

கோடை வெயிலின் தாக்கம் காரணமாக வெயிலில் பணியாற்றுவோர், நீரிழப்பைத் தடுக்க தினமும் 5 லிட்டர் நீர் குடிக்க வேண்டும் என மதுரை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் முரளிதரன் அறிவுரை வழங்கி உள்ளார்.
தமிழகத்தில் கோடை வெயிலின் தாக்கம் வழக்கத்துக்கு மாறாக முன்கூட்டியே அதிகரித்துள்ளது. இதனால் மக்களுக்கு வெப்பச் சோர்வு, தோல் பாதிப்பு, அம்மை, மயக்கம் போன்ற உடல்நல பாதிப்புகளை ஏற்படுத்துகிறது. இதனால் காலை 11 மணி முதல் மாலை 5 மணி வரை வெளியே செல்வதைத் தவிர்க்க வேண்டும் எனவும், போதுமான அளவு தண்ணீர் குடிக்க வேண்டும் என்றும் மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
இது குறித்து மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனை நிலைய மருத்துவ அலுவலர் முரளிதரன் கூறியது: “கோடை வெயிலின் தாக்கம் நிகழாண்டு அதிகரித்து காணப்படுகிறது. வெயிலில் பணியாற்றும் தொழிலாளிகள், பைக்கில் செல்வோர் போதிய குடிநீர் அருந்த வேண்டும்.
பருத்தி உடைகளை அணிய வேண்டும். களைப்பு, தலைச் சுற்றல் போன்ற அறிகுறிகள் ஏற்பட்டால், உடனடியாக நிழலுக்குச் சென்று தண்ணீர் குடிக்க வேண்டும். குறிப்பாக குழந்தைகள், முதியவர்கள், கர்ப்பிணிகள், ரத்த சோகை பாதிப்பு உள்ள வர்கள், இதய நோயாளிகள் காலை 11 மணி முதல் மாலை 5 மணிவரை வெயிலில் செல்வதை தவிர்க்க வேண்டும்.
நீரிழப்பைத் தடுக்க தர்ப்பூசணி, இளநீர், மோர், வெள்ளரிக்காய் போன்றவற்றை உட்கொள்ளலாம். பெரும்பாலும் பொரித்த உணவு, அசைவ உணவு வகைகளை தவிர்க்க வேண்டும். வெயிலின் தாக்கத்தால் ஏற்படும் ஹீட் ஸ்ட்ரோக், மயக்கம் உள்ளிட்ட நோய்களுக்காக 20 படுக்கைகள் கொண்ட அவசர சிகிச்சை வார்டு அரசு மருத்துவமனையில் அமைக்கப்பட்டுள்ளது.
மேலும், அம்மை பாதிப்பு ஏற்பாட்டால், மருத்துவரை அணுகி உரிய சிகிச்சை எடுக்க வேண்டும். மொத்தத்தில் வெயிலில் செல்வோர் குளிர்ந்த நீரை பருகாமல் சாதாரண நீரை குடிக்க வேண்டும். குறைந்தது, 4 முதல் 5 லிட்டர் தண்ணீர் பருகினால் வெயில் காலத்தில் ஏற்படும் நீரிழப்பை தடுக்கலாம்” என்று அவர் கூறினார்.