

தஞ்சாவூர்: திருவிடைமருதூர் வட்டம், துக்காச்சியிலுள்ள சவுந்தரநாயகி சமேத ஆபத்சகாயேஸ்வரர் கோயிலில் 12-ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டெடுக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து அங்கு கிடக்கும் கல்வெட்டுக்களை ஆய்வுமேற்கொள்ள வேண்டும் என வரலாற்று ஆய்வினர் வலியுறுத்தியுள்ளனர்.
இக்கோயிலில் பாலாலயம் செய்யப்பட்டு 11 ஆண்டுகளுக்குப் பிறகு, ரூ.5.5 கோடி மதிப்பில் திருப்பணிகள் நடைபெற்று வருகிறது. வரும் நவம்பரில் கும்பாபிஷேகம் செய்யப்படவுள்ளது. இக்கோயிலில் தற்போது பணிகள் மும்முரமாக நடைபெற்று வரும் நிலையில், 25-ம் தேதி, அக்கோயிலுக்கு களப்பணி மேற்கொண்ட, கும்பகோணம் வட்டார வரலாற்று ஆய்வு சங்க நிறுவனர் ஆ.கோபிநாத் கூறியது: “இக்கோயிலில் களப்பணியில் ஈடுபட்டிருந்தபோது, 2-ம் ராஜகோபுரத்தின் வாயிற்படியில் ஒரு கல்வெட்டு இருப்பதைக் காணமுடிந்தது. அதில் இவ்வூரின் தொன்மையைப் பறைசாற்றும் வாசகம் இடம் பெற்றுள்ளது.
இந்த கல்வெட்டில் “குலோத்துங்க சோழநல்லூர்”, “தென்திருக்காளத்தி மகாதேவர்”, “விஜயராஜேந்திர சதுர்வேதி மங்களம்” உள்ளிட்ட பல முக்கிய சொற்றொடர்கள் பதிவாகியுள்ளது. இதில், முதலாம் குலோத்துங்க சோழன் காலத்தில் துக்காச்சியின் ஒரு பகுதியும், அருகிலுள்ள கூகூர் கிராமத்தின் ஒரு பகுதியும் இணைந்து “குலோத்துங்க சோழ நல்லூர்” என்ற பெயரில் இருந்துள்ளது. மேலும், இப்பகுதியில் “தென்திருக்காளத்தி மகாதேவர் கோயில்” இருந்துள்ளது என்பதற்கும் இந்த கல்வெட்டே சான்றாகும்.
இத்தகைய பெருமை வாய்ந்த கல்வெட்டானது பாதுகாப்பு கருதி ஊர்மக்களின் துணையுடன் கோயிலின் மகா மண்டபத்தில் தற்போது வைக்கப்பட்டுள்ளது. திருக்குடமுழுக்கின்போது அனைவரும் கண்டு அறியும் வண்ணம் திருச்சுற்று மாளிகைப்பகுதியில் வைக்க வேண்டும், அங்கு கிடக்கும் மற்ற கல்வெட்டுக்களை ஆய்வு மேற்கொள்ள வேண்டும்” எனத் தெரிவித்துள்ளார். அவருடன் திலீபன், சுந்தர்ராஜ், விஷால், சுரேஷ்குமார் மற்றும் துக்காச்சி கிராமத்தினர் ஆகியோர் உடனிருந்தனர்