

சென்னை: மதுரையில் மகளிர் சுய உதவிக் குழுக்களின் உணவுத் திருவிழாவை இன்று துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இது தொடர்பாக தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம் வெளியிட்ட செய்திக்குறிப்பு: கிராமப்புற கைவினைக் கலைஞர்கள் தங்களது தயாரிப்பு பொருட்களை காட்சிப்படுத்தவும், விற்பனை செய்யவும் ஏதுவாக பல்வேறு மாநில அரசுகளுடன் இணைந்து மத்திய அரசின் ஊரக வளர்ச்சித் துறை ‘சாராஸ்’ எனப்படும் விற்பனை கண்காட்சிகளை நடத்தி வருகிறது.
அந்த வகையில் தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனத்துடன் இணைந்து மதுரை, தமுக்கம் மைதானத்தில் மதி கண்காட்சி (சாராஸ் மேளா) மற்றும் உணவுத் திருவிழாவை வரும் நவ.22-ம் தேதி முதல் நடத்துகிறது.
துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழாவை தொடங்கி வைத்து, சுய உதவிக் குழுக்களின் உறுப்பினர்களுக்கு அடையாள அட்டைகளை வழங்குகிறார். நவ. 22 முதல் டிச. 3-ம் தேதி வரை நடைபெறும் கண்காட்சி மற்றும் உணவுத் திருவிழாவுக்கு அனுமதி இலவசம். பொதுமக்கள் காலை 10 முதல் இரவு 8 மணி வரை பார்வையிடலாம்.
மாலை நேரங்களில் தப்பாட்டம், கரகாட்டம், தெருக்கூத்து, நடனம், மேற்கத்திய இசை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. கண்காட்சியில் தமிழகம் முழுவதும் உள்ள சுய உதவிக் குழுக்களின் தயாரிப்பு பொருட்களான சணல் பொருட்கள், துணிப்பைகள், ஐம்பொன் நகைகள், மரச் சிற்பங்கள், பட்டுப் புடவைகள், எம்ப்ராய்டரி ஆடைகள், கைத்தறி துண்டுகள், கைவினைப் பொருட்கள், கண்ணாடி ஓவியங்கள், பருத்தி ஆடைகள் போன்றவற்றை விற்பனை செய்யும் வகையில் 171 அரங்குகளும், பிற மாநிலங்களை சேர்ந்த பொருட்களை விற்பனை செய்ய 29 அரங்குகளும் நிறுவப்பட்டுள்ளன.
உணவுத் திருவிழாவில் 50 அரங்குகள் அமைக்கப் பட்டுள்ளன. இதில் கேரளாவின் பாரம்பரிய உணவுகளை விற்பனை செய்ய 2 அரங்குகளும், தமிழகத்தின் உணவுகளான கொங்கு மட்டன் பிரியாணி, மீன் பிரியாணி, கேரட் பாலி, செட்டிநாடு ஸ்நாக்ஸ், பள்ளிப்பாளையம் சிக்கன் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை சமைத்து பரிமாறும் வகையில் 23 அரங்குகளும் அமைக்கப் பட்டுள்ளன. இதுதவிர ஆயத்த உணவு வகைகளை விற்பனை செய்ய 25 அரங்குகள் நிறுவப்பட்டுள்ளன. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.