Published : 30 May 2023 04:32 PM
Last Updated : 30 May 2023 04:32 PM

‘சிஎஸ்கே வென்றதால் இலவச ஆட்டோ சவாரி... யாரும் நம்பலை!’ - சொன்னதைச் செய்த 'ஸ்பீடு' முருகேசன்

ஆட்டோ ஓட்டுநர் ஸ்பீடு முருகேசன் (மேலே)

ஐபிஎல் இறுதிப் போட்டியில் சிஎஸ்கே அணி கோப்பையை வென்றால், ஒருநாள் முழுவதும் இலவச சவாரி என்று அறிவித்திருந்த ஆட்டோ ஓட்டுநர் 'ஸ்பீடு' முருகேசன் சென்னையில் செவ்வாய்க்கிழமையன்று (மே 30) தான் அளித்த வாக்குறுதிப்படி இலவச சவாரி அளித்தார்.

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டியில் தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணி 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் ஹர்திக் பாண்டியா தலைமையிலான குஜராத் டைட்டன்ஸ் அணியை வீழ்த்தி 5-வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

கடைசி 2 பந்துகளில் 10 ரன்கள் தேவை என்ற நிலையில் 5-வது பந்தை ஜடேஜா சிக்ஸருக்கு பறக்கவிட ஆட்டத்தின் பரபரப்பு அதிகமானது. கடைசி பந்தை ஜடேஜா பைன் லெக் திசையில் பவுண்டரிக்கு விரட்ட சிஎஸ்கே அணி 15 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 171 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. ஜடேஜா 6 பந்துகளில் 15 ரன்கள் விளாசியது சென்னையின் வெற்றிக்கு உறுதுணையாக அமைந்தது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் வெற்றியை ரசிகர்கள் பலரும், வித்தியாசமான முறையில் கொண்டாடி வருகின்றனர். சென்னையை அடுத்துள்ள பூந்தமல்லி காட்டுப்பாக்கத்தைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநரான 'ஸ்பீடு' முருகேசன் என்பவர், சிஎஸ்கே அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனியின் மிக தீவிரமான ரசிகர். இவர், ஐபிஎல் இறுதிப் போட்டியில் சிஎஸ்கே அணி வெற்றி பெற்றால், ஒருநாள் முழுவதும் தனது ஆட்டோவில் இலவச சவாரி என்று அறிவித்திருந்தார். இது தொடர்பான பேனர் ஒன்றையைும் தனது ஆட்டோவின் பின்புறத்தில் கட்டிவைத்திருந்தார்.

இந்நிலையில்,சிஎஸ்கே அணி ஐந்தாவது முறையாக ஐபிஎல் கோப்பையை வென்றது. இதையடுத்து, இன்று (மே 30) காலை முதல், தான் ஏற்கெனவே அறிவித்தபடி, ஸ்பீடு முருகேசன் தனது ஆட்டோவில் இலவச சவாரி எடுத்து வருகிறார். செவ்வாய்க்கிழமை பிற்பகல் 3 மணி வாக்கில், சேப்பாக்கம் மைதானம் வழியாக சவாரி வந்த ஸ்பீடு முருகேசன் கூறியது: "எனது பூர்விகம் தஞ்சை மாவட்டம் கும்பகோணம்தான். எனது தந்தை சுவாமிநாதன் தாய் தங்கம்மாள். எங்கள் வீட்டில் நான் 6வதாக பிறந்தேன். சென்னை வந்து கடந்த 12 ஆண்டுகளாக ஆட்டோ ஓட்டும் தொழில்தான் செய்து வருகிறேன்.

எனது மனைவி சுகன்யாராணி, மகன் ஹரீஷ் 4ம் வகுப்பு படித்து வருகிறார். பூந்தமல்லி காட்டுப்பாக்கத்தில் எனது மனைவி மற்றும் மகனுடன் வசித்து வருகிறேன். சொந்த வீட்டில்தான் இருக்கிறேன். போரூர் பகுதியில்தான் ஆட்டோ ஓட்டுவேன். அவ்வப்போது சென்னை மாநகருக்குள் வருவேன். அதேபோல், சிஎஸ்கே அணி சென்னையில் விளையாடும் போட்டிகளை பலமுறை பார்த்திருக்கிறேன். டிக்கெட் விற்பனை செய்யப்படும் நேரத்தைப் பொருத்து வந்து டிக்கெட் வாங்கிச் செல்வேன். பொதுவாக காலையில் 9 மணிக்கு ஆட்டோ ஓட்டத் தொடங்கினால், இரவு 10 மணி வரை ஓட்டுவேன். இதன்மூலம் தினசரி ரூ.2 ஆயிரம் வருமானம் கிடைக்கும்.

