Published : 28 Oct 2017 11:34 AM
Last Updated : 28 Oct 2017 11:34 AM

சிற்றிதழ் பார்வை: சிறுபத்திரிகை - அரசியல் நோக்கிய எழுத்து

மிழ் இலக்கியச் சூழலில் தீவிர வாசிப்பு குறைந்து, விமர்சனங்களும் குறைந்து, முகநூல் பதிவுகளோடு இலக்கியவாதிகள் மனநிறைவு எய்திவிடுகிறார்கள்; மதவெறி அடிப்படையிலான அரசியலும் மோசமான பின்விளைவுகளை உருவாக்கும் அதன் பொருளாதார நடவடிக்கைகளும்கூட அவர்களிடத்தில் எந்தப் பாதிப்பையும் ஏற்படுத்தவில்லை என்ற வருத்தத்தோடு தொடங்கியிருக்கிறது ‘சிறுபத்திரிகை’ இதழின் முதல் தலையங்கம். போலந்து கவிஞர் விஸ்லாவா சிம்பார்ஸ்கா 1996-ம் ஆண்டுக்கான இலக்கியத்துக்கான நோபல் பரிசு பெற்றபோது ‘கவிஞனும் உலகமும்’ என்ற தலைப்பில் ஆற்றிய உரையும் அவரது சில கவிதைகளும் இடம்பெற்றுள்ளன.

‘தனிமையின் நூறு ஆண்டுகள்’ நாவல் வெளிவந்து 50 ஆண்டுகள் ஆகும்நிலையில், அந்நாவல் லத்தீன் அமெரிக்க எழுத்தாளர்களிடம் செலுத்தும் அளவுக்கதிகமான செல்வாக்கைப் பற்றி பேசுகிறது, கொலம்பிய நாவலாசிரியர் யுவான் கேப்ரியல் வாஸ்க்வெஸ் எழுதிய கட்டுரை. பாரம்பரிய எழுத்துமுறையில் சிறைப்பட்டிருப்பது எழுத்தாளரின் தோல்வி என்று சுட்டிக்காட்டுகிற அக்கட்டுரை, உள்ளடக்கத்துக்கும் எழுத்தாளரின் அனுபவத்துக்கும் ஏற்றவகையில் ஒரு முன்னோடி படைப்பைத் தேர்வு செய்துகொள்ள வேண்டும்; மார்க்வெஸ் தனது படைப்புகளுக்கு வில்லியம் ஃபாக்னர், எர்னஸ்ட் ஹெமிங்வே, ஆல்பெர் காம்யு ஆகியோரின் படைப்புகளை அவ்வாறு பின்பற்றியிருக்கிறார் என்று விரிகிறது.

வாக்ஸ்வெஸின் நீண்டதொரு பேட்டியும் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது. கவிதைக் கலை பற்றிய ஆலன் கின்ஸ்பெர்க் பேட்டி மற்றும் அவரது கவிதைகளின் மொழிபெயர்ப்பு, ஜேனட் வின்டெர்சன் எழுதிய சிறுகதையின் மொழிபெயர்ப்பு என்று இவ்விதழில் மொழிபெயர்ப்புகள் வழியாக நிறைய படைப்பாளுமைகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளனர். நித்தியா வீரராகு, ராஜி பத்மநாபன், ஜீனத், அன்புவேந்தன் என்று புதியவர்களின் கவிதைகளும் இடம்பெற்றிருக்கின்றன. இலக்கியச் சிற்றிதழ்களின் இயக்கத்தில் இன்னுமொரு புதுவரவான ‘சிறுபத்திரிகை’ அரசியல் நோக்கிய எழுத்துக்களைக் கண்டடைய முயற்சிக்கிறது.

-புவி

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x