்ற இடங்களையும், மனிதர்களைப் பற்றியும் அவரது கூர்ந்த அவதானிப்பு நாவலுக்குப் பன்முகத்தன்மையை அளிக்கிறது.
பணகுடி அரசன் வீர நரசிம்மர் சென்னபைராவின் பால்ய சிநேகிதன். மதுப் பழக்கம் காரணமாகச் சீரழிந்தவன். அவனது ஆட்சிக்கு உள்பட்ட பகுதிகளில் பெரும்பாலானவற்றை அவனது மனைவி அப்பக்கா ராணி, தன் பொறுப்பில் எடுத்துக்கொண்டு, அவனை விட்டுப் பிரிந்து தனியாட்சி நடத்துகிறாள். வீரநரசிம்மர் வசம் பத்துக் கிராமங்கள் மட்டும்தான் இருக்கின்றன.
வருமானம் இல்லை. பணியாட்கள், வீரர்கள், பல்லக்கு, தேர் என எதுவும் இல்லை. தன் தோழி சென்னபைராவைச் சந்திக்க வருகிறான். எதற்காக? ஒரு நூறு வராகன் கைமாற்று வாங்குவதற்காக. வந்தவனுக்குப் பணம் தந்துவிட்டு, “எப்படித் திரும்பிப் போவாய்?” என்று கேட்கிறாள் மகாராணி. “தெருவில் போய் நின்றால் அந்த வழியாக வருகிறவர்கள் தங்கள் குதிரை வண்டியில் ஏற்றிக்கொள்ள மாட்டார்களா? அடுத்த நாள் பணகுடி அரசனை என் வண்டியில் ஏற்றிக்கொண்டு போனேன்” என்று பெருமையாகச் சொல்லிக்கொள்ள மாட்டார்களா என்று பரிதாபமாகக் கேட்கிறான் வீரநரசிம்மர்.
இப்படி ஒரு காட்சியை ஒரு சரித்திர நாவலில் வாசித்திருக்கவில்லை. அவன் லிஃப்ட் கேட்கும் காட்சி நாவலில் இல்லை. ஆனால், மனம் நம்மையறியாமல் கற்பனை செய்ய ஆரம்பித்துவிடுகிறது. தலையில் கிரீடம், கவசங்கள், இடுப்பில் உடைவாள் ஆகியவற்றுடன் போகிற வண்டிகளை நிறுத்துகிற காட்சி மனதில் நிழலாடுகிறது. இடைப்பட்ட வரிகளில் வாசிப்பது என்று சொல்வார்கள். அதுபோல இடைப்பட்ட காட்சிகளில் கற்பனை செய்ய வைக்கிறது.
எழுத்தாளர்கள் பிரபஞ்சனும் ஜெயமோகனும் எஸ்.ராமகிருஷ்ணனும் வரலாற்றை ஒரு வகையான களியாட்ட மாயையில் இருந்து மீட்டெடுத்து வந்தார்கள். ஆனால், இரா.முருகன் ‘மிளகு’ நாவல் வழி அந்த மாயவலையின் சிக்கலான பின்னல்களைத் தனது கலகலப்பான மொழியால் மெல்ல விடுவித்திருக்கிறார்.
மிளகு (நாவல்)
இரா.முருகன்
எழுத்துப் பிரசுரம், சென்னை.
விலை: ரூ.1,400
தொடர்புக்கு: 8925061999