நூல் வெளி: கற்பும் கற்பிதமும்

நூல் வெளி: கற்பும் கற்பிதமும்
Updated on
2 min read

அறுபதுகளில் தமிழ்ச் சிறுகதையில் புதிய பரிசோதனைகளைச் செய்து பார்த்தவர் எழுத்தாளர் பராங்குசம் (இயற்பெயர், கு.ப.ரங்காச்சாரி). ‘பொல்லாத பாசம்’ என்ற பெயரில் வெளிவந்த, ஏற்கெனவே வெளியான தொகுப்பில் சில புதிய கதைகளையும் சேர்த்து கவிஞர் ராணிதிலக் அதே பெயரில் பராங்குசம் கதைகளைத் தொகுத்துள்ளார்.

பராங்குசம் கதைகளில் வெளிப்படும் பச்சையான உண்மையும் அதைச் சொல்லக் கையாளும் உத்தியும் விசேஷமானவை. நம் சமூக ஒழுக்கங்களுக்கு நேரெதிர் நிலையில்தான் யதார்த்தம் இருக்கிறது என்பதை பராங்குசம் கதைகள் தைரியத்துடன் சொல்கின்றன.

‘நான் ரொம்பக் கெட்டவன் என்ற எண்ணம் எனக்கு அவ்வயதில் கொடுத்த திருப்தியை வேறெதுவும் கொடுக்கவில்லை’ என்கிற ஒரு விவரிப்பு ‘அன்றிரவு’ கதையில் வருகிறது. இந்தக் கதைகளில் பல கதாபாத்திரங்கள் குடும்ப ஒழுக்கத்துக்கு வெளியே இருக்கின்றன. அந்த மனித மனங்களின் குற்றத்தை நோக்கிய ஈர்ப்பும் கதைகளில் இயல்பாகக் கையாளப்பட்டுள்ளது.

‘சரசுவின் தம்பி’ கதை பராங்குசம் கதை சொல்லும் நுட்பத்துக்கான ஒரு உதாரணம். பரீட்சையில் தேறிய இருவரிடம் கேட்கப்படும் ஒரு கேள்வி, ‘இனி என்ன செய்யப்போவதாக உத்தேசம்?’ இந்தக் கேள்வி, கதைக்குள் மூன்று முறை கேட்கப்படுகிறது.

இந்தக் கேள்வி காலத்தைத் துண்டாக்குகிறது. மாலதியும் ராகவனும் அதன் இரு பகுதிகளுக்குள் மாட்டிக்கொள்கிறார்கள். மாலதியின் அப்பாவும் ராகவனின் தாய்மாமனுமாக இருப்பவர்தான் மேற்படி அந்தக் கேள்வியைக் கேட்கிறார். ‘கற்பு’ சமூகக் கற்பிதங்களைத் தைரியத்துடன் பேசுகிறது. ஏழு வயதில் மணமாகி, ஒன்பது வயதில் விதவையான கோமதி, இதன் நாயகி. பெண்கள் விடுதலையில் ஆர்வம் கொண்ட ஒரு நிறுவனம் வழியே படித்து ஆசிரியை ஆகிறாள்.

தன்னைப் போன்ற பெண்களுக்கு உறவு விலக்கு என்றும் அதை மீறுவது பாவச் செயல் எனவும் புரிந்துவைத்துக்கொள்கிறாள். ஆனால், அதைக் கடக்க அவள் மனம் படும்பாடு, அவளை மருத்துவ ஆலோசனையில் கொண்டுபோய்விடுகிறது. மருத்துவர் அந்த நோயைக் கண்டுபிடித்தும் விடுகிறார். அது ‘கற்பு’. பராங்குசத்தின் தைரியத்துக்கும் நுட்பத்துக்கும் இந்தக் கதை ஒரு சான்று.

