Published : 26 Jun 2023 06:38 AM
Last Updated : 26 Jun 2023 06:38 AM

பன்மைத்துவத்தின் அடையாளம் இந்தியா: நூல் அறிமுக விழாவில் எஸ்.ராமகிருஷ்ணன் கருத்து

திருச்சியில் நடந்த நிகழ்ச்சியில், `ஒரு பண்பாட்டின் பயணம் சிந்து முதல் வைகை வரை' நூலை அறிமுகம் செய்த எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன், கவிஞர் நந்தலாலா, நூலாசிரியர் ஆர்.பாலகிருஷ்ணன் உள்ளிட்டோர்.

திருச்சி: களம் இலக்கிய அமைப்பு சார்பில் `ஒரு பண்பாட்டின் பயணம் சிந்து முதல் வைகை வரை' எனும் நூல் அறிமுக விழா திருச்சியில் நேற்று முன்தினம் நடைபெற்றது. விழாவுக்கு, வி.செல்வம் தலைமை வகித்தார். கே.பாலசுப்பிரமணியன் வரவேற்றார். ரோஜா முத்தையா நூலக இயக்குநர் க.சுந்தர் பாராட்டுரை வழங்கினார்.

நூல் குறித்து கவிஞர் நந்தலாலா பேசியது: எளிய நடையில் அமைந்துள்ள இந்த நூல் நமக்குள் புதிய சிந்தனையை உருவாக்குகிறது. சிந்துவெளி நாகரிகத்தின் அடையாளமான திமில் கொண்ட காளைபோல இந்நூலின் நடை கம்பீரமாக உள்ளது. சங்ககால தமிழர்களின் மூதாதையர்களே சிந்து சமவெளி மக்கள் என்பதை இந்த நூல் பல்வேறு சான்றுகளுடன் கூறுகிறது. இந்த நூலின் மூலம் தமிழ் என்பது வெறும் மொழி அல்ல. அது ஒரு பண்பாட்டின் அடையாளம் என புரிந்துகொள்ள முடிகிறது என கூறினார்.

எழுத்தாளர் எஸ்.ராமகிருஷ்ணன் பேசியது: இந்திய வரலாற்றை மாற்றி எழுத முயற்சிக்கும் நபர்களுக்கு பதில் கூறும்வகையில் அமைந்துள்ளது இந்நூல். சிந்து சமவெளி நாகரிகம் குறித்து பல்வேறு சான்றுகள், தரவுகள் உள்ளன. ஆனால், தொன்மையான தமிழ் நாகரிகம் குறித்து நம்மிடம் போதுமான சான்றாவணங்கள் இல்லை. மாறாக, தமிழ் பண்பாட்டின் தொன்மைக்கு சான்றாக சங்க இலக்கியங்கள் உள்ளன. சங்க இலக்கியங்கள் ஒரு வரலாற்று ஆவணம் என்பதை நூலாசிரியர் தெளிவான தரவுகளுடன் நிறுவுகிறார்.

சிந்து சமவெளி நாகரிகத்துக்கு உட்பட்ட பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் கொற்கை, வஞ்சி, தொண்டி எனும் ஊர்கள் உள்ளன. தமிழ்நாட்டிலும் இதே பெயரில் ஊர்கள் உள்ளன. ஒரே பெயரிலான ஊர்கள், நிலப்பரப்பைகொண்டு அமைந்த ஒரே மாதிரியான தெருக்கள், கருப்பு, சிவப்பு வண்ணத்தில் கண்டெடுக்கப்பட்ட பானை ஓடுகள் உட்பட பல்வேறு சான்றுகளுடன் சிந்துவெளி நாகரிகமும், பழங்கால தமிழ் சமூகமும் ஒன்றே என சுட்டிக்காட்டுகிறார் நூலாசிரியர். இந்தியா என்பது பன்மைத்துவத்தின் அடையாளம் என்பதை பல்வேறு சான்றுகளுடன் விவரிக்கிறது இந்நூல் என்றார்.

ஏற்புரை ஆற்றிய நூலாசிரியர் ஆர்.பாலகிருஷ்ணன் பேசியபோது, “இந்த புத்தகத்தை எழுதுவதற்காக நான் இந்தியா முழுவதும் மட்டுமில்லாமல் பல்வேறு நாடுகளுக்கும் மாபெரும் பயணத்தை மேற்கொண்டேன். தமிழ் ஒரு சமூகம் மட்டுமே பேசிய மொழி அல்ல. அது ஒரு நாகரிக பண்பாட்டின் மொழி. சிந்து சமவெளி நாகரிகத்தில் கண்டெடுக்கப்பட்ட சான்றாவணங்கள் ஹார்ட்வேர் என்றால், நமது சங்க இலக்கியங்கள் தமிழ் நாகரிகம் குறித்து அறிய உதவும் சாஃட்வேர்.

சங்ககால தமிழ் இலக்கியங்கள் பண்டைய கால தமிழ் சமூகத்தின் நாகரிகத்தை, வரலாற்றை அறிய உதவும் பொக்கிஷங்கள். இந்த நூலை எழுதி முடித்ததும் என் மனம் நிறைவடைந்திருக்கிறது. இந்நூல் தன்னைத்தானே எழுதி கொண்டது. இந்நூல் உருவாக நான் ஒரு கருவியாக மட்டுமே இருந்தேன்” என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x