

ஒருசில ஆண்டுகளுக்கு முன்பாக ஆய்வு மாணவி ஒருவர் தனது முனைவர் பட்ட ஆய்வுக்காகப் பேராசிரியர் கோ. கேசவனின் (1946-1998) நூல்களை எடுத்துக்கொள்ளப்போவதாகத் தெரிவித்ததுடன், கேசவன் எழுதிய நூல்களைத் தேடத் தொடங்கினார். தெரிந்த நண்பர்கள், ஆய்வாளர்கள், விரிவுரையாளர்கள் என நாலாபுறமும் சென்று விசாரித்தும் அவருக்குக் கிடைத்ததோ கேசவன் எழுதிய 33 நூல்களில் வெகுசில நூல்கள் மட்டுமே.
தமிழகத்தின் எழுத்தாளர்களுக்கும் ஆய்வாளர்களுக்கும் இது ஒரு எச்சரிக்கை. தனது வாழ்நாள் முழுவதும் தான் பார்த்துவந்த ஆசிரியப் பணிக்கிடையே கடும் உழைப்பைச் செலுத்தி கேசவன் எழுதிக் குவித்த நூல் களுக்கே இந்த நிலைமை என்றால் என்ன சொல்வது?
திராவிட அரசியல் குறித்த கோ. கேசவனின் ஆய்வுகள் திராவிட இயக்கங்களுக்கு உவப்பானதாக இல்லாதிருக்கலாம். ஆனால், அவையெல்லாம் தேடிச் சேகரித்த தரவுகளின் அடிப்படையிலானவை. கேசவன் போன்றோரின் நூல்களை நாட்டுடைமை ஆக்கவில்லையென்றாலும் பரவாயில்லை. குறைந்தபட்சம் அரசு நூலகங்களிலாவது அவற்றைக் காப்பாற்றி வைத்திருக்க வேண்டும். அவரது ஆய்வு நூல்களைத் தேடிச் சென்ற அந்த பட்ட ஆய்வு மாணவி இறுதியில் மிகுந்த ஏமாற்றத்துடன் ஆய்வைக் கைவிட நேர்ந்தது பேரிழப்பு அல்லவா! இத்தனைக்கும் கோ.கேசவன் மறைந்து 20 ஆண்டுகள்தான் ஆகின்றன!
கணினியும் இணையமும் புழக்கத்தில் இல்லாத காலத்தில் தனிமனிதராக அவர் தேடிச் சேகரித்த தரவுகள் வியப்பூட்டக்கூடியவை. அவரது கறாரான விமர்சனங்கள், சமரசமற்ற ஆய்வு முடிவுகள் அவருக்கு எதிரிகளைத் தேடித்தந்ததைப் போலவே நண்பர்களையும் பெற்றுத்தந்திருந்தன. கேசவனின் எழுத்துகளை மிகக் கடுமையாக விமர்சனத்துக்கு உள்ளாக்கும் எஸ்.வி. ராஜதுரை, கோவை ஞானி போன்றோரைத் தனிப்பட்ட முறையில் தமிழ்ச் சமூகத்தின் அறிவுஜீவிகளாக மதிப்பதற்கு கேசவன் தவறவில்லை.
கேசவன், தொடக்கத்தில் திமுக அனுதாபியாகவும், பின்னர் இடதுசாரிகளிடமும், மா.லெ. குழுவிலுமாகத் தன்னை அடையாளப்படுத்திக்கொண்டாலும் அவரது ஆய்வுகள் அவரது அரசியல் சார்பை எதிரொலிப்பதாக இல்லை. இன்னும் சொல்லப்போனால் அவரது ஆய்வுகள் அந்தச் சார்புகளுக்கு எதிரானதாகவே இருந்தன.
படைப்பிலக்கியத்தில் பாரதி தொடங்கி ஆத்மாநாம் வரை, ஆளுமைகளில் பெரியார் தொடங்கி அம்பேத்கர், சிங்காரவேலர், திராவிட இயக்கத் தலைவர்கள் வரை, அரசியலில் திராவிட இயக்கம் தொடங்கி இடதுசாரி அமைப்புகள் வரை அவரது ஆய்வுக்கும் விமர்சனப் போக்குக்கும் எதுவும் எவரும் தப்பவில்லை. மொழி குறித்தும், தமிழ் மொழி கடந்து வந்த அரசியல், தமிழ்வழிக் கல்வி பற்றியும், சமயம் சாராத தமிழ் குறித்தும் என்று அவரது பல ஆய்வுகளும் நூல்களும் சர்ச்சைக்குள்ளாயின.
மார்க்ஸிய ஆய்வுகள் வழி நின்று வரலாற்று இயங்கியல் கண்ணோட்டத்துடன் அவர் தனது ஆய்வுகளின் முடிவுகளை முன்வைத்தார். தனது ஆய்வு முடிவுகளின் மீது அவர் கொண்டிருந்த அசைக்க முடியாத நம்பிக்கை பிற ஆய்வுகளை மிகக் கடுமையாக மறுப்பதில் போய் முடிந்தது ஒரு குறையே.
