Published : 14 Oct 2017 10:26 AM
Last Updated : 14 Oct 2017 10:26 AM

தொடுகறி: வலியை மறக்கச் செய்யும் மருந்து!

வலியை மறக்கச் செய்யும் மருந்து!

எட்டாம் வகுப்பு படிக்கும்போதே தசைச் சிதைவு நோயினால் பாதிக்கப்பட்டவர் காந்தி (33). கன்னியாகுமரி மாவட்டம் நாவல்காட்டைச் சேர்ந்த இவர், அதன் பின்னர் தன்னிச்சையாகச் செயல்பட முடியாத மாற்றுத் திறனாளி ஆனார். ஆனாலும், மிகுந்த முயற்சிகள் மேற்கொண்டு தொலைதூரக் கல்வியில் எம்.காம் வரை படித்தார். நான்கு சுவர்களுக்குள் வாழ்க்கை அடங்கிவிடக் கூடாது என்னும் ஆதங்கத்தில் ‘காலம் இன்னும் இருக்கிறது’, ‘கொஞ்சம் காதல் கெஞ்சும் கவிதை’ என்னும் இரு கவிதை தொகுப்புகளையும் எழுதி வெளியிட்டுள்ளார். தன் புத்தக வெளியீடுகள் மட்டுமல்லாமல் தான் பங்கெடுக்கும் இலக்கியக் கூட்டங்களையும் நாவல்காடு நோக்கித் திருப்பியுள்ளார். இப்போது ஒரு காதல் கவிதை தொகுப்பையும் காதல் நாவலையும் வெளியிடத் தயாராக இருக்கும் காந்தி எழுத்து, தன் வலியை மறக்கச் செய்யும் மருந்து என்கிறார்.

கௌதம சித்தார்த்தனுக்கு மூன்று பூங்கொத்துகள்!

எழுத்தாளர் கௌதம சித்தார்த்தனுக்கு ரொம்பவும் மகிழ்ச்சியான ஆண்டு இது! மூன்று விஷயங்கள்! ஒன்று, அவரது ‘காலப்பயண அரசியல்’ நூலின் ஸ்பானிஷ் மொழியாக்கம் சமீபத்தில் அமேசான் கிண்டில் பதிப்பாக வெளியிடப்பட்டிருக்கிறது! இரண்டாவது, அவரது ‘உன்னதம்’ இதழுக்காக லத்தீன் அமெரிக்க எழுத்தாளரான இஸபெல் அயெந்தே பிரத்யேகப் பேட்டி தந்திருக்கிறார். மூன்றாவது, இன்னும் மகிழ்ச்சிக்குரியது. கௌதம சித்தார்த்தனுக்குப் பேத்தி பிறந்திருக்கிறாள்!

டான் பிரவுனின் அடுத்த வெடிகுண்டு!

சமீபத்திய புத்தக உலகின் மிகப் பெரிய வெடிகுண்டு தற்போது வெளியாகியிருக்கும் டான் பிரவுனின் ‘ஆரிஜின்’ (தோற்றம்) நாவல்தான்! குறியியல் பேராசிரியரான ராபர்ட் லாங்டன்தான் (கற்பனை பாத்திரம்) இந்த நாவலின் நாயகர். அவர் தோன்றும் ஐந்தாவது நாவல் இது. கதை? வழக்கம்போல் மதம்தான். இதில் மதத்துக்கும் அறிவியலுக்கும் இடையே உள்ள தீராத பிணக்குதான் மையம். தலைப்பே கதை சொல்லிவிடுகிறது! உயிர்களின் தோற்றம் குறித்து மதம் கூறுவதற்கும் அறிவியல் கூறுவதற்கும் இடையே உள்ள போராட்டம்தான் கதை. எது வெல்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள நாவலை வாங்கிப் படிக்கவும்!

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x