

விடையை நோக்கிய தேடல்கள் பயணங்கள், பயணம் மேற்கொள்பவரின் வாழ்க்கையை மேம்படுத்தும். பயண நூல்களோ, அதை வாசிப்பவரின் வாழ்க்கையையும் மேம்படுத்தும். சாளை பஷீர் எழுதியிருக்கும் இந்தப் பயண நூலும் அப்படிப்பட்டதே. ராபர்ட் ஃப்ராஸ்ட் எழுதிய ‘தேர்வு செய்யப்படாத பாதை’ எனும் கவிதையுடன் இந்நூலை அவர் தொடங்கியுள்ளார்.
அவர் மேற்கொண்ட பயணங்களையும், பயணித்த இடங்களின் சிறப்புகளையும், அங்கே சந்தித்த மனிதர்களையும் தனக்கே உரிய பாணியில் அறிமுகப்படுத்தியுள்ளார். தமது தேடல்களுக்கான விடையைப் பயணங்களிலிருந்து கண்டறிய மனிதர்கள் முயன்றுள்ளார்கள். இந்தக் கட்டுரைகளையும் அப்படிச் சொல்லலாம். - ஹூசேன்
தோந்நிய யாத்ரா,
சாளை பஷீர்,
சீர்மை வெளியீடு, விலை: ரூ.130
தொடர்புக்கு: 80721 23326
பனைத் தொழிலாளர்களின் வாழ்க்கைப் போராட்டம்: அக்கானி என்பது குமரி மாவட்டத்தில் கிடைக்கும் கள் வகை. மேற்குக் குமரி மாவட்டப் பனைத் தொழிலாளர்களின் வாழ்க்கையையும் போராட்டங்களையும் சித்தரிக்கும் நாவல் இது. எளிய மக்களே இந்த நூலின் நாயகர்கள். அவர்களுடைய மொழி, உணவு, இருப்பிடம், வாழ்க்கை ஆகியவற்றைக் குறித்து விரிவாகப் பதிவுசெய்துள்ளது. ஏழ்மையில் உழலும் அந்த மக்களுக்குக் கல்வி, இடதுசாரிக் கொள்கைகள், அம்பேத்கரின் சிந்தனைகள் ஆகியவை எப்படி எழுச்சியைத் தருகின்றன என்பதும் விவரிக்கப்பட்டுள்ளது. இந்த நாவலின் மொழியும் தனித்துவமாக இருப்பது குறிப்பிடத்தக்கது. - நேயா
அக்கானி,
இலா.வின்சென்ட்,
பாரதி புத்தகாலயம்,
விலை: ரூ.330
தொடர்புக்கு: 044-24332924
பல்லவர் காலப் பிரதிபலிப்பு: பல்லவ அரசர் முதலாம் மகேந்திரவர்மன் இயற்றிய சம்ஸ்கிருத நாடகம் ‘மத்தவிலாசம்’. பிரகசனம் என்பது சம்ஸ்கிருதத்தின் பத்து நாடக வகைகளில் நகைச்சுவையை மையப்படுத்திய நாடக வகை. இந்த நாடகத்துக்கு 1930களில் ந.பலராமர், தி.கி.நாராயணசாமி ஆகியோரும், 1950இல் ஒளவை சு.துரைசாமியும் செய்த தமிழ் மொழிபெயர்ப்புகளைத் தேடிக் கண்டறிந்து, இந்நூலில் தொகுத்துள்ளார் கலை வரலாற்றாய்வாளர் பேராசிரியர் சா.பாலுசாமி.
இந்த நாடகம் தமிழில் மொழிபெயர்க்கப்பட்டதன் பின்னணி, வரலாற்றுடன் விரிவும் செறிவும் மிக்க பதிப்புரையையும் வழங்கியுள்ளார். தான் தோன்றிய காலகட்டத்தின் சமூக, சமய நிலைகளைத் துல்லியமாகப் பிரதிபலிக்கும் கண்ணாடியாக இது திகழ்கிறது. அவற்றின் மீதான விமர்சனமாகவும் விளங்குகிறது என்று அவர் கூறியிருப்பது, இந்த நூல் இன்றைய வாசகர்களைச் சென்றுசேர வேண்டியதன் முக்கியத்துவத்தை உணர்த்துகிறது. - கோபால்
மத்தவிலாசப் பிரகசனம்
பதிப்பாசிரியர்: சா.பாலுசாமி
டிஸ்கவரி பப்ளிகேஷன்ஸ்.
விலை: ரூ.180
தொடர்புக்கு: 044 4855 7525, 87545 07070
வாசிப்பை வலியுறுத்தும் நூல்: வாசிப்புப் பழக்கத்தால் தான் அடைந்த அறிவைப் ‘பெரிதினும் பெரிது கேள்’ என்னும் இந்நூல் வழி விரிவாகச் சொல்லியுள்ளார் காவல் துறை அதிகாரியான த.செந்தில்குமார். தான் எப்படி வாசிப்புப் பழக்கத்துக்குள் ஈர்க்கப்பட்டேன் என்பதைச் சுவைபடச் சொல்லியிருக்கிறார். சிறு வயதில் ராஜேஷ்குமாரிலிருந்து தொடங்கி, விரிவடைந்த தன் வாசிப்பு உலகத்தையும் தெளிவாக இதில் நூலாசிரியர் விவரித்துள்ளார். அதுபோல் வாசிப்பில் நூலகங்கள் வகிக்கக்கூடிய பங்கைத் தனது அனுபவத்தை முன்வைத்து விளம்பியுள்ளார்.
கந்தர் கலிவெண்பா இயற்றிய 17ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த குமரகுருபரர் பற்றித் தனிக் கட்டுரையை நூலாசிரியர் எழுதியிருக்கிறார். மதுரையை ஆண்ட திருமலை நாயக்கரின் வேண்டுகோளுக்கு இணங்க, இவர் ‘மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்’ இயற்றியதாக செந்தில்குமார் இதில் சான்றுகளுடன் சொல்லியிருக்கிறார். பாரதி குறித்தும் தமிழ் அறிஞர்கள் பலர் குறித்தும் தெளிவுற எழுதியுள்ள இந்நூல், மாணவர்களுக்கு நல்ல வாசிப்பு வழிகாட்டி எனலாம். - குமரன்
பெரிதினும் பெரிது கேள்
த.செந்தில்குமார்
விகடன் பிரசுரம்
விலை: ரூ.450
தொடர்புக்கு: 044 42634283