ஈழத்து விமர்சன முன்னோடிகளான க.கைலாசபதி, கா.சிவத்தம்பி போன்றோரின் வழித்தோன்றலாகத் தமிழகத்தில் கோ.கேசவன் அடையாளம் காணப்பட்டார். அவரது நூல்கள் சில கைலாசபதியின் முன்னுரையுடன் வெளிவந்தன. அவரது முதல் ஆய்வு நூலான ‘மண்ணும் மனிதர்களும்’ நூலுக்கு கைலாசபதியே அணிந்துரை எழுதியிருந்தார். சங்கம் பற்றியும் அதன் காலம், கலாச்சாரம் பற்றியும் பெருமிதத்தில் இருந்த தமிழகத்தை அதிர்ச்சியடையச் செய்வதாக அவரது சமரசமற்ற ஆய்வுகள் இருந்தன. பொற்காலம் பற்றிய எல்லாக் கனவுகளையும் கலைத்துப் போடுவதாக அது இருந்தது.
‘வரலாற்றுச் செயல்பாடுகள் என்பன வெறும் நிகழ்வுகள் அல்ல. அவற்றுக்கு ஓர் உட்புறம், அதாவது ஒரு சிந்தனைப் புறம் ஒன்று உள்ளது’ என்ற வரலாற்றறிஞர் காலிங்வுட்டின் கூற்றுக்கு ஏற்ப கேசவனின் ‘மண்ணும் மனிதர்களும்’ அமைந்திருந்தது. 70-களில் வெளிவந்த அந்நூல் தந்த அதிர்ச்சி அலைகளினூடாகவே அவரது முதல் பிரசன்னம் நிகழ்ந்தது.
கைலாசபதி தொடங்கி வைத்த ஆய்வுப் பாதையின் அடியொற்றிக் கட்டுரைகளும், ஆய்வுகளும் படைக்கத் தொடங்கிய கேசவன் அதனின்றும் சிறிதும் விலகவில்லை. வரலாற்றின் காலத்தை உயிர்ப்பித்துப் பேச வைப்பதில் கேசவன் இணையற்றவராக இருந்தார். வரலாறு என்பதை எப்படி வேண்டுமானாலும் மாற்றியும் கலைத்தும் திரித்தும் எழுதலாம் என்ற எண்ணத்தில் பலரும் இன்று இருக்கும் காலகட்டத்தில், மெய்மைக்கு நெருக்கமாகத் தனது ஆய்வுகளைக் கொண்டுசேர்ப்பதில் கேசவன் மார்க்ஸியத்தின் வழியே வெற்றிகண்டார்.
90-களில் உலகமயச் சூழலின் பின்னணியில் தமிழ்த் தேசியம், தலித்தியம், பெண்ணியம் என்பன மீள் வாசிப்புக்கென மேலெழுந்தபோது கேசவன் அவற்றை எதிர்கொண்டு வினையாற்றினார். ‘தமிழ் மொழி, இனம், நாடு’ நூலில் தேசியம் குறித்தும் இன விடுதலைக் குறித்தும் இப்படிப் பேசுகிறார்:
“தேசிய இன விடுதலை என்பது அடித்தள மக்களின் சமூக விடுதலையுடன் தொடர்புடையதாக அமைகிற விடுதலை அல்லாது, தேசிய முதலாளிகளின் பொருளியல் மற்றும் அரசியல் அதிகாரத்துக்கான விடுதலையாக அமையுமெனில் அது ஒருபோதும் உண்மையான தேசிய விடுதலையாக அமையாது.” அவரது முன்நிபந்தனைகள் பலவும் தமிழ்த் தேசியருக்கு உவப்பானதாக இருக்காது.
கேசவன் தனது இறுதிக் காலங்களில் தலித் அரசியல் தொடர்பான உரையாடல்களிலும் ஆய்வுகளிலும் பெரும் பங்காற்றினார். ‘நிறப்பிரிகை’ போன்ற இதழ்களில் தலித் மக்கள் தொடர்பான அவரது உரையாடல்கள் மிகுந்த முக்கியத்துவம் கொண்டவையாகும்.
திராவிட இயக்கங்கள் பற்றி மட்டுமே 10-க்கும் மேற்பட்ட நூல்களை கேசவன் எழுதியிருக்கிறார். அடக்குமுறைக்கும் அச்சுறுத்தலுக்கும் தலைவணங்காதவராகவே இறுதிவரை இருந்துவந்தார். நெருக்கடிநிலையைத் துணிவுடன் எதிர்கொண்டு பங்காற்றியவர்களுள் கேசவனும் ஒருவர். தனது கவிதைகள் வழியாகவும் கேசவன் நெருக்கடி நிலையை எதிர்கொண்டார்.
கோ. கேசவனின் நூல்கள் பலவும் மறுபதிப்பு செய்யப்படவில்லை. ஒற்றை மதமும் ஒற்றைக் கலாச்சாரமும் ஒற்றை தேசமும் முன்வைக்கப்படும் இந்த நேரத்தில், தேசிய இனங்களின் உரிமை, உறவுகள் குறித்து உரையாடுவதற்கும், அவற்றை எதிர்கொள்வதற்கும் கேசவனின் நூல்கள் பல திறப்புகளை வழங்கக்கூடியவை. ஆகவே, அவற்றை மறுபதிப்பு செய்வது காலத்தின் தேவை.
- இரா. மோகன்ராஜன், ‘இருள் என்பது குறைந்த ஒளி’ என்ற சிறுகதைத் தொகுப்பின் ஆசிரியர். தொடர்புக்கு: mohanrajan.r@gmail.com
அக்டோபர்-5: கோ. கேசவன் பிறந்த நாள்