2007 ஐபிஎல் போட்டிகள் தொடங்கிய காலத்தில் இருந்தே நான் தோனியின் தீவிர ரசிகன். அவரது திறமையும், அதிர்ஷ்டமும்தான் இறுதிப்போட்டிகளில் அவர் தலைமையேற்கும் அணிக்கான வெற்றியைத் தேடித் தருகிறது. அதுதான் அவர்மீது பலருக்கு ஈர்ப்பு வருவதற்கான காரணமாக நான் பார்க்கிறேன்.

அதேபோல், அவரது கேப்டன்சியில் அணியை வழிநடத்தும் பண்பு எனக்கு மட்டுமின்றி ரசிகர்கள் பலருக்கும் பிடித்தமான ஒன்று. அந்த தலைமைத்துவமும், பண்பும்தான் இந்திய அணிக்கு அவரது தலைமையில், உலக கோப்பையைப் பெற்றுத் தந்தது. என்னுடைய விருப்பம் அவர் இன்னும் 10 ஆண்டுகள் விளையாட வேண்டும் என்பதுதான். ஆனால், இது நடக்குமா என்பது தெரியவில்லை.

நேற்று ஃபைனல் என்னால் வீட்டில் அமர்ந்து பார்க்கமுடியவில்லை. அவ்வளவு டென்ஷனும் எனக்குத்தான் இருந்தது. எப்படியாவது சிஎஸ்கே கோப்பையை வாங்க வேண்டும் என்ற ஆசையில் என்னால உட்கார்ந்திருக்கவே முடியவில்லை. அந்த ஃபோர் போனபிறகுதான் நிம்மதியே வந்தது. நான் ஏற்கெனவே கோப்பையை வென்றால், இலவச சவாரி என்று அறிவித்திருந்தேன். அதன்படி செவ்வாய்க்கிழமை வழக்கம்போல், 9 மணியிலிருந்து இலவச சவாரி எடுத்து வருகிறேன்.

இதுவரை (பிற்பகல் 3 மணி) 15 சவாரி எடுத்துள்ளேன். பெரம்பூர், கொளத்தூர், புரசைவாக்கம், கீழ்ப்பாக்கம் உட்பட பல இடங்களுக்குச் சென்றேன். இடையில் யாராவது கை நீட்டி சவாரிக்கு அழைத்தாலும் அழைத்துச் சென்றேன். ஆட்டோவில் பயணம் செய்தவர்கள் இறங்கும்போது பணம் வேண்டாம் இலவசம் என்றால் அவர்களுக்கு புரியவில்லை. பலர் நம்பவே இல்லை. பிறகு, ஆட்டோவின் பின்னால் கட்டியிருந்த பேனரைக் காட்டி விளக்கம் அளித்தேன். தற்போது சற்றுநேர ஓய்வுக்காக நிறுத்தினேன்.

மாலை 4 மணிக்குப் பிறகு, நிறைய சவாரிகள் கிடைக்கும். பலர் வேலை முடிந்து வீடு திரும்புவார்கள் இல்லையா, அப்போது மீண்டும் பிஸியாகிவிடுவேன். எனது விருப்பம் சிஎஸ்கே கேப்டனும் எனக்கு பிடித்தவருமான தோனி இன்னும் 10 ஆண்டுகள் விளையாட வேண்டும் என்பதுதான்" என்று அவர் கூறினார். தோனியின் தீவிர ரசிகரான ஆட்டோ ஓட்டுநரான 'ஸ்பீடு' முருகேசனின் இந்த சேவையைப் பாராட்டும் பலரும், சிஎஸ்கேவுடன் சேர்த்து அவருக்கும் பெரிய விசில் அடித்து வருகின்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x