Published : 22 Oct 2017 12:39 PM
Last Updated : 22 Oct 2017 12:39 PM

பார்த்திபன் கனவு (இரண்டாம் பாகம்) 3 - வம்புக்கார வள்ளி

வம்புக்கார வள்ளி

பொன்னன் போனதும், வள்ளி சிவனடியாருக்கு மிகுந்த சிரத்தையுடன் பணிவிடை கள் செய்யத் தொடங்கினாள். அவருடைய காலை அனுஷ்டானங்கள் முடிவடைந்ததும், அடுப்பில் சுட்டுக் கொண்டிருந்த கம்பு அடையைச் சுடச்சுடக் கொண்டு வந்து சிவனடியார் முன்பு வைத்தாள். அவர் மிக்க ருசியுடன் அதைச் சாப்பிட்டுக் கொண்டே வள்ளியுடன் பேச்சுக் கொடுத்தார்.

“வள்ளி! ராணி எப்படி இருக்கிறாள், தெரியுமா?” என்று கேட்டார் சிவனடியார்.

“இளவரசர் பக்கத்தில் இருக்கும்போதெல்லாம் தேவி தைரியமாகத் தான் இருக்கிறார். அவர் அப்பால் போனால் கண்ணீர் விடத் தொடங்கி விடுகிறார்” என்றாள் வள்ளி.

பிறகு, “சுவாமி! இதெல்லாம் எப்படித்தான் முடியும்? இளவரசர் நிஜமாக மகாராஜா ஆகிவிடுவாரா? அவருக்கு ஏதாவது நேர்ந்துவிட்டால், ராணி பொறுக்க மாட்டாள்; உயிரையே விட்டுவிடுவார்” என்றாள்.

“எனக்கென்ன தெரியும் அம்மா! கடவுளுடைய சித்தம் எப்படியோ அப்படித்தான் நடக்கும்.

உனக்குத் தெரிந்த வரை ஜனங்கள் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்?”

“ஜனங்கள் எல்லோரும் இள வரசர் பக்கம்தான் இருக்கிறார்கள். பல்லவ அதிகாரம் ஒழிய வேண்டுமென்று தான் ஆசைப்படுகிறார்கள்.

பார்த்திப மகாராஜாவின் வீர மரணத்தைப் பற்றித் தெரியாத பிஞ்சு குழந்தைகூடக் கிடையாது. சுவாமி! அந்தச் செய்தி யைத் தாங்கள் தானே ஆறு வருஷத்துக்கு முன்னால் எங்களுக்கு வந்து சொன்னீர்கள்? அதை நானும் ஓடக் காரரும் இதுவரையில் லட்சம் ஜனங்களுக்காவது சொல்லியிருப்போம்” என்றாள்.

“நானும் இன்னும் எத்தனையோ பேரிடம் சொல்லியிருக்கிறேன். இருக்கட்டும்; மாரப்ப பூபதி எப்படியிருக்கிறான்? இப்போது உன் பாட்டனிடம் ஜோசியம் கேட்க அவன் வருவதுண்டா?” என்று கேட்டார் சிவனடியார்.

“ஆகா! அடிக்கடி வந்துகொண்டுதானிருக்கிறான்” என்றாள் வள்ளி. உடனே எதையோ நினைத்துக் கொண்டவள் போல் இடி இடி என்று சிரித்தாள்.

சிவனடியார் “என்னத்தைக் கண்டு அம்மா இப்படிச் சிரிக்கிறாய்? என்னுடைய மூஞ்சியைப் பார்த்தா?” என்றார். “இல்லை சுவாமி! மாரப்ப பூபதியின் ஆசை இன்னதென்று உங்களுக்குத் தெரியாதா?

காஞ்சி சக்கரவர்த்தியின் மகளை இவன் கட்டிக் கொள்ளப் போகிறானாம்! கல்யாணத்துக்கு முகூர்த்தம் வைக்க வேண்டியதுதான் பாக்கி” என்றாள்.

சிவனடியார் முகத்தில் ஒரு விநாடி நேரம் இருண்ட மேகம் படர்ந்தது போல் தோன்றியது. உடனே அவர் புன்னகையை வருவித்துக் கொண்டு “ஆமாம்; உனக்கென்ன அதில் அவ்வளவு சிரிப்பு?” என்று கேட்டார்.

“சக்கரவர்த்தியின் மகள் எங்கே? இந்தப் பேதை மாரப்பன் எங்கே? உலகத்தில் அப்படி ஆண் பிள்ளைகளே அற்றுப் போய்விடவில்லையே, நரசிம்ம பல்லவரின் மகளை இந்தக் கோழைப் பங்காளிக்குக் கொடுப்பதற்கு?” என்றாள் வள்ளி.

“ஆனால், உன் பாட்டன்தானே மாரப்பனை இப்படிப் பைத்தியமாய் அடித்தது வள்ளி, இல்லாத பொல்லாத பொய் ஜோசியங்களையெல்லாம் சொல்லி?” என்றார் சிவனடியார்.

“அப்படிச் சொல்லியிராவிட்டால், அந்தப் பாவி என் பிராணனை வாங்கியிருப்பான்; சுவாமி! போகட்டும்; சக்கரவர்த்தியின் குமாரி ரொம்ப அழகாமே, நிஜந்தானா! நீங்கள் பார்த்திருக்கிறீர்களா” என்று வள்ளி ஆவலுடன் கேட்டாள்.

சிவனடியார் புன்னகையுடன் “பார்த்திருக்கிறேன் அம்மா, பார்த்திருக்கிறேன். ஆனால் அழகைப் பற்றி எனக்கு என்ன தெரியும்? நான் துறவி!” என்றார்.

- மீண்டும் கனவு விரியும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x