Published : 14 Oct 2017 10:34 AM
Last Updated : 14 Oct 2017 10:34 AM

வகாபிசம்: சில கேள்விகள்

மா

ர்க்ஸியவாதியாக மலர்ந்தவர் ஹெச்.ஜி. ரசூல். அதே சமயத்தில் இஸ்லாம் மார்க்கத்தின் உலகளாவிய விவாதங்களிலும் கவனத்தைக் குவித்தார். மார்க்ஸியம் கற்றறிந்த ஒருவர் இயல்பாகவே மதத்தின் எல்லைக்கு அப்பால் நகர்ந்துவிடுவார். தேடல்வாதியான ரசூல், அப்படி நகர்ந்துவிடாமல் உள்மடிப்பாக இஸ்லாம் மார்க்கத்திற்குள் நுழைந்தார். சர்வதேசரீதியாக இஸ்லாம் திரிக்கப்பட்டுக்கொண்டிருந்தமையும், அதனால் முஸ்லிம்கள் தீவிரவாதப் பட்டங்களைச் சுமந்துகொண்டு அலைய நேர்ந்தமையும் அவருடைய கவலையைத் தூண்டியது. இதன் விளைவாகவே, அவர் ஒரே நேரத்தில் மார்க்ஸியத்திலும் மார்க்கத்திலும் நின்று போராட வேண்டியவரானார்.

‘வகாபிசம் - எதிர் உரையாடல்’ என்ற இந்த நூல் மேற்கூறப்பட்டவற்றின் வெளிப்பாடு. ரசூல் மார்க்ஸியம் பேசுகிறாரா மார்க்கம் பேசுகிறாரா என்ற குழப்பம் இப்படித்தான் பலருக்கும் நேரிட்டுவிட்டது. விடை எளிதானது: அவர் மார்க்ஸியரீதியாகவும் மார்க்கரீதியாகவும் மனிதம் பேசினார். இந்த விடைக்குள் அமைதி காண முடியாதவர்களால் ரசூலை விளங்கிக்கொள்ள முடியாது. மாற்றுத் தரப்பினர் விடுத்த சரங்கள் அனைத்தையும் தன்னுடைய வலிமையான வாதத்தால் ரசூல் முறிக்க முடிந்ததும் இதனால்தான்.

ஊர் ஜமாத்திலிருந்து மார்க்கரீதியான காரணங்களால் அவர் விலக்கப்பட்டார். அந்த நிலையிலும் அவர் இஸ்லாத்தை விட்டு வெளியேறவில்லை. பின்னொரு நாளில் அந்த விலக்கம் விலக்கப்பட்டபோது அதே ஜமாத் அவரை உளபூர்வமாகவே நேசிக்கலானது. காரணம், இஸ்லாம் வலியுறுத்திய சாந்திக்கும் சமாதானத்துக்குமான உண்மையான எழுத்துப் போராளியாக அவர் இருக்கிறார் என்கிற உண்மையை அறிந்துகொண்டதால்!

வகாபிசம் எனும் நவீனக் கருத்தாடல் சுற்றிச் சுற்றி எந்த இடத்தை நோக்கி நகர்கிறது? இதை விவாதரீதியாக எதிர்கொள்ளும்போது இரு முனைகளை அவர் தேர்ந்தெடுக்கிறார். முதலாவது, வகாபிசத்தின் நேரடியான பகுத்தறிவுக் கூற்றுகளை அதே தன்மையோடு நேர்நின்று முறிப்பது; பிறிதொரு களம் வகாபிசம் அரைகுறையாகக் கைநனைத்த சூஃபித்துவ உரையாடல். பெரும் ஞானிகளின் கவிதைகளில் காணப்படும் உள்ளொளி எப்படிச் சமூகத்தின் சுமுகமான விளைவுகளுக்குப் பொறுப்பேற்கிறது என விவரித்து வகாபிசத்துக்குப் பதிலளிப்பது அவரின் பாணி.

