

நாக்பூர்: ராணுவத்தில் பணியாற்றிய லான்ஸ் நாயக் கிருஷ்ணாஜி சம்ரித் என்பவர் கார்கில் போரில் வீர மரணம் அடைந்தார். இவரது மனைவி சவிதா. இவர்களுக்கு குணால், பிரஜ்வால் என்ற இரு மகன்கள் உள்ளனர். கிருஷ்ணாஜி போரில் இறந்த போது மூத்த மகன் குணாலுக்கு இரண்டரை வயது. இரண்டாவது மகன் பிரஜ்வால், தந்தை இறந்து 45 நாட்களுக்கு பின்புதான் பிறந்தார்.
குணாலை ராணுவ அதிகாரியாக்க வேண்டும் என்பது கிருஷ்ணாஜியின் ஆசை. ஆனால், குணால் இன்ஜினியரிங் முடித்து விட்டு வேலைக்கு சேர்ந்து விட்டார். ஆனால், இரண்டாவது மகன் பிரஜ்வால், பட்டப்படிப்பை முடித்தபின் ராணுவ அதிகாரி தேர்வுக்கு விண்ணப்பித்தார். 9 முறை நேர்காணலில் கலந்து கொண்டு கடைசி முயற்சியில் ராணுவ அதிகாரிக்கு தேர்வானார்.
இது குறித்து சவிதா கூறுகையில், ‘‘கணவர் ஆசையை மூத்த மகன் நிறைவேற்றவில்லை.இரண்டாவது மகன் நிறை வேற்றியது பெருமையாக உள்ளது’’ என்றார்.