Last Updated : 12 Oct, 2017 10:52 AM

 

Published : 12 Oct 2017 10:52 AM
Last Updated : 12 Oct 2017 10:52 AM

பெண் கதை எனும் பெருங்கதை 15: ‘கில்க் ’ பாட்டி

அவ்வை குறுக்கிட்டாள். “மகளே, ஏழு படி நெல்லை அரிசி ஆக்கினால் மூணரைப் படி அரிசி அல்லவா கிடைக்கும்?”

“அதுதான் வளமை. ஆனா... அது என்னமோ தடவைக்குத் தடவை நெல்லுக்குச் சரிபாதி அரிசி என்கிறது இவர்கள் கொண்டு வரும் நெல்லில் இல்லை.”

“அந்த நிலத்துக்காரன் உன் அண்ணன்மாருக்கு பொக்கு நெல் கலந்த நெல்லைத்தான் அளக்கிறான்” என்றாள் அவ்வை.

“அப்படியும் செய்வார்களா, பாட்டி?”

“பெரும்பாலும் செய்ய மாட்டார்கள்?’’

“ பிறகெப்படிக் குறையும்? இதை அவனிடம் சொன்னார்களாமா?”

“அதுதான் அவனுடைய பலம்.’’

“வேலையில் இருந்து நிப்பாட்டிவிட்டால்?’’

“கூலியைக் குறைத்தால் வேலையும் குறையும் என்பதை அவனை அறிந்து கொள்ள வைக்க வேண்டும்.’’

“மாட்டின் தீனியைக் குறைத்தால் கிடைக்கும் பாலின் அளவும் குறைந்து போகும் என்பதை அறிய மாட்டார்களா?’’

“பார் மகளே, நீ அணிய வேண்டிய ஆடையின் அளவு எவ்வளவுக்குக் காணாமல் போய்விட்டது என்று.”

இந்த அவ்வையார் வந்து அக்காலத்தியப் பெண்களுக்குச் சொன்னதுதான் இந்த அவ்வையார் நோம்பு என்கிற ‘செவ்வாக் கிழமை விரதம்’.

இந்த விரதத்துக்குப் பிறகு பெண்களுக்குப் பயம் தெளிந்தது. ஆரோக்கியம் தழும்பியது. கிடைக்க வேண்டிய தனிமை கிடைத்தது.

அதனால்தான் விரதத்து அன்றைக்கு அவ்வையாரைப் பற்றி பேசப்படுகிறது.

ஓசை கேட்காமல் கண்களால் அவர்களுக்குள் ‘பேசும் கலை’ வந்தது.

போற்றிப் பாடடிப் பெண்ணே...

‘செவ்வாக் கிழமை விரத’த்தைக் கண்டுபிடிச்சி ஏற்பாடு பண்ணிய அவ்வையாருக்கு ஒரு போற்றி சொல்ல வேண்டும்.

ஒரு காலத்தில் இந்த விரதம் ‘ஜேஜே’ என்றிருந்தது.

ஒரே சமயத்தில் ஒரு ஊரில் ரெண்டு மூன்று இடங்களில் கூட நடக்கும். இவை எல்லாம் எழுத்தை சொல்லித் தராத பள்ளிகளாக எல்லா கிராமங்களிலும் நடந்தன.

வயசான பாட்டிமார்கள்தான் இதுக்கெல்லாம் நல்ல வாத்திமார்கள். பாடம் என்பது கதைகள் சொல்லுவது மூலமாகத்தான்! கேட்டறியாத சம்பவங்கள், கதைகளெல்லாம் கேட்கலாம் அங்கே.

‘கில்க் ’ பாட்டியின் வருகை...

ஒரு பாட்டியைச் சுற்றி சதா இளம் பெண் பிள்ளைகளின் கூட்டம் எப்பவும் மொய்த்தபடியே இருக்கும்.

ஒருநாள் அந்தப் பாட்டியிடம் கல்யாணமாகாத பெண்ணொருத்தி வந்து பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு கேட்டாள்: “அதென்ன பாட்டி முத்தத்துல வறண்ட முத்தம்... ஈர முத்தம் என்றெல்லாம் கூட இருக்குமா பாட்டி?”

நல்லவேளை. அந்தப் பெண் அப்படி கேட்ட அந்தக் கிழமையில் ‘கில்க்’ பாட்டி வரலை. வந்திருந்தால் இப்படிக் கேள்விகள் எழுந்ததும் பளிச்சென்று எழுந்து நின்று ‘கில்க் மல்க் கில்க் மல்க்’ என்று சொல்லிக் கொண்டு ரெண்டு கைகளையும் இடுப்பில் வைத்து ஒரு நாட்டியம் ஆடி, அந்த இடத்தை மகிழ்வித்து சிரிப்பு மூட்டி விட்டிருப்பாள்.

‘கில்க்’ பாட்டி எப்பவும் படு கலகலப்புதான். ரொம்பச் சின்ன வயசிலேயே வெள்ளைச் சேலை கட்டும்படியாகிவிட்டது அவளுக்கு.

இளவட்டப் பிள்ளைகளை தூரத்தில் கண்டு விட்டாலே பட்டப் பெயர் வைத்தே கூப்பிடுவாள் ‘கில்க்’ பாட்டி. அவள் வராத விரத நாட்கள் சப்பென்றுதான் இருக்கும். பயங்கரக் கெட்ட வார்த்தைக் கதைகளெல்லாம் சுடச் சுடச் சொல்லுவாள்.

என்றாலும் இந்தப் பாட்டியையும் அந்தப் பாட்டிக்கு வலத்தையில் போட்டு ஓட்டலாம்.

கேள்வி கேட்ட இந்தப் பொண்ணுக்கு இன்னும் கலியாணம் ஆகலை என்பதால் ‘ ‘அடி பெண்ணே ஒனக்கு அதுக்குள்ளேயே என்ன அவசரம்?’’ என்று கேட்டு கும்பலைக் கலகலப்பாக்கினாள்.

முத்தத்தில்தான் எத்தனை வகை!

முன்பு ஒரு சமயம் இதே பாட்டிதான், பச்சைக் குழந்தைகளை எப்படி முத்தமிட வேண்டும் என்று சொல்லிக் காட்டியிருந்தாள். பச்சைக் குழந்தைகளுக்கு உண்டானதே தொட்டு முத்தம்தான். குழந்தைகளைத் தொட்ட பிறகு, தொட்ட அந்த விரல்களைக் குவித்து அந்த விரல்களின் நுனியைத்தான் முத்தமிட வேண்டும்.

இதேபோல் பெரியவர்களுக்கும் உண்டு; கொடுத்த பொருளை வாங்கியதும் அந்தப் பொருளை முத்தமிடுவது. இன்னொன்று எதையும் தொடாமல் காற்றுவழி முத்தம் என்பது அனைவரும் தெரிஞ்சதுதான்.

ஒரு பச்சைக் குழந்தையை முத்தமிட்டே ஆக வேண்டும் என்றால் அதன் உள்ளங்காலில் இடலாம். அதே குழந்தை நடக்க ஆரம்பித்துவிட்டால் அதன் நாடி நுனியைத் தொட்டு, தொட்ட விரல்களைக் குவித்து முத்தமிட்டுக் கொள்ளலாம்.

பெற்ற தாய் மட்டும் எப்பவும் எந்த இடத்திலும் தன் குழந்தையை முத்தமிட்டுக் கொள்ளலாம்.

இந்த சமயத்தில் கண்ணுப் பாட்டியின் நினைப்பு வரும். கண்ணுப் பாட்டி என்பது பெயர் இல்லை. அவளுக்குக் கண் தெரியாமல் போனதால் கண்ணுப் பாட்டியானாள்.

நோம்பு நடக்கும் இடத்துக்கு எல்லா பெண்களும் வந்ததுமே... ‘கண்ணுப் பாட்டி வந்தாச்சா?’ என்றுதான் கேட்பார்கள். அவளைக் கூட்டிக் கொண்டு வரவும் கொண்டு போய் விடவும் மெனக்கிட்டு ஒரு துணை வேண்டும்.அப்படி இருந்தாலும் அவள் அங்கே வந்து சேர வேண்டும் என்று எல்லோரும் எதிர்ப்பார்ப்பார்கள்.

அவள் வந்தால்தான் ‘சபை’ கலகலப்படையும். பார்வை இழந்தவர்களுக்கான ஒரு வகை சிரிப்பு முகம் எப்பவும் அவளுக்கு இருக்கும். தூங்கும்போதுதான் மாறும்.

வசதியான வீட்டுக் குடும்பத்தில் பிறந்தவள். வந்த வீட்டுக்கு நிறைய்ய ‘அய்வேஜு’ (செல்வம்) கொண்டு வந்தவள். பெரிய்ய வண்டிக் கம்மல்களும், கழுத்து மூடிய கழுத்துப் பட்டையும் அணிந்தவள்.

- கதைகள் பேசும்...

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x