

மதுரை: மகளின் திருமணத்துக்காக விவசாயி ஒருவர் தான் சேமித்து வைத்திருந்த 25 பவுன் நகையை பத்திரப்படுத்தி வைத்திருந்த தலையணையை காணாது பதற்றமடைந்தார். அவரிடம் சுகாதார மேற்பார்வையாளர், தூய்மைப் பணியாளர்கள் நகையை ஒப்படைத்த நெகிழ்ச்சி சம்பவம் மதுரையில் நடந்துள்ளது.
மதுரை மாநகராட்சி 75-வது வார்டுக்கு உட்பட்ட சுந்தரராஜபுரம் நியூ ரைஸ் மில் 2-வது தெரு பகுதியை சேர்ந்தவர் தங்கம் (52). விவசாயியான இவர் தனது மகளுக்கு ஜனவரி மாதம் திருமணம் நிச்சயித்துள்ளார். இதற்காக தான் வைத்திருந்த 25 பவுன் நகையை தனது வீட்டில் இருந்த ஒரு சிறிய தலையணைக்குள் வைத்து பத்திரப்படுத்தி வைத்துள்ளார்.
தனது மகளின் திருமணம் விரைவில் நடைபெறவுள்ள நிலையில் வீட்டை வெள்ளையடித்து சுத்தம் செய்துள்ளனர். அப்போது வீட்டில் இருந்த பழைய பொருட்கள், துணிகளை எடுத்து வீட்டில் உள்ளவர்கள் அருகிலிருந்து மாநகராட்சி குப்பைத் தொட்டியில் கொண்டு போட்டுள்ளனர்.
அப்போது தங்க நகையை பத்திரப்படுத்தி வைத்திருந்த தலையணையையும் வீட்டில் உள்ளவர்கள், பழைய தலையணை என்று நினைத்து குப்பை தொட்டியில் போட்டுவிட்டனர். இன்று காலை 25 பவுன் தங்க நகையை வைத்திருந்த தலையணையை தங்கம் தேடியுள்ளார். வீட்டில் உள்ளவர்களிடம் கேட்டபோது, குப்பைத் தொட்டியில் கொண்டு போய் போட்டதாக தெரிவித்தும் அவர் அதிர்ச்சியடைந்தார். செய்வதறியாது பதறியடித்தபடி தங்கம் உடனடியாக அவரது வீட்டின் அருகே இருந்த குப்பைத் தொட்டியில் போய் தேடியுள்ளார்.
ஆனால் அந்த தலையணையும், தங்க நகையும் கிடைக்காத நிலையில், கண்ணீர் விட்டு கதறியபடி அவர், 75-வது வார்டு சுகாதார மேற்பார்வையாளர் மருதுபாண்டியனை தொடர்புகொண்டு நடந்தவற்றை கூறியுள்ளார். அவர் அந்த குப்பை தொட்டியில் குப்பையை சேகரித்துச் சென்ற தூய்மைப் பணியாளர் மீனாட்சியை அழைத்து விசாரித்துள்ளார். அவர், தான் சேகரித்துச் சென்ற குப்பையை கிளறி பார்த்தபோது, அதில் ஒரு சிறிய தலையணை இருந்துள்ளது. அந்த தலையணை பிரித்து பார்த்தபோது அதற்குள் 25 பவுன் நகை இருப்பது தெரியவந்துள்ளது.
உடனடியாக சுகாதார மேற்பார்வையாளர் மருதுபாண்டியன், நகையின் உரிமையாளர் தங்கத்தை தொடர்புகொண்டு அவரை வரவழைத்து 25 பவுன் தங்க நகைகளையும் ஒப்படைத்துள்ளார். நகையைப் பெற்றுக்கொண்ட நகை உரிமையாளர் தங்கம், தனது மகளின் திருமணத்துக்காக வாழ்நாள் முழுவதும் சம்பாதித்து சேர்த்துவைத்தது இந்த நகை என்றும், மீட்டுத் தந்த மேற்பார்வையாளர், தூய்மைப் பணியாளர்களுக்கு கண்ணீர் மல்க நன்றி தெரிவித்து விடை பெற்றுச் சென்றார்.