

புதுடெல்லி: பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் சிறந்த சூழல் உள்ள இடங்களின் பட்டியலில் பெங்களூரு முதலிடமும் சென்னை 2-வது இடமும் பிடித்துள்ளது.
அவதார் குழுமம் என்ற ஆலோசனை நிறுவனம், பணியிடம் கலாச்சாரம் குறித்து ஆய்வு செய்து ஆண்டுதோறும் அறிக்கை வெளியிட்டு வருகிறது. பெண்கள் பணியாற்ற சிறந்த இடம் என பாதுகாப்பு, சிறந்த கட்டமைப்பு, சுகாதாரம், வேலை வாய்ப்பு, சிறந்த சூழல் என பல அம்சங்களை ஆராய்ந்து நாட்டில் உள்ள 125 நகரங்களை தரவரிசை படுத்தியுள்ளது.
இது தற்போது வெளியிட்டுள்ள நான்காவது அறிக்கையில் கூறியிருப்பதாவது: "பெண்களுக்கு பாதுகாப்பு மற்றும் சிறந்த சூழல் போன்ற அம்சங்களில் 53.29 புள்ளிகள் பெற்று பெங்களூரு முதலிடத்தில் உள்ளது. அடுத்ததாக சென்னை 49.86 புள்ளிகள் பெற்று 2-ம் இடத்தில் உள்ளது. புனே, ஹைதராபாத் மற்றும் மும்பை நகரங்கள் முதல் 5 இடத்தில் இடம் பெற்றுள்ளன.
தொழில் நிறுவனங்கள் மற்றும் வேலை வாய்ப்பு போன்ற அம்சங்களில் பெங்களூரு தொடர்ந்து வலுவாக இருந்தாலும், பாதுகாப்பு, பொது சேவை, போக்குவரத்து, ஆரோக்கியம் மற்றும் கல்வி போன்ற சமூக சூழல்களை கணக்கிடும் போது பெங்களூரு 3-ம் இடத்தில் உள்ளது. இதில் சென்னை முதல் இடம் பிடித்துள்ளது.
புனே 46.27 புள்ளிகள் பெற்று 3-ம் இடத்திலும், ஹைதராபாத் 46.04 புள்ளிகள் பெற்று 4-ம் இடத்திலும், மும்பை 44.49 புள்ளிகள் பெற்று 5-ம் இடத்திலும் உள்ளன. டெல்லி முதல் முறையாக முதல் 10 இடங்களின் பட்டியலில் இருந்து வெளியேறி 11-வது இடத்துக்கு சென்று உள்ளது. இந்த ஆய்வு தொடங்கப்பட்டதில் இருந்து பல நகரங்களில் குறிப்பிடத்தக்க அளவு முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
முதல் 25 நகரங்களின் பட்டியலில் சென்னை, கோவை, திருச்சி, மதுரை, சேலம், வேலூர் மற்றும் ஈரோடு ஆகிய நகரங்கள் இடம் பெற்றுள்ளதால் மிகச் சிறந்த சூழல் உள்ள மாநிலமாக தமிழ்நாடு உள்ளது. நாடு முழுவதும் ஒட்டு மொத்தமாக ஒப்பிடும் போது தென்னிந்திய பகுதி பெண்களின் பாதுகாப்பு மற்றும் சிறந்த சூழலுக்கு ஏற்ற இடமாக உள்ளது. மத்திய மற்றும் கிழக்கு பகுதிகள் சிறந்த சூழல் என்ற அம்சத்தில் பின் தங்கியுள்ளன.