Last Updated : 07 Oct, 2017 10:18 AM

 

Published : 07 Oct 2017 10:18 AM
Last Updated : 07 Oct 2017 10:18 AM

நட்பின் காலம்!

டிதங்கள் பற்றி களந்தை பீர்முகம்மது நல்ல கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார். அதன் பெயர் 'மனசை அறுக்கும் மந்திர வாள்கள்'. அதாவது மனதின் ஓட்டங்களை, அதன் நினைவுகளை, பகுதிபகுதியாக அறுத்துச் சின்னச் சின்னப் பழத் துண்டுகளாகத் தருகின்றனவாம் கடிதங்கள். அதில் முக்கியமாகச் சொல்லப்பட்ட ஒரு விஷயத்தை இன்னமும் மறக்க முடியவில்லை.

'ஒரு கட்டத்தில் எக்கச்சக்கமாகக் கடிதங்கள் சேர்ந்துவிட்டன. பிழைப்புநிமித்தம் இடம்பெயர்தல் நிகழும்போது, போகிற இடத்துக்கெல்லாம் தொடர்ந்து கடித மூட்டைகளைக் கொண்டுசெல்ல முடியவில்லை. மேலும், பரணில் அதற்கு போதிய இடமும் இல்லை. ''இத எதுக்கு சுமந்துகிட்டுத் திரியற'' என்று அம்மாவோ சொந்தக்காரர்களோ கேட்டால் எப்படிச் சொல்வது? அவை என் மனதை அறுக்கும் மந்திர வாள்கள்” என்று எழுதியிருப்பார்.

கடித மூட்டைகள் தூக்கியெறியும் நிலைக்குத் தள்ளப்பட்டபோதெல்லாம் மனது கனத்துப்போனது. நண்பர்களையே தூக்கிப் போட்டுவிட்டதுபோல தோன்றியதாக களந்தை பீர்முகம்மது எழுதியிருப்பார்.

ஒரு காலகட்டத்தில் கடிதங்களே பலரது எண்ணங்களை சுமந்து பயணித்ததை வண்ணநிலவனின் 'பின்நகரும் காலம்’ நூல் முழுவதும் பார்க்க முடிகிறது. கடிதங்களுக்காக எழுதப்பட்ட நூல் அல்ல இது. ஆனாலும், கடிதங்கள்தான் எதிரெதிர் முனைகளின் தூரத்தைக் குறைக்கும் காகிதப் பாலமாக இருந்திருக்கின்றன வண்ணநிலவனுக்கு. “ஊருக்குப் போனதும் லெட்டர் போடு” என்று சொல்வதும் அப்படிக் கடிதம் எழுதியதும் அதன் பிறகு தொடர்ந்து கடிதங்கள் வழியாகவே பேசிக்கொள்வதும் என்று நட்பு மேலும் பலப்படுவதற்குக் கடிதங்கள் பேருதவி புரிந்தன. நேர்ப்பழக்கத்தின் உறவாடலைவிட கடிதங்களின் மூலம் உறவாடிக்கொள்வது அப்போது அதிகம். வண்ணதாசன் மட்டுமே வண்ணநிலவனுக்கு 600-க்கும் மேற்பட்ட கடிதங்கள் எழுதியிருக்கிறார்.

ராமச்சந்திரன் வண்ணநிலவனாக...

சாலையோரத்தில் பேருந்து நிறுத்தத்திலிருந்து ஒரு மரத்தை, இடைஞ்சலாக இருக்கிறதென்று காரணம் காட்டி நகராட்சி நிர்வாகம் அகற்றுவதைப் பற்றியதுதான் வண்ணநிலவனின் முதல் சிறுகதை. 1970-ல் செப்டம்பர் 15 சாந்தி இதழில் 'மண்ணில் மலர்கள்' என்ற பெயரில் அந்தச் சிறுகதை வெளிவந்தது. அதில் தன்னுடைய புனைபெயரான வண்ணநிலவன் என்ற பெயரைக் கண்டதை ''நானும் எழுத்தாளனாகிவிட்டேன். வல்லிக்கண்ணனால் ‘வண்ணநிலவன்’ என்று பெயர் சூட்டப்பட்டுவிட்டேன். ராமச்சந்திரனாக இருந்த நான் வண்ணநிலவனானது இப்படித்தான்'' என்று எழுதுகிறார்.

ஒருவர் தான் கடந்துவந்த பாதையை எழுதும்போது மறக்காமல் நினைவுபடுத்த வேண்டியது வழியெங்கும் தன்னை ஆதரித்து, பாதையைத் திருத்தி வழி சமைத்துத் தந்தவர்களை. வண்ணநிலவனின் இந்த நூலில் மையம் கொண்டிருப்பது அவரது எழுத்துச் சாதனைகளையோ, வாசகர்கள் அவரை அங்கீகரித்துக் கொண்டாடியதைப் பற்றியோ இல்லை.

