Published : 25 May 2023 06:12 AM
Last Updated : 25 May 2023 06:12 AM
மதுரை: இயற்கை விவசாயத்தை ஊக்குவிக்கவும். பூச்சி மருந்து தெளிக்கும்போது பாம்பு கடித்து இறந்த தந்தையின் நினைவாகவும் ‘டிரோன்’ மூலம் இலவசமாக பூச்சி மருந்து தெளிக்கும் பணிகளை செய்து வருகிறார் 23 வயது ‘ஏரோ நாட்டிக்கல்’ பொறியாளர்.
மதுரை மாவட்டம், பேரையூர் அருகே பி.ராமநாதபுரத்தைச் சேர்ந்த விவசாயி முத்துராமலிங்கம் என்பவரின் மகன் சங்கிலிப்பாண்டி (23). டி.கல்லுப்பட்டியில் பிளஸ் 2 வரை படித்தார்.
உயர் கல்வியை நாமக்கல்லில் அண்ணா பல்கலைக்கழக பொறியியல் கல்லூரியில் ஏரோநாட்டிக்கல் இஞ்சினியரிங் படித்து (2018-22) தங்கப் பதக்கம் பெற்றார். அப்போதே இஸ்ரோவில் ஆய்வுக்கட்டுரை சமர்ப்பித்து ரூ.9 லட்சம் ரொக்கப்பரிசு பெற்றார். கல்லூரியில் படித்தபோது, அவரது தந்தை 2021-ல் பூச்சி மருந்து தெளிக்கும்போது பாம்பு கடித்து உயிரிழந்தார்.
அந்த சம்பவம் சங்கிலிப்பாண்டியை வெகுவாகப் பாதித்தது. இனிமேல் எந்த விவசாயியும் மருந்து தெளிக்கும்போது பாம்புகள் கடித்து இறக்கக்கூடாது என எண்ணினார். தந்தையின் நினைவாக இயற்கை விவசாயம் செய்யும் விவசாயிகளின் வயல்களில் இலவசமாக ‘டிரோன்’ மூலம் பூச்சி மருந்து தெளித்து வருகிறார். தந்தைக்குப்பின் முழுமூச்சாக இயற்கை விவசாயத்தில் ஈடுபட்டு வருகிறார்.
இதுகுறித்து இயற்கை விவசாயியும், ஏரோநாட்டிக்கல் பொறியாளருமான மு.சங்கிலிப்பாண்டி கூறியதாவது: எனது தந்தையைப் போல இனிமேல் எந்த விவசாயியும் பூச்சி மருந்து தெளிக்கும்போது பாம்பு கடித்து இறக்கக்கூடாது என எண்ணினேன். தந்தையின் நினைவாக இலவசமாக டிரோன் மூலம் மருந்து தெளித்துவருகிறேன்.
என்னிடமுள்ள 4 டிரோன்கள் மூலம் 18 மாவட்டங்களுக்கு சென்று 252 விவசாயிகளுக்கு இலவசமாக டிரோன் மூலம் பூச்சி மருந்து தெளித்துள்ளேன். அதற்காக ஜெர்மனியில் மாதம் 3.50 லட்சம் சம்பளத்தில் வேலை கிடைத்தும் வேண்டாமென்று முழுமூச்சாக இயற்கை விவசாயம் செய்து வருகிறேன்.
எங்களுக்கு சொந்தமான 5 ஏக்கர் நிலத்தில் முழுவதும் தாயார் ஜான்சிராணியின் வழிகாட்டலோடு இயற்கை விவசாயம் செய்து வருகிறோம். சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி, சென்சார் மூலம் மோட்டார் இயக்குவது, தண்ணீர் பாய்ச்சுவது, டிரோன் மூலம் பூச்சி மருந்து தெளி்ப்பது நவீன தொழில்நுட்பங்களை பயன்படுத்தி வருகிறேன்.
கொய்யாவில் லக்னோ 49, தைவான் பிங்க், தைவான் ஒயிட், அலகாபாத் கோவா, அர்க்காகிரின் வனாசா, தாய்லாந்து கோவா என பல வகை கொய்யா பயிரிட்டுள்ளேன். மேலும், ஆரஞ்சு, நெல்லி, மா, சப்போட்டா, மாதுளை, எலுமிச்சை, தென்னை வைத்துள்ளேன்.
உற்பத்தியாகும் விளைபொருட்களை இடைத்தரகரின்றி ஆன்லைன் மூலம் நேரடியாக ஹைதராபாத், கேரளா போன்ற வெளிமாநிலங்களிலும் சந்தைப்படுத்தி வருகிறேன். படித்த இளம் தலைமுறையினரும் விவசாயத்தில் முழுமூச்சில் ஈடுபடுவதற்கு ஆலோசனைகளையும் வழங்கி வருகிறேன், என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT