Last Updated : 07 Oct, 2017 10:08 AM

Published : 07 Oct 2017 10:08 AM
Last Updated : 07 Oct 2017 10:08 AM

கசுவோ இஷிகுரோ: தொலைந்த ஞாபகங்களும் மிதக்கும் உலகங்களும்

லக்கியத்துக்கான நோபல் பரிசை இந்த ஆண்டு வென்றிருப்பவர் கசுவோ இஷிகுரோ. பெயரைப் பார்த்ததும் ஜப்பானிய மொழி எழுத்தாளர் என்று தோன்றும். இவர் ஆங்கில எழுத்தாளர். புக்கர் பரிசை வென்றவர். மேலும், மூன்று முறை புக்கர் விருதுக்கான பட்டியலில் இவரது நாவல்கள் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளன.

1954-ல் ஜப்பானின் நாகசாகியில் பிறந்து, தனது ஆறாவது வயதில் பெற்றோர்களுடன் பிரிட்டனுக்கு குடியேறிவிட்டவர் இஷிகுரோ. கடல் ஆய்வாளரான இஷிகுரோவின் தந்தைக்குக் குடும்பத்தோடு தாய்நாடு திரும்பிவிடவேண்டுமென்ற ஆசை இறுதிவரை நிறைவேறவேயில்லை. ஆங்கிலேயச் சூழலிலேயே வளர்ந்த இஷிகுரோ ஜப்பானுக்குத் திரும்பியிருந்தால் இப்போது அவர் எழுதியிருக்கும் நாவல்களை எழுதியிருப்பாரா என்பதும் சந்தேகம்தான். அவரும், அவருடைய குடும்பத்தினரும் வசித்த நாகசாகி, ஷாங்காய், ஆங்கிலேய கிராமப் பகுதிகள் இவரது நாவல்களில் அடிக்கடி வந்தாலும் அவை கதைக்களன்களாக இல்லாமல் எப்போதும் ஒருவிதத் தொலைதூர ஞாபகங்களாக, சில வேளைகளில் உருவகங்களாக மட்டுமே தென்படுகின்றன.

இஷிகுரோ சுறுசுறுப்பான எழுத்தாளர் அல்ல. ஹாருகி முரகாமியின் வேகத்தோடு இவரை ஒப்பிடவே முடியாது. 1982-ல் இஷிகுரோவின் முதல் நாவல் ‘எ பேல் வியூ ஆஃப் ஹில்ஸ்’ வெளிவந்தது. இன்றுவரை ஏழு நாவல்களும் ஒரேயொரு சிறுகதைத் தொகுப்பு மட்டுமே வெளிவந்துள்ளன.

கலைஞனின் மருட்சி

இஷிகுரோவின் நாவல்கள் பரபரப்பான வாசிப்புக்கு உரியவை அல்ல. மிகு உணர்ச்சியோடு விஸ்தாரமாக எழுத வேண்டிய கதைகளைக்கூட , ஆரவாரமற்ற வாக்கியங்களில், வேண்டுமென்றே குறைத்துக் கூறப்படும் தொனியில் எழுதுகிறவர். நாவலில் பெரிதாக எதுவும் நிகழாவிட்டாலும் இன்னதென்று விளங்காத அச்சமும் பதற்றமும் வாசிப்பவர்களை சூழ்ந்துகொள்கின்றன. மர்மக் கதைகள் உண்டாக்கும் அச்சவுணர்வு அல்ல இது. தன்னை எப்போதும் அந்நியனாகவே உணர்ந்துவரும் கலைஞனின் மருட்சி அது.

இவரது முதல் நாவலான ‘எ பேல் வியூ ஆஃப் ஹில்ஸ்’ நாவல் இங்கிலாந்தில் வசிக்கும், கணவனை இழந்த ஒரு நடுத்தர வயது ஜப்பானியப் பெண் எட்சுகோ சொல்வதாக அமைக்கப்பட்டிருக்கிறது. இவள் மகள் கெய்கோவின் தற்கொலை, எட்சுகோவுக்கு நாகசாகி ஞாபகங்களைத் தூண்டிவிடுகிறது. பாரம்பரியம் மிக்க ஜப்பானிய வேர்களை உதிர்த்துவிட்டு மேற்கில் குடியேறும் சக நாட்டவர்களின் ஒட்டுமொத்த ஆன்மிகச் சிக்கல்கள் மிக அழுத்தமாக முதல் நாவலிலேயே சொல்லப்படுகிறது.

இஷிகுரோவின் இரண்டாவது நாவலான ‘அன் ஆர்டிஸ்ட் ஆஃப் த ஃப்ளோட்டிங் வேர்ல்டு’ போருக்குப் பிந்தைய ஜப்பானியர்களின் - குறிப்பாக கலைஞர்களின் - குற்றவுணர்ச்சியை நேரடியாகச் சொல்கிறது. மசூஜி ஓனோ என்ற ஓவியனுக்கு ஓய்வுகாலம் சித்திரவதையாக இருக்கிறது. போர்க் குற்றங்களில் தனக்கும் மறைமுகப் பங்கு இருப்பதாக நினைக்கிறார். கடந்த காலமும் நிகழ்காலமும் முன்னுக்குப் பின் முரணாக அந்த ஓவியனின் நினைவுகளில் புகுந்து அலைக்கழிக்கும் இந்த உள்முகமான படைப்பை இஷிகுரோவின் மிகச் சிறந்த நாவலாகப் பல விமர்சகர்கள் கருதுகிறார்கள்.

