

திருப்பத்தூர்: சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகே பாசமாக பழகிய கோயில் காளையின் இறுதி ஊர்வலத்தில் நாய் பங்கேற்ற நெகிழ்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
திருப்பத்தூர் அருகே புதூர் கிராமத்தில் கோயில் காளை வளர்க்கப்பட்டு வந்தது. இக்காளை பல்வேறு இடங்களில் நடைபெற்ற மஞ்சுவிரட்டில் பல பரிசுகளை பெற்றுள்ளது. இந்நிலையில் நேற்று மாலை கோயில் காளை உடல் நலக்குறைவால் உயிரிழந்தது.
இதையடுத்து ஊர் மந்தை சாவடி முன்பாக வைக்கப்பட்ட காளையின் உடலுக்கு கிராம மக்கள், வெளியூர்களில் இருந்து வந்திருந்த மாடுபிடி வீரர்கள் மாலை, வேட்டி, துண்டு அணிவித்து அஞ்சலி செலுத்தினர்.
தொடர்ந்து காளையின் உடல் மேளதாளங்கள் முழங்க முக்கிய வீதிகள் வழியாக வாகனத்தில் ஊர்வலமாக எடுத்து செல்லப்பட்டது. அப்போது கோயில் காளையோடு எப்போதும் ஒன்றாக திரியும் நாயும், அக்காளையின் இறுதி ஊர்வலத்தில் பங்கேற்றது. தொடர்ந்து காளை உடல் முனீஸ்வரன் கோயில் அருகேயுள்ள பகுதியில் அடக்கம் செய்யப்பட்டது. அதுவரை நாயும் அங்கேயே நின்றது. இச்சம்பவம் கிராம மக்களிடையே நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.