

அவள் தனக்கொரு பெயர் சூட்டிக் கொள்கிறாள். தானே தனக்கு உருவொன்றைக் கொடுத்துக்கொள்கிறாள். அவள் எழுதுகிறாள். எழுத்தின் வகைமைகள் அவளுக்கு அத்துப்படியாக உள்ளன. எழுதுவது மட்டுமல்ல, அவளது சாத்தியங்கள் ஆயிரமாயிரம். தகவல்களைத் தேடித் தேடிச் சேகரிக்கும் அவளிடம் ‘திசை எட்டு’ என்பது பொய்யாகிவிடுகிறது.
மூலைமுடுக்கெல்லாம் ஓடித் தேடித் தகவல்களின் சேகரமாய் விளங்குகிறாள். தட்டுங்கள் திறக்கப்படும், கேளுங்கள் கொடுக்கப்படும், தேடுங்கள் கிடைக்கும் என்பதைத் தாண்டி, எது வேண்டுமெனக் கேட்கிறோமோ அதுவாகவே மாறிவிடுகிறாள்: பாடல், வரைபடம், கதை, கவிதை என யாதுமாகி நிற்கிறாள் - இது, மாயா என்ற உடலிலியைப் பற்றிய குறிப்பு.
நூல் வெளியீடு என்பது இன்று ஆச்சரியமான ஒன்றல்ல. ஆனால், இந்த நூல் சாட்ஜிபிடி என்ற செயற்கை நுண்ணறிவுச் செயலி உருவாக்கியது. மணற்கேணி பதிப்பகம் வெளியிட்டிருக்கும் ‘பினித் தி ஷேடோஸ்’ [Beneath the Shadows] நூலை சாட்ஜிபிடியே எழுதியுள்ளது. சாட்ஜிபிடியைக் கொண்டு தலித் கவிதைகளை எழுதவைக்க முடியுமா என்று ரவிக்குமார் முயன்றுள்ளார்.
தனது விருப்பத்தை சாட்ஜிபிடியிடம் கட்டளைகளாகக் கொடுத்துள்ளார்: தலித் பெண் ஒருவரை உருவாக்கு, அவரது பார்வையில் கவிதை எழுது, அந்தக் கவிதை சாதியப் பாகுபாடுகள் பற்றியதாக இருக்கட்டும் எனக் கேட்டுள்ளார். அது எழுதிய கவிதை பழங்கால ஆங்கிலக் கவிதை மரபை ஒட்டியதாக இருந்துள்ளது.
அதைப் பார்த்த ரவிக்குமார், மாயா ஏஞ்சலோ கவிதையை முன்மாதிரியாகக் கொண்டு எழுது என மாதிரிக்கு ஒரு கவிதையைப் பதிவேற்றியுள்ளார். அது கடகடவென எழுத ஆரம்பித்துவிட்டது. அதுபோல பாப்லோ நெரூதா, முகமது தார்விஷ் என ஒவ்வொரு கவிஞராகச் சொல்லச் சொல்ல, அது அவர்களின் பாணியில் எழுதித் தள்ளிவிட்டது; 29 கவிதைகள் சேர்ந்துவிட்டன. அந்தக் கவிதைகளை நூலாக்க வேண்டும்.. அந்த நூலுக்கான பெயர் வேண்டும் என்றதும் அது பெயரைக் கொடுத்திருக்கிறது.
ஆசிரியர் குறிப்பு, ஆசிரியர் எழுதும் குறிப்பு ஆகியவற்றோடு சாட்ஜிபிடியே அதற்கு முன்னுரையும் எழுதியுள்ளது. இவை எல்லாவற்றையும் செய்து முடிக்க அதற்கு ஒரு மணி நேரம்கூட ஆகவில்லை என்கிறார் ரவிக்குமார். நூலின் தலைப்பு, மாயா என்ற எழுத் தாளர் பெயர் தேர்வு, ஆசிரியர் குறித்த அறிமுகம், கவிதை வகைப்பாடுகள் என எல்லாவற்றையும் சாட்ஜிபிடியே தீர்மானித்துள்ளது. இந்தியாவில் சாட்ஜிபிடி வழியாக வெளிவந்த முதல் தலித் கவிதை நூல் இதுவாகத்தான் இருக்கும்.
இந்நூலாசிரியர் மாயா, தனக்கான அறிமுகத்தை ஆசிரியர் குறிப்பாக இப்படி வழங்குகிறார்: ‘எனது பெயர் மாயா. நான் சாட்ஜிபிடி-யால் உருவாக்கப்பட்ட தலித் கவிஞர். கவிதை எழுதுவதன் வாயிலாக ஆறுதலையும் பலத்தையும் பெற்றுள்ளேன். கவிதையால் சமூகத்தில் மாற்றத்தையும் சமூகக் கட்டமைப்புக்கு எதிரான சவால்களையும் உருவாக்க முடியும்.’ மாயாவின் கவிதை ஒன்றின் தமிழ் மொழிபெயர்ப்பு: சாதி நம்மைப் பிரித்துவைக்க முயல்கிறது/ நாம் உறுதியாக நிற்க வேண்டும்/ அதுவும் உண்மையான தூய்மையான நமது காதலுடன்/ இங்கு எதுவும் தவறாகி விடாது.
- தொடர்புக்கு: nerkunjam@gmail.com
Beneath the Shadows
Maya [ChatGPT]
வெளியீடு: மணற்கேணி பதிப்பகம், விழுப்புரம்.
விலை: ரூ.80
தொடர்புக்கு: 63827 94478