

விருதுநகர்: சுவரொட்டிகள், சுவர் விளம்பரங்களைத் தடுக்கும் வகையிலும், தூய்மையை பராமரிக்கும் வகையிலும் விருதுநகர் அரசு மருத்துவமனை சுற்றுச்சுவரில் கண்கவர் ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன.
வணிக நகரமான விருதுநகருக்கு, தினமும் வெளியூர் மற்றும் வெளி மாநிலங்களில் இருந்து ஏராளமானோர் வந்து செல்கின்றனர். விருதுநகருக்கு வருவோரைக் கவரும் வகையில் பேருந்து நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், பால தடுப்புச் சுவர்கள், அரசு கட்டிடச் சுவர்கள் போன்றவற்றில் வண்ண ஓவியங்கள் வரைய மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. இதற்காக, மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை மூலம், மாவட் டத்தில் முக்கிய பகுதிகளாக கருதப்படும் 50 இடங்களில் வண்ண ஓவியங்கள் தீட்டப்பட்டு வருகின்றன.
அதன்படி, விருதுநகரில் உள்ள மகப்பேறு மற்றும் பச்சிளம் குழந்தைகள் தீவிர சிகிச்சைப் பிரிவு கட்டிட சுற்றுச்சுவரில் மருத்துவர்களைப் போற்றும் வகையிலும், தரமான சிகிச்சையை விளக்கும் வகையிலும், குழந்தைகளின் சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையிலும் கண்கவர் வண்ண ஓவியங்கள் வரையப்பட்டுள்ளன. இதனால், சுற்றுச்சுவர் பகுதி தூய்மையாக காணப்படுவதோடு, காண்போருக்கு மகிழ்ச்சியை ஏற்படுத்துவதும் குறிப்பிடத்தக்கது.