பராங்குசத்தின் இந்தக் கதைகள் பலவும் ஆண்-பெண் உறவு சார்ந்து எழுதப்பட்டுள்ளன. காமம், பாசம் என்கிற உணர்ச்சிகளுக்கு இடையில் உழலும் இந்த இரு உறவு நிலைகளின் வேதனை, மனக் குழப்பம் எல்லாக் கதைகளிலும் இயக்கமாக இருக்கின்றன. இம்மாதிரிக் கதைகளைச் சொல்ல பச்சையான மன மொழியை விவரிப்புமொழியாகப் பராங்குசம் பயன்படுத்தியுள்ளார். இத்துடன் கதைகளில் தொழிற்பட்டிருக்கும் தன்னிலையைப் போன்ற விவரிப்பு வாசகர்களுடன் உணர்வுபூர்வமான பேச்சுக்கு ஒத்தாசையாகிறது.

தலைப்புக் கதையான ‘பொல்லாத பாச’த்தில் ஒரு சரஸ்வதி வெகு காலத்துக்கு அப்பால் இருந்து வருகிறாள். அவளுக்கு ஒரு முறை தவறிய உறவு. அது குறித்த புகார் எதுவும் அவளுக்கு இல்லை. அதில் தனக்கும் பங்குண்டு என்றரீதியில் அதை இயல்பாக ஏற்றுக்கொண்டவள். முறை தவறிப் பிறந்த குழந்தையை ஒரு மருத்துவரிடம் கொடுத்துவிட்டு, இனி உறவு சொல்லி வரமாட்டேன் என உத்தரவாதமும் தந்து சென்றவள் அவள். தன் மகளை விசாரித்து இப்போது வந்திருக்கிறாள்.

அதைப் பொல்லாத பாசம் என்கிறார் பராங்குசம். முதலிரவு அனுபவத்தைத் தன் நண்பனுக்கு எழுதும் கடிதமாக விரியும் ‘அன்றிரவு’ம் பராங்குசத்தின் தனிப் பாணிக் கதை. முதலிரவில் தன் மனைவிக்காகக் காத்திருக்கும் அவன், தன் முந்தைய பெண் உறவுகளை அசைபோடுகிறான். அவையெல்லாம் துண்டுத் துண்டுக் காட்சிகளாகச் சொல்லப்பட்டுள்ளன. காமத்தைவிட அந்தக் குற்றம் தரும் சாகச உணர்வை இந்தக் கதை சித்தரிக்கிறது.

‘தெளிவு’ கதையில் இதேபோல் ஒரு ஆணின் இறந்த காலப் பெண்கள் வருகிறார்கள். குழந்தைமையும் பெண்மையும் ஒருங்கே பெற்ற ஒரு பேருருப் பெண்மை குற்றம், பாவம் போன்ற கற்பிதங்களிலிருந்து அவனைத் தெளிவுபெறச் செய்கிறாள். ‘விதி விலக்கு’ கதையில் குடும்பத்துப் பெண்களின் உதாரண மனுஷியாக ரமாவை பராங்குசம் கதைக்குள் சிருஷ்டித்துள்ளார்.

தமிழ்ச் சிறுகதை உள்ளடக்கரீதியில் இன்று பலப்பட்டுள்ளது. பதிவுசெய்யப்படாத சமூகங்களின் வாழ்க்கையும் பண்பாடும் கதையில் வெளிப்பட்டுள்ளன. ஆனால், பிறழ் உறவுகளை அதிர்ச்சியூட்டும் மொழிபெயர்ப்பு விவரிப்புகள் கொண்டு எழுதும் வறட்டுப் போக்கு பிற்காலத்தில் அதிகரித்தது ஒரு பாணியாகியிருக்கிறது.

மேலை நாட்டு நுட்பம் என்ற பெயரில் வார்த்தைத் திருகலும் அதிகமாகியுள்ளன. இந்தப் பின்னணியில் அறுபதுகளில் எழுதப்பட்டுள்ள பராங்குசத்தின் கதைகள் கொண்டுள்ள நுட்பமும் எளிமையும் தமிழ்ச் சிறுகதை உலகம் கவனிக்க வேண்டியவை.

பொல்லாத பாசம்
பராங்குசம் கதைகள்

தொகுப்பு: ராணிதிலக்
புது எழுத்து
விலை: ரூ.280
தொடர்புக்கு: 8925061999

Loading content, please wait...

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in