

பேராசிரியர் க.பஞ்சாங்கம் சிறப்பிதழாக வெளிவந்துள்ளது ‘இலக்கிய வெளி’ சிற்றிதழ். பஞ்சாங்கத்தின் திறனாய்வு களை முன்வைத்துப் பேராசிரியர் பா.இரவிக்குமாரின் கட்டுரை இதில் இடம் பெற்றுள்ளது. பஞ்சாங்கத்தின் பெண்ணியத் திறனாய்வு குறித்து இரா.ஸ்ரீவித்யாவும் பாரதியியலுக்கு பஞ்சாங்கம் வழங்கிய பங்களிப்புகள் குறித்து இரா.வீரமணியும் கட்டுரைகள் எழுதியுள்ளனர்.
பஞ்சாங்கத்தின் ‘அக்கா’ நாவல் குறித்த இரா.பிரபாவின் கட்டுரையும் கவிதைகள் குறித்த ந.யூசுப் ஷெரீபின் கட்டுரையும் தொகுக்கப்பட்டுள்ளன. பா.இரவிக்குமார், அகில் சாம்பசிவம் ஆகிய இருவரும் மேற்கொண்ட பஞ்சாங்கத்தின் நேர்காணலும் அவரது ஆளுமையைப் பறைசாற்றுகிறது.
இலக்கியவெளி
அரையாண்டு இதழ்
ஆசிரியர்: அகில் சாம்பசிவம்
விலை: ரூ.150
தொடர்புக்கு: 9840430984
கபிலர் பாடிய பண்பாடு
பத்துப்பாட்டுத் தொகுப்புகளில் ஒன்று குறிஞ்சிப்பாட்டு. ஆரிய அரசன் பிரகத்தனுக்குத் தமிழ்ப் பண்பாட்டை உணர்த்த வேண்டி, புலவர் கபிலரால் பாடப்பெற்றதாகும். இதில் களவுநெறியையும் கற்புநெறியையும் அந்த ஆரிய அரசனுக்கு கபிலர் விளக்கியிருப்பார். இந்தக் குறிஞ்சிப் பாட்டின் பாடல்களின் கவித்துவம் பற்றிய ஒரு விவரிப்பு நூல், ‘காதல் கதை சொல்லட்டுமா?’ கபிலரின் வரிகளை நூலாசிரியர் தமிழ்க்காரி அழகாக வாசகர்களுக்குச் சுவைபட விளம்பியுள்ளார்.
சங்கத் தமிழ் வரிகளை, ஒரு நவீனக் கவிதைபோல் மாற்றியிருக்கிறார். சங்க காலப் பெண்களின் எழில்மிகு விளையாட்டுகள், அவர்கள் காதலால் படும் இன்ப வேதனை எல்லாம் கபிலரின் பாட்டுகள் வழி சொல்லப்பட்டுள்ளது. ஓவியர் மருதுவின் ஓவியங்கள் இந்தக் கட்டுரைகளுக்கு மேலும் அழகு சேர்க்கின்றன.- அழகன்
காதல் கதை சொல்லட்டுமா?
தமிழ்க்காரி
அந்தரி பதிப்பகம்
விலை: ரூ.300
தொடர்புக்கு: 7373736276
மருத்துவமனை அரசியல்: பத்திரிகையாளர் ‘காலச்சக்கரம்’ நரசிம்மா பல வகையான நாவல்களை எழுதிவருகிறார். ‘இந்தியன் எக்ஸ்பிரஸ்’ நாளிதழில் தன் இதழியல் பணியைத் தொடங்கி ‘தி இந்து’ நாளிதழின் நிர்வாக ஆசிரியராகப் பணியாற்றி ஓய்வுபெற்றவர் இவர். சமகால அரசியல் நிகழ்வுகளையும் அரசியல் களத்தில் விடைதெரியாத சில கேள்விகளுக்குத் தனது கற்பனையைக் கொண்டு விடையளிக்கும் விதமாக இந்த ‘அரசியல் த்ரில்லர்’ நாவலை எழுதியுள்ளார்.
மருத்துவமனையில் கோமா நிலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் மாநில முதல்வர் தேவாஜி திடீரென்று கண்விழித்து, அங்கு துப்புரவுத் தொழிலாளியாகப் பணியாற்றும் மாதம்மாவிடம் யாருக்கும் தெரியாமல் ஆத்மிகா என்பவரைச் சந்தித்துத் தன்னைக் காப்பாற்றச் சொல்லுமாறு கேட்டுக்கொள்கிறார். இதையடுத்து நடக்கும் பரபரப்பான நிகழ்வுகள் கடந்த காலத்துக்கும் நிகழ் காலத்துக்கும் பயணிக்கும் கதைப் பாணியில் பல திருப்பங்களுடன் விவரிக்கப்பட்டுள்ளன. - நந்தன்
தேவ ரகசியம்
காலச்சக்கரம் நரசிம்மா
வானதி பதிப்பகம்
விலை:ரூ.350
தொடர்புக்கு: 044 2434 2810, 2431 0769