

பெரியவர்களுக்காக ஏராளமான பத்திரிகைகள் உண்டு. வணிகம், விளையாட்டு, சினிமா, தொழில்நுட்பம், கல்வி என்று அவர்களின் விருப்பத்திற்குரிய துறைகளைப் பற்றி வெளிவரும் பருவ இதழ்களும் நிறைய உண்டு. அவற்றோடு ஒப்பிடுகையில் சிறார்களுக்கான பத்திரிகைகளில் இன்னும் போதிய கவனம் உருவாகவில்லையோ என்று எண்ணத் தோன்றுகிறது. சிறார்களுக்கேற்ற விதத்தில் உள்ளடக்கங்களைத் தேர்ந்தெடுப்பதோடு அவர்களது வாசிப்பு ஆர்வத்தை ஊக்குவிக்கும் வகையில் வடிவமைப்பையும் செய்ய வேண்டும்.
தமிழில் அச்சு தொழில்நுட்பம் வளர்ச்சி பெற்ற ஆரம்ப காலத்திலேயே சிறார்களுக்கான இதழ்களும் வெளிவரத் தொடங்கிவிட்டன. 1840-ல் ‘பால தீபிகை’ எனும் சிறுவர் இதழ்தான் தமிழில் வெளியான முதல் சிறார் இதழ் என்று குழந்தை இலக்கியத்தின் மூத்த படைப்பாளி பூவண்ணன் தனது ‘குழந்தை இலக்கிய வரலாறு’ எனும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
1947-ல் வெளிவந்த ‘அம்புலிமாமா’ எனும் சிறார் இதழ் பரவலான கவனிப்போடு வெளிவந்தது. இந்திய தொன்மவியல் கதைகளை முதன்மையாக வைத்து, பல வண்ணப் படங்களோடு குழந்தைகளுக்குக் கதை சொல்வதே ‘அம்புலிமாமா’ இதழின் சிறப்பு. இந்த இதழ் தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, ஆங்கிலம் உட்பட 14 மொழிகளில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. இதே காலகட்டத்தில் ‘டமாரம்’ எனும் சிறுவர் இதழும் வந்தது. 1950-களில் வெளிவந்த இதழ்களில் ‘சாக்லெட்’ மற்றும் ‘தங்கமாமா’ இதழுக்கு குறிப்பிடத்தக்க இடமுண்டு.
1953-ல் புதுக்கோட்டையிலிருந்து ‘டிங்டாங்’ எனும் இதழ் வெளிவந்தது. பிறகு, பாலர் மலர், சங்கு ஆகிய சிறுவர் இதழ்களும் வெளியாகின. 1950-களில் வெளிவந்த ‘அல்வா’ குறிப்பிடத்தக்க சிறார் இதழ். 1970-இல் ‘அன்னம்’. இது 1984-ல் ‘பூந்தளிர்’ என தொடர்ந்த சிறார் இதழ்களின் வரிசையில் அணில் மாமா, கங்கணம், கண்ணன், முயல், ஸ்வீட் என மிக நீண்ட பட்டியலொன்று உண்டு. இவையெல்லாம் இன்றைக்கு இருப்பதுபோல அறிவியல் தொழில்நுட்பமும் நவீன அச்சுக்கூடங்களும் இல்லாத காலத்தில் வெளிவந்த இதழ்கள். ஆனால், இன்றைக்கு நவீன வசதிகள் பலவும் எளிதாகக் கைகூடியிருக்கும் நிலையில் வெளிவரும் இதழ்கள் அதனினும் மேம்பட்டதாக இருக்க வேண்டாமா..?
குழந்தைகளுக்கான கதைகள் எனும் பெயரில் பெரியவர்களின் மொழியிலும், அறிவுரை சொல்பவையாகவுமே பெரும்பாலான கதைகள் இருக்கின்றன. குழந்தைகளுக்கான மொழியாக்கப் படைப்புகளைத் தரும் விதமும் அவ்வளவு உவப்பானதாக இல்லை. எந்நேரமும் கையில் செல்பேசியிலும், வீடியோ கேம்களிலும் களித்திருக்கும் குழந்தைகளை மீட்டெடுக்க, சிறார் இதழ்கள் அவர்களது கவனத்தைச் சுண்டி இழுப்பதாக இருக்க வேண்டும். அவ்வாறில்லாமல், சிறார் இதழ் எனும் அறிவிப்போடு வருவதால் மட்டும் குழந்தைகள் வாசித்துவிடப் போவதில்லை. இன்றைய குழந்தைகளைச் சரியான முறையில் வாசிப்பை நோக்கி வழிநடத்திச் செல்வதில் சிறார் இதழ்களுக்கும் முக்கிய பங்குண்டு. அந்தத் தடம் நோக்கி, சிறார் இதழ்கள் நடைபோட வேண்டியது அவசியம்.