வகாபிசம், இஸ்லாத்தின் அடித்தள மக்கள் கொண்டிருந்த நம்பிக்கைகள், மரபுகள், சடங்குகளின் மீது கடும் தாக்குதலைத் தொடுத்தது. இதன் வழியாக அது தன்னை அறிவுச் சூழலுக்குள் நிறுத்தப் பார்த்தது. அதே சமயம் மேல்தட்டினர் பின்பற்றும் இஸ்லாத்தைப் பகுத்தறிவுரீதியாக விமர்சிக்க முடியாமல் ஒதுங்கியது. சமூகரீதியாக அணுகும்போதுதான் ஒருவரால் இஸ்லாம் சமாதான சகவாழ்வுக்கு எவற்றையெல்லாம், எந்தெந்த நிலையில் பரிந்துரைக்கிறது என உணர முடியும்.

ஓர் ஆட்சியை நிறுவுவதன் வழியாகக் குடிமைச் சமூகத்துடன் உறவாடவும் புனரமைப்பை மேற்கொண்டு சமூகத்தை நிர்மாணிக்கவும் நபிகள் நாயகம் விரும்பினார். ஆனால் ஆட்சித் தலைவரான பின் வறுமையில் வாடினார். மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களை நோக்கிய நபிகளாரின் ஆட்சியில் கோட்டைகள் இல்லை; படைகளும் இல்லை. இஸ்லாத்தை மட்டுமே பேசிக்கொண்டிருக்கவுமில்லை. நபிகளின் காலம் முடிவுற்றபின், ஆட்சிப் பொறுப்புக்கு வந்த அவரின் தோழர்களும் மக்கள் நல்வாழ்வுத் திட்டங்களோடு செயல்பட்டார்கள். இத்தகைய சமூகச் செயல்பாடுகளுடன்தான் அவர்களின் ஆன்மிகத் தேடல் இருந்ததே தவிர, ஆன்மிகத்தை மட்டுமே ஒற்றை நோக்கமாக அவர்கள் ஆக்கிக்கொண்டதில்லை.

இஸ்லாத்தை மக்களின் நலம் கருதிச் சமூகவியல் நோக்கில்தான் முன்னெடுக்க வேண்டும். வகாபிசத்தின் தோற்றுவாய்க்கு முன்னர் அப்படித்தான் இஸ்லாம் உலகுக்கு உணர்த்தப்பட்டது. இதனை சூஃபி ஞானிகள் இன்னும் பக்குவமாகக் கையாண்டார்கள். அவர்கள் ஆன்மிகத்தைத் தம் ஞானத்தின் வழியே சொல்லி, அதன் அடுத்த நகர்வாக மக்களின் மீதான அக்கறையோடு சேவை புரியலானார்கள். பாமரர்களின் துயரங்களைத் துடைத்தார்கள். சூஃபித்துவத்தின் இத்தகைய அணுகுமுறைக்கு மாற்றமாக வகாபிசம் அப்படியான விவாதங்களை எழ விடாமல் அறிவுவாதமாக இஸ்லாத்தை முன்னெடுத்தது. உலகம் முழுவதும் இஸ்லாம் பரவியது சூஃபிகளாலும் வணிகர்களாலும் தேர்ந்த ஆட்சியாளர்களாலும்தானே அன்றி, வகாபிசத்தினால் அல்ல. மேற்கூறப்பட்ட பிரிவினர் வலுவாக, விரிவாக இஸ்லாத்தைப் பரப்பிய பின் அதைப் பங்குபோட்டு நலிவுற வைக்க வந்ததுதான் வகாபிசம். அது பகுத்தறிவைப் பேசும் பாவனையில் முஸ்லிம்களைப் பிளவுபடுத்தியது. தன் இருப்புக்கு எவையெல்லாம் இடையூறோ அவற்றின் மீது பகுத்தறிவை உரைத்தது வகாபிசம். தன் அதிகாரத்துக்குத் துணைபுரியும் மதக் கூறுகளை அதே பகுத்தறிவு கொண்டு விமர்சிக்காமல் ஒதுங்கித் தந்திரம் பயின்றது. இத்தகைய வகாபிச நடைமுறைகள்மீது கேள்விகளை முன்வைக்கிறது இந்நூல்.

