Published : 22 Jan 2014 12:32 PM
Last Updated : 22 Jan 2014 12:32 PM

அண்ணல் அம்பேத்கர் அரங்கு

பெரும்பாலான புத்தக நிலையங்களில் அம்பேத்கருடைய புத்தகங்களையோ அவரைப் பற்றிய புத்தகங்களையோ தேடுவோருக்கு ஏமாற்றம்தான் மிஞ்சும். கிட்டத்தட்ட ஆய்வு மாணவர்களுக்கும் தலித் சிந்தனையாளர்களுக்கும் மட்டும் உரியவராக அம்பேத்கர் ஆக்கப்பட்டிருந்த நிலை தற்போது மாறிவருகிறது.

காந்தியைப் போலவே அம்பேத்கரும் நிறைய எழுதியிருக்கிறார். அவரைப் பற்றியும் நிறைய புத்தகங்கள் எழுதப்பட்டிருக்கின்றன. அப்படிப்பட்ட புத்தகங்களை மலிவான விலையில் மக்களிடம் கொண்டுசேர்க்கும் பணியில் ஈடுபட்டுவருகிறது ‘அம்பேத்கர் ஃபவுண்டேஷன்’. மத்திய அரசின் சமூக நீதி, அதிகாரமளித்தல் துறையின் கீழ் செயல்படும் வெளியீட்டுப் பிரிவு இது (அரங்கு எண்- 618).

அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு பற்றிய ஏராளமான புத்தகங்கள் இங்கே கிடைக்கின்றன. இவற்றில் மிகவும் முக்கியமானது ‘டாக்டர் பாபாசாகேப் அம்பேத்கர்’ என்ற புத்தகம். 37 தொகுதிகளாக வெளிவந்திருக்கும் இந்தப் புத்தகத்தில் அம்பேத்கரின் வாழ்க்கை வரலாறு, அரசியலமைப்புச் சட்டம் உருவான விதம், அம்பேத்கரின் பங்களிப்பு உள்பட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த பல தகவல்கள் இடம்பெற்றிருக்கின்றன.

மத்திய அரசின் வெளியீட்டுப் பிரிவு என்பதால் இந்தப் புத்தகத்தின் விலை மிகவும் குறைவு. சுமார் 400 முதல் 500 பக்கங்கள் கொண்ட இந்தத் தொகுதிகள் ஒவ்வொன்றும் ரூ.40-க்குக் கிடைக்கின்றன. விட்டுவிடவே கூடாத புத்தகம் இது. இதுதவிர, இலக்கியம், சங்க இலக்கியம், உலகத் தலைவர்கள், அரசியல் சட்டம் தொடர்பான பிற நூல்களும் இந்தப் அரங்கில் உள்ளன. அம்பேத்கரை அறிந்துகொள்ள வாருங்கள் இந்த அரங்குக்கு.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x