Published : 22 Sep 2017 14:28 pm

Updated : 14 Oct 2017 11:18 am

 

Published : 22 Sep 2017 02:28 PM
Last Updated : 14 Oct 2017 11:18 AM

துப்பறியும் ராம்சேகர் 01: கைத்தடியைக் கையாடியது யார்?

01

பெயருக்கு ஏற்றாற்போல் பெரும் சொத்துக்கு அதிபதியானவர் கோடீஸ்வரன். மனைவியை 10 ஆண்டுகளுக்கு முன்பு ஒரு விபத்தில் இழந்திருந்தார். அவர் வீட்டுத் தோட்டத்தில் அவரும் துப்பறியும் ராம்சேகரும் பேசிக்கொண்டிருந்தார்கள்.

கலங்கிப் போயிருந்தார் கோடீஸ்வரன். “சிங்கப்பூரிலிருக்கும் என் நண்பன் அளித்த கைத்தடியைக் காணவில்லை. அதை நீங்கள்தான் கண்டுபிடித்துத் தரவேண்டும். இன்று காலையில்தான் பார்சலில் வந்தது. மதியத்துக்குள் தொலைந்துவிட்டது” என்றபடி கண் கலங்கினார்.


‘ஒரு கைத்தடிக்காகவா, இவர் இவ்வளவு கவலைப்படுகிறார்? ஒருவேளை நண்பர் சென்டிமென்ட்டோ! இருக்காது, இதைத் தவிர வேறு ஏதோ அந்தக் கைத்தடியில் இருக்க வேண்டும்’. ராம்சேகரின் உள்ளுணர்வு சரிதான் என்பதுபோல் இருந்தது கோடீஸ்வரன் சொன்ன அடுத்த தகவல்.

“அது சாதாரணக் கைத்தடியில்லை. வைரக் கற்கள் பதித்த சிறிய கைத்தடி. அதன் மதிப்பு சில கோடிகள். இன்று காலை என்னை நண்பர் தொடர்புகொண்டபோது கைத்தடி வந்து சேர்ந்துவிட்டது என்று நான் சொன்னேன். அப்போது முட்டாள்தனமாக அதன் மதிப்பையும் உளறிவிட்டேன். இதைக் கேட்டுக்கொண்டிருந்த அந்த நால்வரில் ஒருவர்தான் அதை எடுத்திருக்க வேண்டும். அந்த நால்வரும் இப்போது என் வீட்டுக்குள்தான் இருக்கிறார்கள். இவர்கள் நீண்ட நாட்களாக என் வீட்டில் வேலை செய்பவர்கள். எனவே, அவர்களைச் சந்தேகிப்பதாகக் கூறி விசாரிக்க எனக்கு மனம் வரவில்லை. நீங்கள்தான் துப்புத் துலக்க வேண்டும்” என்றார்.

“இந்தக் கைத்தடியைப் பற்றி அந்த நால்வரில் யாரிடமாவது குறிப்பிட்டிருக்கிறீர்களா?” என்ற ராம்சேகரின் கேள்விக்கு, “இல்லை”என்று பதிலளித்தார் கோடீஸ்வரன்.

வீட்டுக்குள் இருவரும் நுழைந்தனர். நான்கு பேரையும் ராம்சேகருக்கு அறிமுகப்படுத்தினார் கோடீஸ்வரன். ஒவ்வொருவரிடமும் ராம்சேகர் கேள்விகள் மூலம் சில தகவல்களைத் தெரிந்துகொண்டார்.

சங்கர், தோட்டக்காரர். காலை ஆறு மணிக்கு வந்தால், மாலை ஏழு மணிக்குதான் வீடு திரும்புவார். பள்ளிப் படிப்பை முடித்தவர். அடுத்த மாதம் அவருடைய தங்கைக்குத் திருமணம்.

கலாவதி. வீட்டில் சமையல் வேலை செய்பவர். காலை 7 மணிக்கு வந்து விடுவார். சிற்றுண்டி தயார் செய்து பரிமாறிய பிறகு, தன் வீட்டுக்கு 9 மணிக்குச் சென்றுவிடுவார். பிறகு மீண்டும் 11 மணிக்கு வந்து, மதிய உணவைச் சமைப்பார்.

கந்தசாமி. கார் டிரைவர். நெற்றியில் விபூதியும் செந்தூரமும் காட்சியளித்தன. கடந்த 15 வருடங்களாக கோடீஸ்வரன் வீட்டு டிரைவர் அவர்தான். நடுவே ஒரு வருடம் மட்டும் ஒரு குறிப்பிட்ட காரணத்தால், அந்த வீட்டில் ஓட்டுநர் பணியைப் பார்க்கவில்லை.

ராகவேந்திரன். கோடீஸ்வரனின் அந்தரங்கச் செயலாளர். முதலாளி தொடர்பான கிட்டத்தட்ட எல்லா விஷயங்களையும் தெரிந்தவர். முகத்தில் புத்திசாலிக் களை தென்பட்டது.

