

முத்தமிழில் ஒன்றான இசைத்தமிழ் இலக்கிய வரிசையில் மிகச் சிறப்புப் பெற்றது அருணகிரிநாதர் இயற்றிய திருப்புகழ். ‘முத்தைத்தரு பத்தித் திருநகை’ என முருகன் அடியெடுத்துக் கொடுக்க, அருள்ஞானம் பெற்று அருணகிரிநாதர் திருப்புகழ் இயற்றியதாக அறியப்படுகிறது. மிகச் சிறந்த சொல்லாட்சி, இசை நுட்பங்கள், கவித்துவம், இலக்கிய நயம், தாளநுட்பம், சந்தபேதம், இனிய ஓசை உள்ளிட்ட அம்சங்களைப் பெற்று திருப்புகழ் அமைந்துள்ளது. திருப்புகழை எளிய மக்களும் வாசித்து அணுகும் வகையில், அதற்கு முதன்முதலில் உரைகண்டு பதிப்பித்தவர்கள் தணிகைமணி வ.சு.செங்கல்வராயர் குடும்பத்தினர்.
தணிகைமணி, ராவ் பகதூர், வ.சு.செ. என்ற பெயர்களால் அழைக்கப்படும் வ.சு.செங்கல்வராயர், தமிழுக்கு வழங்கிய பங்களிப்புகள் ஏராளம். திருப்புகழ் பதிப்பாசிரியரான சிவஞானச் செல்வர் வ.த.சுப்பிரமணியரின் இளைய மகனான செங்கல்வராயர், அன்றைய தென் ஆர்க்காடு மாவட்டத்திலுள்ள மஞ்சக்குப்பத்தில் 15.08.1883 அன்று பிறந்தார்.
தந்தையின் அரசுப் பணி காரணமாக நாமக்கல், கும்பகோணம், திருவாரூர், மதுரை ஆகிய ஊர்களில் பள்ளிப் படிப்பை முடித்த செங்கல்வராயர், 1901இல் சென்னை மில்லர் கல்லூரியில் இளங்கலைத் தத்துவமும் பின்னர் அதே கல்லூரியில் முதுகலைத் தமிழும் முடித்தார். மரபான சைவக் குடும்பப் பின்னணியும் பரிதிமாற் கலைஞர், மறைமலையடிகள், கோபாலாசாரியார் என அவருடைய தமிழாசிரியர்களின் தாக்கத்தாலும் செங்கல்வராயர் தமிழ்த் தொண்டில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார்.
உரையாசிரியர், பதிப்பாசிரியர், மொழி பெயர்ப்பாசிரியர் எனப் பல தளங்களில் தமிழ்ப் பணி ஆற்றியுள்ள செங்கல்வராயர், 40 நூல்களை இயற்றியுள்ளார். செங்கல்வராயரின் முதன்மையான பங்களிப்பு, அவரது தந்தை தொடங்கிய திருப்புகழ் பதிப்புப் பணியை முழுமைப்படுத்தியதுதான். மாவட்ட நீதிபதியாக இருந்த சுப்பிரமணியர், சிதம்பரத்துக்குப் பயணித்துக்கொண்டிருந்தபோது, அருணகிரிநாதரின் பாடல்களைப் பயணிகள் பாடுவதைக் கேட்டு அதன்மேல் பற்றுக் கொண்டார்; அப்பற்று அருணகிரிநாதரின் பாடல்களைத் தொகுக்க அவரை உந்தித் தள்ளியது.
அதன் பொருட்டு, 1871இல் தென்னிந்தியா முழுவதும் பயணித்த சுப்பிரமணியர், எழுத்தோலை உள்ளிட்ட கையெழுத்துப் பிரதிகளைச் சேகரித்து, அருணகிரிநாதர் பாடல்களை இரண்டு தொகுதிகளாக வெளியிட்டார். 1894இல் முதல் பதிப்பும் 1901இல் இரண்டாவது பதிப்பும் வெளியாயின. தந்தையின் மறைவுக்குப் பிறகு அவரது பணியை முன்னெடுத்த செங்கல்வராயர், திருப்புகழுக்கு முழுமையான உரை வழங்கி, ஆராய்ச்சிக் குறிப்புடன் நூலாக வெளியிட்டார்.
1950 முதல் 1958 வரையிலான ஏழாண்டுக் காலத்தில், திருப்புகழ் உரை-பதிப்புப் பணிகளில் செங்கல்வராயர் முழுமையாக ஈடுபட்டார். 1951 ஏப்ரல் மாதம் திருப்புகழ் பொழிப்புரையின் முதல் தொகுதியின் முதல் பகுதியை வெளியிட்டார்; பல மாதங்கள் கழித்து 15.08.1952 அன்று முதல் தொகுதியின் இரண்டாம் பகுதியினை வெளியிட்டார். இவ்வெளியீட்டில் மீதமுள்ள பகுதிகள் தொடர்ந்து மாதம்தோறும் வெளிவரும் எனக் குறிப்பிட்டுள்ளார்.
செங்கல்வராயரின் திருப்புகழ் பதிப்பு குறித்து, ‘தேவஸ்தானங்களும், மடாலயங்களும் போன்ற செல்வ நிலையங்கள் மேற்கொள்ள வேண்டிய மிகப் பெரிய இந்நன் முயற்சியை, இதன் பதிப்பாளர் உலையாவூக்கமொடு இடையூறின்றி இனிது நிறைவேற்ற முருகப்பிரான் திருவருள் முன்னிற்க வேண்டும்’ என்று ‘செந்தமிழ்’ இதழ் எழுதியது.
‘எழுதியுள்ள உரைப் பகுதிகள் புலவர்களுக்கு வேண்டாவிடினும், ஏனையோர்க்குப் பயன்படு மாயின்... மகிழ்ந்து அவன் திருவருளையே வியப்பேன்’ என முதல் பதிப்பின் முகவுரையில் செங்கல்வராயர் வியக்கிறார். அந்த ஏனையோர்க்கு அது வேண்டியதாக இருக்கிறது என்பதையே இன்று வரை அச்சில் இருக்கும் அவரது திருப்புகழ் பதிப்புகள் உணர்த்துகின்றன.
- தொடர்புக்கு: arunprasath.s@hindutamil.co.in
அருணகிரிநாதரின் திருப்புகழ்
மூலமும் உரையும் (6 தொகுதிகள்)
உரையாசிரியர்: தணிகைமணி வ.சு.செங்கல்வராய பிள்ளை
வெளியீடு: அருணா பப்ளிகேஷன்ஸ், சென்னை.
விலை: ரூ.2,200
தொடர்புக்கு: 044 2650 7131, +91 9444047790