

அநோபலேஸ், ஏடீஸ், குலெக்ஸ் இன கொசுக்கள்
கோவை: ஆண்டுதோறும் ஆகஸ்ட் 20-ம் தேதி அனுசரிக்கப்படும் உலக கொசுக்கள் தினம், கொசுக்களால் பரவும் நோய்களின் ஆபத்தையும் அவற்றைத் தடுப்பதற்கான உலகளாவிய முயற்சிகளையும் நினைவூட்டுகிறது. அளவில் சிறியதாக இருப்பினும், கொசுக்களால் மனிதகுலத்திற்கு ஏற்படும் பாதிப்புகள் மிகப் பெரியது. 1897-ம் ஆண்டு ஆகஸ்ட் 20-ம் தேதி பிரிட்டிஷ் மருத்துவர் சர் ரொனால்ட் ராஸ், பெண் அனோபிலிஸ் கொசுக்கள் மலேரியாவைப் பரப்பு
கின்றன என்பதை நிரூபித்தார். அதை நினைவூட்டும் விதமாக உலக கொசுக்கள் தினம் ஆண்டுதோறும் இந்த நாளில் கடைபிடிக்கப்படுகிறது. இந்த முக்கியமான கண்டுபிடிப்புக்காக அவருக்கு 1902-ம் ஆண்டு நோபல் பரிசு வழங்கப்பட்டது. அவரது ஆய்வு, கொசுக்களால் பரவும் நோய்களைத் தடுப்பதற்கான நவீன சுகாதார நடவடிக்கைகளுக்கு அடித்தளமாக அமைந்தது.
உலகில் 3,500-க்கும் மேற்பட்ட கொசு இனங்கள் காணப்படுகின்றன. அவற்றில் அநோபலேஸ், ஏடீஸ், குலெக்ஸ் ஆகிய மூன்று பேரினங்கள், மனிதர்களுக்கு முக்கியமான நோய்களைப் பரப்புகின்றன. அநோபலேஸ் மலேரியாவையும், ஏடீஸ் டெங்கு, ஜிகா போன்ற நோய்களையும், குலெக்ஸ் பறவைகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் வெஸ்ட் நைல் வைரஸ் போன்ற நோய்களையும் பரப்புவதாக சொல்கிறார் கோவை தனியார் கலை அறிவியல் கல்லூரி வன விலங்கு உயிரியல் துறை உதவி பேராசிரியர் சி.யஸ்வந்த்குமார்.
இது தொடர்பாக அவர் கூறும்போது, “கொசுக்களில், பெரும்பாலும் ஆண் கொசுக்கள் தேன் மற்றும் தாவரச் சாறுகளையே உணவாகக் கொள்கின்றன. மாறாக பெண் கொசுக்கள் தங்களின் முட்டைகளை உருவாக்க தேவையான புரதத்தைப் பெற மனித மற்றும் விலங்கினங்களின் ரத்தத்தை உறிஞ்சுகின்றன. மனிதர்கள் மற்றும் விலங்குகள் வெளியிடும் கரியமில வாயு, உடல் வெப்பம் மற்றும் உடல் வாசனையை உணர்ந்து அவை கடிப்பதற்கு உரியவர்களை அடையாளம் காண்கின்றன.
கொசுக்கள் பரப்பும் மலேரியா, டெங்கு, சிக்குன்குனியா உள்ளிட்ட நோய்கள் ஆண்டுதோறும் ஏராளமான உயிரிழப்புகளுக்குக் காரணமாகின்றன. எனினும் கொசுக்களால் இயற்கை மற்றும் சுற்றுச் சூழலுக்கு சில நன்மைகளும் உண்டு. அவற்றின் புழுக்கள், மீன்கள் மற்றும் நீர்வாழ் பூச்சிகளுக்கும் வளர்ந்த கொசுக்கள் பறவைகள், வவ்வால்கள், தட்டான்கள் மற்றும் சில நீர்நில வாழ்வினங்களுக்கும் உணவாகின்றன.
சில கொசு இனங்கள், குறிப்பாக சில ஆர்க்கிட் தாவரங்களின் மகரந்தச் சேர்க்கையிலும் பங்கு வகிக்கின்றன. எனவே, கொசுக்களை முற்றிலும் அழிப்பது, இயற்கை உணவுச் சங்கிலியைப் பாதிக்கக்கூடும் என விஞ்ஞானிகள் எச்சரிக்கின்றனர். இருப்பினும், அவற்றின் சூழலியல் முக்கியத்துவத்தை மட்டுமே கருத்தில் கொண்டு, கொசுக்களால் பரவும் ஆபத்தான நோய்களைக் கட்டுப்படுத்த வேண்டிய அவசியத்தை மறுத்து விட முடியாது.
காலநிலை மாற்றம் இந்தப் பிரச்சினையை மேலும் சிக்கலாக்குகிறது. அதிகரிக்கும் வெப்பநிலை மற்றும் மாறிவரும் மழைப்பொழிவும் சில கொசு இனங்கள் புதிய பகுதிகளுக்குப் பரவுவதற்கு ஏற்ற சூழலை உருவாக்கக்கூடும். தற்போது மருந்துகளுக்கு எதிர்ப்புத்திறன் கொண்ட நோய்க்கிருமிகளும், பூச்சிக்கொல்லிகளுக்கு எதிர்ப்புத் திறன் பெற்ற கொசுக்களும் உருவாகி வருவது நோய் பரவுதலை கட்டுப்படுத்துவதில் புதிய சவால்களை ஏற்படுத்தியுள்ளது.
தேங்கிய நீரை அகற்றுதல், கொசு வலைகளைப் பயன்படுத்துதல், கொசு விரட்டிகளைப் பயன்படுத்துதல் போன்ற எளிய நடவடிக்கைகள் இன்றும் அவற்றின் பாதிப்புகளை கட்டுப்படுத்துவதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. தடுப்பூசிகளும், புதிய தொழில்நுட்பங்களும் கொசுக்களால் பரவும் நோய்களைக் கட்டுப்படுத்துவதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்கிவருகின்றன. இந்த நாள் (ஆக.20) கொசுக்களால் ஏற்படும் ஆபத்தை மட்டுமின்றி, அறிவியல் மற்றும் பொது சுகாதாரம் இணைந்து இந்த சவாலை எதிர்கொள்ள வேண்டும் என்பதையே வலியுறுத்துகிறது” என்றார்.