Published : 26 May 2023 06:12 AM
Last Updated : 26 May 2023 06:12 AM
பெரம்பலூர்: தமிழர்களின் பாரம்பரிய கலைகளான கோலாட்டம், ஒயிலாட்டம் ஆகியவற்றை இளம் தலைமுறையினருக்கு இலவசமாக பயிற்றுவித்து வருகிறார் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பொறியியல் பட்டதாரி இளைஞர்.
பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை வட்டம் தொண்டப்பாடி கிராமத்தைச் சேர்ந்தவர் நல்லமாணிக்கம்(28). முதுநிலை பொறியியல் பட்டதாரியான இவர், தனியார் நிறுவனத்தில் பணியாளராக வீட்டிலிருந்தே பணிபுரிந்துவருகிறார். இவர் தமிழர்களின் பாரம்பரிய கலைகளான கோலாட்டம், ஒயிலாட்டம் ஆகியவற்றை இளம்தலைமுறையினருக்கு கடந்த 8 மாதங்களாக இலவசமாக பயிற்றுவித்து வருகிறார்.
இவரிடம் பயிற்சி பெற்ற சிறுவர், சிறுமிகள் அடங்கிய கலைக் குழுகடந்த ஜனவரி மாதம் சென்னையில் நடைபெற்ற மாநில அளவிலான கலைப் போட்டிகளில் கோலாட்டத்தில் முதலிடத்தையும், ஒயிலாட்டத்தில் 2-ம் இடத்தையும் பிடித்துள்ளது.
இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழிடம் நல்ல மாணிக்கம் கூறியது:எனக்கு கோலாட்டம், ஒயிலாட்டம் ஆகியவற்றை எனது பெரியப்பாக்கள் நல்லபெருமாள், செல்லப்பிள்ளை ஆகியோர் கற்றுக்கொடுத்தனர். தமிழர்களின் பாரம்பரிய கலையான கோலாட்டம், ஒயிலாட்டம் ஆகியவை மறைந்து வருவது வருத்தமாக இருந்தது.
கரோனாவுக்குப் பின் தனியார் நிறுவனத்தில் வீட்டிலிருந்தே வேலை செய்யும் வாய்ப்பு கிடைத்ததால், ஓய்வுநேரத்தில் இந்த கலைகளை வளரும் தலைமுறைக்கு பயிற்றுவித்து வருகிறேன். முதல்கட்டமாக சுமார் 30 பேர் பயிற்சி பெற்றனர். தினமும் மாலை 6 மணி முதல் 9 மணி வரை தொண்டப்பாடி கிராமத்தில் பயிற்சி அளிக்கிறேன். ஈடுபாட்டுடன் பயிற்சி பெற்றால் 3 மாதத்தில் இந்த கலையைக் கற்றுக் கொள்ளலாம். இதுவரை 110 பேர் பயிற்சி பெற்றுள்ளனர்.
சிறார் திருமணம், பெண்களுக்கு எதிரான வன்கொடுமை, குழந்தைதொழிலாளர் முறை, போதைப்பொருள் பழக்கம் போன்ற சமூக அவலங்களை சாடுதல் மற்றும் சமூக நல்லிணக்கம், மனிதநேயம்,ரத்த தானம் செய்தல், போக்குவரத்து விதிகளை கடைப்பிடித்தல், சுத்தம், சுகாதாரம் பேணுதல், சுற்றுச் சூழல் மேம்பாடு, தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்துதல் உள்ளிட்டநல்ல பண்புகளை வளர்க்கும் விதமான விழிப்புணர்வு பாடல்களை இயற்றி, அவற்றை கோலாட்டம், ஒயிலாட்டம் வாயிலாக வெகுஜன மக்களிடம் கொண்டு சேர்க்கும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளேன் என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT