Published : 21 Oct 2017 11:02 AM
Last Updated : 21 Oct 2017 11:02 AM

தொடுகறி: ஜி.அசோகனின் இலக்கிய எச்சரிக்கை

‘குடும்ப நாவல்’ வரிசையில் ஜி.நாகராஜன், அசோகமித்திரன், சுந்தர ராமசாமி, பூமணி, ஹெப்ஸிபா ஜேசுதாசன் போன்றோரின் நாவல்களை மலிவுப் பதிப்பாக வெளியிட்டு அசத்தியவர் ஜி.அசோகன். அந்த வரிசையில் ப. சிங்காரத்தின் ‘புயலிலே ஒரு தோணி’ நாவலை ஒரு எச்சரிக்கையோடு வெளியிட்டிருக்கிறார்: ‘பொழுது போகவில்லை, தூக்கம் வரவில்லை, அதற்காகப் படிக்கிறேன்… என்பவர்கள் தயவுசெய்து இதைப் படிக்க வேண்டாம். தமிழ் நவீன உலகின் சிறந்த இலக்கியப் படைப்புகளை அறிந்துகொள்ள அல்ல புரிந்துகொள்ள விரும்புவர்கள் மட்டுமே படிக்கவும். தமிழை நேசி! தமிழை வாசி!’

இன்குலாபுக்கு உண்மையான அஞ்சலி!

டிசம்பர் மாதம் வந்தால் கவிஞர் இன்குலாப் மறைந்து ஓராண்டு நிறைவடையப்போகிறது. அவரது நினைவு நாளையொட்டி அவருடைய படைப்புகள் அனைத்தையும் தொகுக்கும் பணியை இன்குலாப் அறக்கட்டளை செய்துவருகிறது. 1972-லிருந்து 2012 வரை இன்குலாபின் 10 கவிதைத் தொகுப்புகள் (அவ்வப்போதைய முழுத் தொகுப்புகள் உட்பட) வெளியாகியிருக்கின்றன. 2012-க்குப் பின்னர் அவர் எழுதி, தொகுப்படாத கவிதைகளையும் உள்ளடக்கி, இன்குலாபுக்கு உண்மையான அஞ்சலியாக இந்த முழுத் தொகுப்பு இருக்கும்.

‘வாசக சாலை’ விருதுகள்

இளம் வாசகர்கள் ஒருங்கிணைந்து நடத்தும் ‘வாசக சாலை’ இலக்கிய அமைப்பின் மூன்றாவது ஆண்டு விழா டிசம்பர் மாதம் நடக்கவுள்ளது. அதை ஒட்டி இவ்வமைப்பு சார்பாக, சிறந்த நாவல், சிறுகதைத் தொகுப்பு, கவிதைத் தொகுப்பு,கட்டுரைத் தொகுப்பு மற்றும் சிறந்த அறிமுக எழுத்தாளர் ஆகிய 5 பிரிவுகளின் கீழ் தமிழ் இலக்கிய விருதுகள் வழங்கப்படவுள்ளன. இதற்காக நவம்பர்-2016 முதல் அக்டோபர்-2017 வரையிலான காலகட்டத்தில் வெளியான படைப்புகளில், மேற்கூறிய ஐந்து பிரிவுகளின் கீழ் வாசகர்கள் தங்கள் பரிந்துரைகளை வரும் 31.10.2017-க்குள் vasagasalai@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பலாம். பதிப்பாளர்கள், படைப்பாளிகள் அல்லது வாசக நண்பர்கள் தாங்கள் விரும்பும் படைப்பின் ஒரே ஒரு பிரதியை மட்டும் விருதுத் தேர்வுக்கு அனுப்பி வைத்தால் போதுமானது. மேலும் விவரங்களுக்கு: 9942633833.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x