செல்லப் பிராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க லண்டனில் இருந்து காஞ்சிபுரம் வந்த இளைஞர்

செல்லப் பிராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க லண்டனில் இருந்து காஞ்சிபுரம் வந்த இளைஞர்
Updated on: 
1 min read

காஞ்சிபுரம்: தான் ஆசையாய் வளர்த்த செல்லப் பிராணியான நாயின் மரணச் செய்தி கேட்டு காஞ்சிபுரம் இளைஞர் ஒருவர், லண்டனில் இருந்து விமானத்தில் வந்து இறுதிச் சடங்கில் பங்கேற்றச் சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

காஞ்சிபுரம் பொன்னேரிக்கரை அருகே உள்ள இந்திரா நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் பழனிராஜ் - ஞானசௌந்தரி தம்பதியினர். பழனிராஜ் கல்லூரிப் பேராசிரியராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவர். இவர்களின் மகன் லோகேஷ், முதுநிலை கணினி அறிவியல் படித்துவிட்டு லண்டனில் பணியாற்றி வருவதோடு அங்கேயே மேல்படிப்பும் படித்து வருகிறார்.

இவர்கள் வீட்டில் கடந்த 10 ஆண்டுகளுக்கு மேலாக 'வீரூ' என்ற உயர் ரக நாய் ஒன்றை வளர்த்து வந்தனர். அந்த நாயும் குடும்பத்தில் உள்ளவர்கள் போலவே அந்த வீட்டில் வளர்ந்து வந்தது.

மேல்படிப்புக்காக லோகேஷ் லண்டன் சென்றுவிட்ட நிலையில், இவரது பெற்றோர் வீருவை கவனித்து கொண்டனர்.

இந்நிலையில், நேற்று வீரூவுக்கு திடீரென உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அந்த நாயை மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர். வழியிலேயே அந்த நாய் இறந்துவிட்டது. இது குறித்து லண்டனில் உள்ள லோகேஷுக்குத் தகவல் தெரிவித்தனர்.

நாய் இறந்த தகவல் கேட்ட உடனேயே கதறி அழுத லோகேஷ் உடனடியாக லண்டனில் இருந்து காஞ்சிபுரம் புறப்படுவதாகத் தெரிவித்தார். உடனடியாக டிக்கெட் எடுத்ததால் விமானத்துக்கு கூடுதல் செலவு ஏற்பட்டாலும் பயணம் மேற்கொண்டு காஞ்சிபுரம் வந்தடைந்த அவர், உயிரிழந்த செல்ல நாயின் உடலைக் கண்டு கண்ணீர் விட்டு கதறி அழுது அஞ்சலி செலுத்தினார்.

குடும்பத்தினர் வீரூவின் உடலை உறைப்பெட்டியில் (ஃப்ரீசர் பாக்ஸ்) வைத்து மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தி வந்தனர். உறவினர்களும் நண்பர்களும் வந்து அஞ்சலி செலுத்தினர். பின்னர் மனிதர்களுக்குச் செய்வது போன்றே அனைத்து இறுதிச் சடங்குகளும் செய்யப்பட்டு வீரூவின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டது.

தான் வளர்த்த செல்ல நாய்க்காகப் பல லட்சம் ரூபாய் செலவு செய்து லண்டனில் இருந்து விரைந்து வந்து இளைஞர் ஒருவர் அஞ்சலி செலுத்தி இறுதிச் சடங்கில் பங்கேற்றது அப்பகுதி மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

செல்லப் பிராணியின் இறுதிச் சடங்கில் பங்கேற்க லண்டனில் இருந்து காஞ்சிபுரம் வந்த இளைஞர்
‘இடைத்தேர்தல் செலவுகளை முதல்வர் விஜய் ஏற்க வேண்டும்’ - கே.பி.ராமலிங்கம் விமர்சனம்

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in