‘கடல்புரத்தில்’ நாவல் அவருக்குப் புகழை ஈட்டித்தந்தது குறித்தெல்லாம் அவர் பெரியதாக சிலாகித்துக்கொள்ளவில்லை. வாழ்வின் விட்டேற்றியான நினைவுகளின் கட்டுமானத்தோடு அதற்கேயான சொற்கட்டுமானத்தைச் செறிவோடு பிணைத்து எழுதப்பட்ட தனது சிறுகதைகளின் தனித்துவம் குறித்த பிரக்ஞைகூட அவரிடம் இல்லை. ஆனால், கிராவைத் தேடிச் சென்றது, வல்லிக்கண்ணனைத் தேடிச் சென்றது, உற்ற நண்பர் வண்ணதாசனைத் தேடிச் சென்றது, ‘பதேர் பாஞ்சாலி’ படம் பார்த்ததை, கிருத்திகாவின் ‘வாஸவேச்வரம்’ படித்ததையெல்லாம் மனம் விரிந்து எழுதுகிறார்.

முழுநேர எழுத்துப் பணி

எழுத்தை நம்பி சுயேச்சையாக வாழ அங்கீகரிக்கப்பட்ட சிற்சிலரை மட்டும் தமிழ்ப் பாரம்பரியத்தின் பல தலைமுறைகளிலும் சேர்த்து மொத்தம் பத்து விரல்களுக்குள் அடக்கிவிடலாம். தமிழ்நாட்டைப் பொறுத்தவரை ஒருவர் முழுநேர சினிமா நடிகராகக்கூட வாழ முடியும். ஆனால், முழுநேர எழுத்தாளராக ஒருவர் வாழ்வதென்பது அந்தரத்தில் பந்தல் போடுவதற்கு ஒப்பானது. சிலருக்கு வேண்டுமானால் வானம் தொட்டுவிடும் தூரமாக இருக்கலாம். இன்னும் சிலருக்கு ‘கம்ப்யூட்டரே ஒரு கதை சொல்லு’ என்று கேட்டு வாங்க முடியும். இன்னும் சிலருக்கோ வருமானத்துக்குத் தீவிர இலக்கியத்தை நம்பியிராமல் பத்தியெழுத்தாளராகவும், சினிமாவைத் துணைக்கழைத்தும் வாழ வேண்டியிருக்கிறது. கொஞ்ச காலத்துக்கு முன் மாத நாவல்களுக்கும் வார இதழ் தொடர்கதைகளுக்கும் தீனிபோட்டவர்கள் சற்று தப்பித்திருக்கக்கூடும்.

வண்ணநிலவன் வாழ்வில் நிரந்தர வேலையின்றி அவ்வப்போது வாழ்க்கை சிக்கலாகத் தொடங்க, ஒரு கட்டத்தில் ‘பின்நகரும் காலம்’ நூலிலும், அவரது கதைகளிலும் காணப்படுவது போன்று இருண்மையின் தருணங்களில் சிக்கித் தவிக்கும் யோசனை மிகுந்த காட்சிகள் நீளத் தொடங்குகின்றன. அவ்வப்போது செய்துகொண்டிருந்த வேலை, கண்ணதாசன், கணையாழி போன்ற இதழ்களின் பணி போன்றவை தடைபட, ஒருகட்டத்தில் அவருக்கு ‘துக்ளக்’கில் ஒரு வேலை கிடைக்கிறது. ஜீவிதத்துக்கான அவரது போராட்டங்கள் இந்த நூலில் பதிவாகியிருக்கின்றன.

முழுக்க முழுக்கத் தான் கடந்து வந்த பாதையெங்கும் கண்ட வண்ணதாசன், விக்ரமாதித்யன், கலாப்ரியா, பிரபஞ்சன், பா. செயப்பிரகாசம் உள்ளிட்ட நண்பர்களின் அரவணைப்பைப் பேசுவதில்தான் அவருக்கு ஈடுபாடு அதிகம். அதன் மூலம் நம் சமகாலப் படைப்பாளிகள் நட்புக்கு முறைசெய்யும் தகுதி வாய்ந்த அன்பு மனிதர்களாகத் தென்படுவதைப் பார்க்க முடிகிறது. அத்தகையவர்கள் எழுதியதெல்லாம் வெறும் கதையல்ல; வாழ்வின் உரைகல் என்பதை வண்ணநிலவன் அழகிய சித்திரங்களாக இங்கு தீட்டிக்காட்டும்போது புலப்படுகிறது.

- பால்நிலவன்,

தொடர்புக்கு: sridharan.m@thehindutamil.co.in

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x