

உதகை: உதகை கமர்சியல் சாலையில்ஆட்டம் பாட்டம் கொண்டாட்டத்துடன் ‘ஹேப்பி ஸ்ட்ரீட்’ நிகழ்ச்சி நேற்று தொடங்கியது.
நாள் முழுவதும் பரபரப்பாக இயந்திர கதியில் இயங்கி கொண்டிருக்கும் பொதுமக்கள், பரபரப்பில் இருந்தும், மன அழுத்தத்தில் இருந்தும் விடுபட்டு மகிழ்வாக வார விடுமுறையை கொண்டாடும் நோக்கில், உதகையில் ஹேப்பி ஸ்ட்ரீட் நிகழ்ச்சி நடத்த திட்டமிடப்பட்டது.
அதன்படி, நீலகிரி மாவட்டகாவல்துறை மற்றும் தன்னார்வலர்கள் கூட்டமைப்பு சார்பில் உதகை கமர்சியல் சாலையில் சேரிங்கிராஸ் முதல் கேசினோ சந்திப்பு வரை வாகன போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டு, ஹேப்பி ஸ்டீரீட் நிகழ்ச்சி நடைபெற்றது.
கூடுதல் எஸ்.பி.-க்கள் மணி, சௌந்திரராஜன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியின் தொடக்கமாக தோடர், கோத்தர் பழங்குடியின மக்களின் பாரம்பரிய இசை, நடன நிகழ்ச்சி, படுகர் சமுதாய மக்களின் பாரம்பரிய நடனம் நடைபெற்றது.
நிகழ்ச்சிகளை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர். மேலும் இசை, நடன நிகழ்ச்சிகள் ம்ற்றும் குழந்தைகள், பள்ளி மாணவ, மாணவர்கள் சதுரங்கம், பல்லாங்குழி, கேரம் உள்ளிட்ட விளையாட்டுகளை விளையாடி மகிழ்ந்தனர். உள்ளூர் மக்கள் மட்டுமின்றி, சுற்றுலா பயணிகளும் ஆடி, பாடி மகிழ்ந்தனர். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. இதனால் கமர்சியல் சாலை பகுதி, மக்களின் மகிழ்ச்சியில் திளைத்தது.
இந்நிகழ்ச்சிக்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து வரும் வாரங்களிலும் நடத்தப்படும் என்று, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கி.பிரபாகர் தெரிவித்தார்.