ஞாபக மறதி நோயை முன்கூட்டியே கண்டறிந்தால் தீவிரத்தை குறைக்கலாம்: மருத்துவர்கள் அறிவுறுத்தல்

செப்.21 - இன்று: உலக அல்ஸெய்மர் தினம்
ஞாபக மறதி நோயை முன்கூட்டியே கண்டறிந்தால் தீவிரத்தை குறைக்கலாம்: மருத்துவர்கள் அறிவுறுத்தல்

படம்: மெட்டா ஏஐ 

Updated on
1 min read

மதுரை: மறதி நோயைப் பற்றிய விழிப்புணர்வை உலகுக்கு உணர்த்தவே, ஆண்டுதோறும் செப்டம்பர் 21-ம் தேதி' உலக அல்ஸெய்மர் தினம்' கடைப்பிடிக்கப்படுகிறது.

இதுகுறித்து மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மூளை நரம்பியல் துறை மருத்துவப் பேராசிரியர் சி.ஜஸ்டின் கூறியது: அல்ஸெய்மர் நோய் என்பது மூளையின் நரம்பு செல்கள் படிப்படியாகச் சிதைவடைந்து, நினைவாற்றல், சிந்தனை, மொழித்திறன், முடிவெடுக்கும் திறன் உள்ளிட்டவை குறையும் நரம்பியல் சிதைவு நோயாகும். முதுமை, பரம்பரை சார்ந்த மற்றும் மரபணு மாற்றம் உள்ளிட்ட காரணங்களால் இந்நோய் ஏற்படுகிறது.

தொடக்க நிலையில் சமீபத்தில் நடந்த நிகழ்வுகளை மறந்துவிடுதல், ஒரே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்பது, பொருட்களை வைத்த இடத்தை மறந்து விடுதல், சரியான வார்த்தையைத் தேர்ந்தெடுக்கச் சிரமப்படுதல் உள்ளிட்டவை அறிகுறிகளாகக் காணப்படும்.

இந்நோயின் தாக்கம் அதிகரிக்கும்போது, நேரம், இடம் பற்றிய குழப்பம், பழக்கமான இடங்களில் வழி தவறுதல், முடிவெடுக்கும் திறன் குறைதல், மொழித்திறன் குறைதல் ஆகியவை ஏற்படலாம்.

மேலும், உணவு உண்ணுதல், உடை அணிதல், குளித்தல் போன்ற அன்றாடச் செயல்பாடுகளுக்குக் கூட பிறரின் உதவி தேவைப்படலாம். இந்த அறிகுறிகள் இருந்தால் மூளை நரம்பியல் மருத்துவரை அணுகி, ரத்தப் பரிசோதனை, சிடி ஸ்கேன், எம்ஆர்ஐ போன்ற பரிசோதனைகள் மேற்கொண்டு நோய் தாக்கத்தின் நிலை குறித்து தெரிந்து கொள்ளலாம்.

<div class="paragraphs"><p>டாக்டர் ஜஸ்டின்</p></div>

டாக்டர் ஜஸ்டின்

இந்நோயை தற்போது முழுமையாகக் குணப்படுத்தும் சிகிச்சை இல்லை என்றாலும், இதைக் கட்டுப்படுத்த மருந்துகளும், சிகிச்சைகளும் உள்ளன.

தினசரி உடற்பயிற்சி, பத்திரிகை வாசிப்பு, புதிர் போடுதல், குடும்ப சமூக நடவடிக்கைகளில் ஈடுபடுதல், போதுமான தூக்கம், சரியான உணவு ஆகியவை மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும். இதற்கு நீரிழிவு, ரத்த அழுத்தம், கொழுப்பு ஆகியவை கட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும். மிக முக்கியமாக மது, புகை பழக்கங்களைத் தவிர்க்க வேண்டும் என, அவர் கூறினார்.

image-fallback
சென்னை: சினிமா ஊழியரை கத்தியால் குத்திய ரவுடி கைது

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in