

திருநெல்வேலி மாவட்டம் பணகுடி அருகே வடலிவிளையில் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தமிழர்களின் வீர விளையாட்டான இளவட்டக்கல் தூக்கும் போட்டி நடைபெற்றது. இதில் ஆண்களுக்கு இணையாக பெண்களும் இளவட்டக்கல் தூக்கி வியக்க வைத்தனர்.
வடலிவிளை கிராமத்தில் இளவட்டக்கல் தூக்கும் போட்டி பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஆண்டுதோறும் நடத்தப்படுகிறது. அதன்படி இவ்வாண்டு இளவட்டக்கல் தூக்கும் போட்டியை திருநெல்வேலி கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் கிரகாம்பெல் தொடங்கி வைத்தார். இப்போட்டியில் இளைஞர்கள் கலந்துகொண்டு 45, 60, 95, 129 கிலோ எடையுள்ள இளவட்டக் கற்களை தூக்கி, கழுத்தை சுற்றி வலம் கொண்டு வந்து ஆச்சரியமூட்டினர். ஆண்களுக்கு போட்டியாக பெண்களும் 45, 60 கிலோ எடை கொண்ட இளவட்ட கற்கள் மற்றும் உரலை தூக்கி தங்களது திறமையை வெளிப்படுத்தினர்.
இளவட்டக்கல் தூக்கும் போட்டியில் ஆண்கள் பிரிவில் ஜெப ஜெய்சன் முதல் பரிசை பெற்றார். பெண்கள் பிரிவில் ராஜகுமாரி முதல் பரிசு பெற்றார். போட்டியில் வெற்றி பெற்றவர்களுக்கும், கலந்து கொண்டவர்களுக்கும் கிரகாம் பெல் ரொக்கப் பரிசு வழங்கினார்.
இந்த போட்டி குறித்து ஏற்பாட்டாளர்கள் கூறியதாவது: தமிழகத்தில் தென்மாவட்டங்களில் குறிப்பாக பாண்டிய நாட்டில் இளவட்டக் கல்லை தூக்கிச் தூக்கிச் சுமக்கும் வீர விளையாட்டு தொன்றுதொட்டு நடந்து வந்துள்ளது. இளவட்டக் கல்லை தூக்கிச் சுமக்கும் இளைஞனுக்கே பெண்ணை மண முடித்து தந்துள்ளதாக அந்த காலத்தில் ஒரு வழக்கமுண்டு. நாகரிக காலத்தில் இன்றைக்கு அந்த வழக்கம் மறைந்து போய்விட்டாலும், தென் மாவட்டங்களில் பல சிற்றூர்களில் இன்றும் இளவட்டக் கல்லை தூக்கும் போட்டிநடத்தப்படுகிறது. வெற்றி பெற்றவர்களுக்கு தற்போது பரிசுகள் மட்டுமே வழங்கப்படுகிறது.
இளவட்டக்கல் பொதுவாக 45, 60, 9, 129 கிலோ எடை கொண்டதாகவும் முழு உருண்டையாக வழவழவென்று எந்தப்பிடிப்பும் இல்லாமலும், கைக்கு அகப்படாத வடிவத்திலும் இருக்கும். இளவட்டக் கல்லுக்கு கல்யாணக் கல் என்ற சிறப்பு பெயரும் உண்டு. இளவட்டக்கல்லை
சுமப்பதில் பல படிநிலைகள் உண்டு. முதலில் குத்தங்காலிட்டு உட்கார்ந்த நிலையில் கல்லை இருகைகளாலும் சேர்த்தணைத்து, இலேசாக எழுந்து கல்லை முழங்காலுக்கு நகர்த்தி பின்னர் முழுதாக நிமிர்ந்து கொஞ்சம் கொஞ்சமாக கல்லை நெஞ்சின் மீது ஏற்றி பின்னர் தோள்பட்டைக்கு நகர்த்தி முழுதாக சுமக்க வேண்டும். தோள்பட்டைக்கு இளவட்டக்கல் வந்துவிட்டால் பின்பக்கமாக தரையில் விழச் செய்யவேண்டும். இவ்வாறு தெரிவித்தனர்.