

கோவில்பட்டி: கோவில்பட்டி கரிசல் இலக்கியத்தின் தலைமையகமாக திகழ்கிறது. இங்கு கரிசல் எழுத்தாளர்கள் கு.அழகிரிசாமி, கி.ரா., பூமணி, சோ.தர்மன் ஆகியோர் சாகித்ய அகாடமி விருது பெற்றுள்ளனர். எழுத்தாளர் சபரிநாதன் யுவபுரஸ்கார் விருது பெற்றுள்ளார்.
தற்போது எழுத்தாளர் க.உதயசங்கருக்கு ‘ஆதனின் பொம்மை' என்ற இளையோர் நாவலுக்காக மத்திய அரசின் சாகித்ய பால புரஸ்கார் விருதுகிடைத்துள்ளது. இவர் தமுஎகச-வின் மாநில செயற்குழு உறுப்பினராகவும், தமிழ்நாடு சிறார் எழுத்தாளர் சங்க மாநில தலைவராகவும் செயல்பட்டு வருகிறார்.
எழுத்தாளர் க.உதயசங்கர் கூறியதாவது: ‘ஆதனின் பொம்மை' என்ற நாவலின் கதைக்களமே கீழடி தான். கீழடி ஆய்வுமுடிவுகள் வெளிவந்த போது உண்மையிலேயே தமிழகத்தில் ஒரு பெரிய அதிர்வை ஏற்படுத்தியது. அந்த அகழாய்வை முடக்குவதற்கான முயற்சிகளும் கூட நடந்தன. அப்போது சு.வெங்கடேசன் எம்.பி. ஏராளமான விஷயங்களை முன்வைத்து அந்த அகழாய்வை தொடரச் செய்தார். அந்த அகழ்வாய்வில் கிடைத்த பொருட்கள் தமிழர்களின் தொல்பழமையை பேசும் பொருட்களாக இருந்தன. அந்த தொல்பழமை என்பது சிந்து சமவெளி நாகரிகத்துடன் தொடர்புடையதாக இருந்தது என்கிற ஆர்.பாலகிருஷ்ணனின் ஆய்வும் புதிய வெளிச்சத்தை அளித்தது.
இந்த வரலாற்றை இளையோர்களிடம் கொண்டு செல்ல வேண்டும். குழந்தைகளிடம் இது பற்றி அறிமுகப்படுத்த வேண்டும் என்பதற்காக நூல்களை வாசித்து கீழடி சென்று நேரில் பார்த்து ஓராண்டு காலம் உழைத்து இந்த நாவலை உருவாக்கினேன்.
சுமார் 43 ஆண்டுகளாக எழுதிக்கொண்டிருக்கிறேன். இப்போதுதான் அரசாங்கத்தின் விருது கிடைத்துள்ளது என்பதால் மகிழ்ச்சி அடைகிறேன். இந்தவிருதை கோவில்பட்டி மண்ணுக்கே சமர்ப்பணம் செய்கிறேன். புதிய எழுத்தாளர்களை உருவாக்க கூடிய மண்ணாக கோவில்பட்டி உள்ளது. கோவில்பட்டியில் கரிசல் வட்டார இலக்கிய ஆய்வு மையம் நிறுவ வேண்டும். அந்த மையத்தின் வழியாக புதிய படைப்பாளர்களை உருவாக்குவதற்கான பயிலரங்குகளையும், ஆய்வாளர்களை உருவாக்குவதற்கான நிகழ்வுகளையும் முன்னெடுக்க வேண்டும். அது தென் மாவட்டத்துக்கான கலாச்சார மையமாக திகழ வேண்டும். அதற்கான ஏற்பாடுகளை அரசு செய்ய வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.