முதல் இரு நாவல்களும் ஜப்பானியர்களை மையப்படுத்தி இருந்ததால் இஷிகுரோ பிரக்ஞைபூர்வமாக அதிலிருந்து விலகி ஒரு ஆங்கிலேய நாவலாக ’ரிமெய்ன்ஸ் ஆஃப் த டே’யை எழுதினார். 1989-ல் புக்கர் பரிசுபெற்ற இந்நாவலில் ஆங்கிலேயச் சமூகத்தின் தனித்துவ அடையாளமான ‘ பட்லர்’ ஒருவரை அற்புதமாகக் காட்சிப்படுத்துகிறார். அந்நிய தேசத்தவராக இங்கிலாந்தில் வாழ்ந்துவரும் இஷிகுரோவுக்கு ஆங்கிலேயர்களின் பாசாங்குகளும் பிரபுத்துவத் தோரணைகளும் அறநெறிப் பிரகடனங்களும் ஒருவித கேலியுணர்வை நிச்சயம் தூண்டியிருக்கும். அந்த பட்லரின் அதீதப் பணிவுக்கும் தாழ்மையான நடத்தைக்கும் மரியாதையான பேச்சுக்கும் பின்னால் இஷிகுரோவின் கூர்மையான பகடி ஒளிந்திருக்கிறது. இந்நாவல் திரைப்படமாகவும் எடுக்கப்பட்டு அகாடமி விருதுப் பட்டியலில் இடம்பெற்றது.

ருசிகர்

இந்த நாவல்களுக்குப் பிறகு ‘வென் வீ வேர் ஆர்ஃபன்ஸ்’, ‘அன்கன்ஸோல்டு’, ‘நெவர் லெட் மீ கோ’, ‘த பரீட் ஜயன்ட்’ ஆகிய நாவல்கள் இதுவரை வந்துள்ளன. இஷிகுரோ மிக அரிதாகவே சிறுகதைகள் எழுதியுள்ளார். அவருடைய ஒரு சிறுகதையையும் , வானொலி நாடகம் ஒன்றையும் நான் மொழிபெயர்த்திருக்கிறேன். அந்த நாடகத்தின் கருப்பொருள் வாசிப்பவரை திகைக்க வைக்கும். ‘கோமெய்’ (தமிழில் ‘ருசிகர்’) நாடகத்தின் நாயகன் ஒரு பிரபு. உலகின் மிக உன்னதமான, எல்லா வகையான உணவு வகைகளையும் ருசித்துப் பார்ப்பதுதான் அவனது லட்சியம். இதுவரை உலகத்தில் யாரும் சாப்பிட்டிருக்காத ஒன்றைச் சுவைத்துப் பார்க்க விரும்புகிறான். பிசாசை! ஆம், ஒரு பிசாசைப் பிடித்து அதை அடுப்பில் இட்டுச் சமைத்து, ருசி பார்க்கிறான்! இந்த விநோதமான பரிமாணமும் இஷிகுரோவைச் சேர்ந்ததுதான்.

விலகலான பார்வை

இஷிகுரோ ஜப்பானியராகவும் அதுவும் நாகசாகியில் அணுகுண்டு விழுந்ததற்கு 9 ஆண்டுகள் கழித்துப் பிறந்தவராகவும் இருப்பதால் ஜப்பானியப் பாதிப்புகள் அவரிடம் ஆழமாகப் பதிந்திருப்பதாகவே எவருக்கும் தோன்றும். ஆனால், போரை அவர் நேரடியாக எழுதியதில்லை. போருக்குப் பிந்தைய ஜப்பானிய மனநிலை, ஜப்பானியர்களின் புலம்பெயர்தல், அந்நிய தேசத்தில் தமது கலாச்சார வேர்களை இழப்பது – இவை எல்லாமே ஒரு விலகலான பார்வையில் சொல்லப்படுகின்றன.

எவ்விதப் பரபரப்பையும் காட்டாத காட்சியமைப்புகள், கிராமப்புற நெடுஞ்சாலையில் நகர்வதுபோல இஷிகுரோவின் நாவல்களில் மெதுவாக நகர்ந்தாலும் கண்ணுக்குப் புலப்படாத இருண்மையும் முன்ஜென்மத்து துயரம்போல் ஒரு தொனியும் அடிநாதமாக இருக்கின்றன. இஷிகுரோவின் நாவல்களை வாசிப்பது ஒரு அலாதியான அனுபவம். அவற்றின் நிச்சலனமான மேற்பரப்பின் அடியில் பொதிந்திருக்கும் நுட்பங்களையும் அதிர்வுகளையும் உள்வாங்கிக்கொள்பவர்களுக்கு அவர் எத்தகைய சாதுவேடம் பூண்ட உக்கிரமான எழுத்தாளர் என்பது புரியும். அவருக்கு நோபல் பரிசு வழங்கப்பட்டிருப்பதை யாராலும் குறை சொல்ல முடியாது. உலகின் பரவலான கவனம் இப்போது இஷிகுரோவின் மீது குவியும். உலகின் மகத்தான எழுத்தாளர்களுள் ஒருவராகப் பரவலாக அவர் அறியப்படுவார். இஷிகுரோவின் நாவல்கள் தமிழிலும் வரக்கூடும். இதற்காகவே நோபல் குழுவுக்கு நன்றி கூற வேண்டும்.

- ஜி. குப்புசாமி, ஓரான் பாமுக்கின் ‘என் பெயர் சிவப்பு’ உள்ளிட்ட நாவல்களின் தமிழ் மொழிபெயர்ப்பாளர்.

தொடர்புக்கு: gkuppuswamy62@yahoo.com

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x