நான்கு பேரையும் ஒரே சமயத்தில் தன் எதிரில் நிறுத்தினார் ராம்சேகர். “உங்கள் முதலாளியின் கைத்தடி ஒன்று தொலைந்துவிட்டது. அவர் நண்பர் அனுப்பிய அந்தக் கைத்தடி, இன்று காலைதான் வந்தது. அதற்குள் காணவில்லை. உங்கள் யாரையும் உங்கள் முதலாளி சந்தேகப்படவில்லை. அந்தக் கைத்தடியை உங்கள் முதலாளியே எங்காவது மறதியாக வைத்திருப்பார் என்று நினைக்கிறேன். நீங்கள் நால்வரும் வீடு முழுவதும் தேடிப் பார்த்து, அந்தக் கைத்தடியைக் கண்டுபிடிக்க உதவுங்கள்” என்றார்.

அடுத்த நிமிடமே நால்வரும் தேடத் தொடங்கினார்கள். ஆனால், கைத்தடி யார் கையிலும் இல்லை.

“கைத்தடி கிடைக்கவில்லை”என்றார் சங்கர். “எங்கேயும் காணோமே”என்றார் கலாவதி. “வெளியே எங்கேயாவது விட்டிருப்பீங்களோ?”என்றார் கந்தசாமி. “வரவர சாருக்கு மறதி அதிகமாயிடுச்சு” என்றார் ராகவேந்திரன்.

ராம்சேகரின் பார்வை அந்த நால்வரில் ஒருவர் மீது பதிந்தது. அந்த நபர்தான் கைத்தடியைத் திருடியிருக்க வேண்டும் என்று அவருக்குத் தோன்றியது.

ராம்சேகருக்கு யார் மீது சந்தேகம்? அதற்குக் காரணம் என்ன? யோசியுங்கள். அடுத்த வாரம் விடையுடன் சந்திப்போம்.

(துப்பறியலாம்)

ஓவியம்: முத்து

அறிமுகம்

புதுமை என்பது இளைஞர்களை ஈர்க்கும் சொல். ஒரு மிகப் பெரிய கண்டுபிடிப்புதான் புதுமை என்பதில்லை. ‘அட’ என்ற வியப்பை உண்டாக்கக்கூடிய எதுவுமே புதுமைதான்.

புதுச்சேரியைச் சேர்ந்த ராமசாமி என்ற பொறியியல் மாணவன், தன் அம்மா கைவலிக்க கை உரலில் தினமும் இட்லிக்கு மாவு அரைப்பதைப் பார்த்தான். அவன் மனதில் உதித்த பொறிதான் இன்றைய வெட்கிரைண்டரின் ஆதாரம். தேசிய விருது கிடைத்தது அந்த மாணவனுக்கு.

தமிழ்நாட்டைச் சேர்ந்த இன்னாரு இளைஞர் உதயகுமார். டிசைனர் பணிபுரிந்தவர். “ரூபாய் என்பதை இந்தியாவின் குறியீடாக எப்படி உணர்த்தலாம்” என்று மத்திய அரசு மக்களைக் கேட்டபோது, அதற்காக மெனக்கெட்டார் உதயகுமார். இவர் அனுப்பிய ரூபாய்க்கான டிசைன், ரிசர்வ் வங்கியால் அங்கீகரிக்கப்பட்டது. நாடறிந்த நபர் ஆனார்.

புதிய சிந்தனைகள் பிறரால் ஏற்றுக்கொள்ளப்படும்போது புகழ் தானாக வருகிறது.

‘க்ரியேடிவிட்டி’ எனப்படும் இந்தக் குணநலனுக்கு கூர்ந்து கவனிக்கும் திறனும் மிகத் தேவை. ஒரே விஷயத்தைப் பிறர் பார்ப்பதைவிட ஆழமாகவும் வித்தியாசமாகவும் நம் பார்வை அமையும்போது புதுமைகள் உருவாகின்றன; பாராட்டுகள் குவிகின்றன.

இந்தத் தொடரில் இடம்பெறும் ‘துப்பறியும் ராம்சேகர்’ கதைகள், உங்கள் கவனிக்கும் திறமையைக் கூர்தீட்டக் கூடியவை. ராம்சேகருக்குப் புலப்படும் கோணங்கள் உங்களுக்கு மட்டும் புலப்படக் கூடாதா என்ன?

அந்தக் கோணம் கதையிலும் இருக்கலாம். கதைக்கான ஓவியத்திலும் இருக்கலாம். இரண்டிலும் கலந்தும் இருக்கலாம்.

இனி, ஒவ்வொரு வாரமும் துப்பறிவோம்!


Sign up to receive our newsletter in your inbox every day!

You May Like

More From This Category

More From this Author

x