ஆன்மிகத்துக்குள் பகுத்தறிவு?

இதுவரை பின்பற்றப்பட்டுவந்த சில நடைமுறைகளின் மீது கடும் விமர்சனங்களை முன்வைத்த வகாபிசம் தொழுகைகள், பிரார்த்தனைகள் போன்றவற்றில் புதிய நடைமுறைகளைப் பொருத்தியது. பொருட்படுத்திப் பார்ப்போமானால் இவற்றால் இஸ்லாத்துக்கோ முஸ்லிம்களுக்கோ எள்ளளவு நன்மையும் கிடையாது. யதார்த்தமான விஞ்ஞானக் களத்துக்குள் செல்லவில்லை அது. அந்த எல்லைக்கு வெகு அப்பால் நின்று வெறும் மதவாதச் சீண்டல்களால் தன்னுடையதை விஞ்ஞானக் கருத்தியல் என்று கூறித் தனக்குத் தானே சான்றிதழ் வழங்கிக்கொண்டது. இந்தத் தந்திரத்துக்குள் வீழ்ந்து எண்ணற்ற இளைஞர்கள் தம்மையும் விஞ்ஞானிகளாகப் பாவிப்பது இன்றளவும் தொடர்கிறது. ஆன்மிகத்துக்குள் நின்று பகுத்தறிவு பேசும் விசித்திரமான உளவியலே வகாபிசம் ஆகும்.

ரசூல் வேறுபல கருத்துகளை உரத்துப் பேசுகிறார். வகாபிசம் நிறைய பகுத்தறிவுவாதம் பேசினாலும் அது உண்மையில் சமூக இயங்கியலை வெறுத்து ஒதுக்கிவைக்கிறது. இஸ்லாத்தின் தோற்றம், அதன் ஆன்மிகச் சாரம், கலாச்சாரப் பண்புகள், ஆடை - உணவு குறித்து உருவான ஏற்பு - விலக்கல் முறைகள் குறித்தெல்லாம் மருந்துக்கும் வகாபிசம் தலைகொடுப்பதில்லை. தம் தோற்றத்துக்கு முன்பிருந்த சமய, சமூகப் பழக்கங்களை அதன் பின் தோன்றும் சமயங்கள் தமதாக்கிக்கொள்வது மதங்களின் வரலாறு நெடுக நடந்துள்ளது. ஆனால், தூய்மைவாதம் பேசும் வகாபிசம் இதை ஒத்துக்கொள்ளாது. இது ஒரு புதிய இஸ்லாமிய வகுப்பாகப் பரிமாணம் கொண்டதும் இதர வகுப்புகளை எள்ளி நகையாடி அவற்றை ஒழிக்க வேண்டும் என்றது. இப்படியாக நோக்கம் ஒன்றாகவும் செயல்பாடு பிறிதொன்றாகவும் இக்கருத்தியல் ஊசலாட்டம் கொண்டது.

ரசூல் இயற்கை எய்திய இரண்டாவது நாளில் இப்புத்தகம் வெளியிடப்பட்டது. இவ்வாறு நடந்ததை அவரின் மொத்த வாழ்நாளுக்குமான தொடர்ச்சியாகத்தான் கருத வேண்டும். காலம் பூராவும் போராடியவர் தன் பணி நிறைவைப் பயன்படுத்தி இன்னும் விசாலமான போர்க்களத்துக்கு ஆயத்தமாகிக்கொண்டிருந்த நிலையில் உடல்நலன்மீது கவனமின்மையால் உயிர் துறந்தார். ரசூல் மரணித்தாலும் அவர் விட்டுப்போன ஆயுதங்கள் நம் கைவசம் இருக்கின்றன. அவற்றிலொன்று இந்நூல்.

- களந்தை பீர்முகம்மது, ‘பிறைக் கூத்து’ முதலிய நூல்களின் ஆசிரியர், தொடர்புக்கு: kalanthaipeermohamed@gmail.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x