பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு இடத்தை பார்வையிட குவியும் பார்வையாளர்கள்
புதுக்கோட்டை: புதுக்கோட்டை மாவட்டம் பொற்பனைக்கோட்டையில் அகழாய்வு பணி நடைபெற்று வரும் இடத்தைப் பார்வையிடுவதற்காக பார்வையாளர்கள் வரத் தொடங்கி உள்ளனர்.
பொற்பனைக்கோட்டையில் மாநில தொல்லியல் துறையின் மூலம் இயக்குநர் தங்கதுரை தலைமையில் முதல்கட்ட அகழாய்வுப் பணி கடந்த ஒரு வாரமாக நடைபெற்று வருகிறது. கோட்டையின் மையத்தில் தேர்வு செய்யப்பட்டுள்ள மேட்டுப் பகுதியில் 3 இடங்களில் அகழாய்வுப் பணி நடைபெற்று வருகிறது. அதில், ஒரு இடத்தில் பழமையான செங்கல் கட்டுமானம் முதலில் வெளிப்பட்டது.
அதைத்தொடர்ந்து அடுத்தடுத்த 2 இடங்களிலும் செங்கல் கட்டுமானம் வெளிப்பட்டுள்ளது. சுமார் 1 அடி நீளம், அகலத்திலான செங்கல்கள் கட்டுமானத்துக்கு பயன்படுத்தப்பட்டிருப்பது தெரியவந்துள்ளது. இந்த செங்கல் அமைப்பு மற்றும் ஏற்கெனவே வரலாற்று ஆய்வாளர்களுக்குக் கிடைத்த பொருட்களின் அடிப்படையில், இப்பகுதியானது சங்க காலத்தைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது.
சுமார் 20 சென்டி மீட்டர் ஆழத்திலேயே சுமார் 2 ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய செங்கல்கட்டுமானங்கள் வெளிப்பட்டிருப்பது அனைவரையும் வியக்க வைத்துள்ளது. தொடர்ந்து நடைபெறும் அகழாய்வில் கூடுதலான பொருட்கள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், இந்த அகழாய்வு இடத்தை பார்வையிட பல்வேறு பகுதிகளில் இருந்து வரலாற்று ஆர்வலர்கள், மாணவ, மாணவிகள், பொதுமக்கள் வரத் தொடங்கியுள்ளனர்.
பார்வையிட வருவோரின் விவரங்கள் பதிவு செய்யப்பட்ட பிறகே அனுமதிக்கப்படுகின்றனர். அகழாய்வு நடைபெறும் இடத்தில் புகைப்படம் எடுக்கத் தடை விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து தொல்லியல் ஆய்வாளர்கள் கூறியது: பொற்பனைக்கோட்டையில் சுமார் 17 ஏக்கர் பரப்பளவில் உள்ள கோட்டையில் 1.26 ஏக்கரில் வாழ்விடப்பகுதியாக இருந்துள்ளது. கோட்டையானது மேற்கு,
கிழக்கு மற்றும் வடக்குஆகிய பகுதிகளில் நுழைவாயில்களுடன் கட்டப்பட்டதாகத் தெரிகிறது. அகழாய்வுசெய்யப்படும் மேட்டுப் பகுதியை அரண்மனைத் திடல் என்று உள்ளூர் மக்கள் அழைத்து வருகின்றனர். அந்த இடத்தில் தற்போது செங்கல் கட்டுமானம் கிடைத்துள்ளதால் இவ்விடத்தில் அரண்மனை இருந்திருக்கலாம் எனக் கருத முடிகிறது. அடுத்தடுத்த அகழாய்வுக்குப் பிறகுதான் உறுதி செய்ய முடியும் என்றனர்.
