

தஞ்சாவூர்: தஞ்சையிலுள்ள தென்னக பண்பாட்டு மையத்தில் அகில இந்திய அளவிலான பரதநாட்டிய திருவிழா நடைபெற்று வருகிறது.
தஞ்சாவூர் தென்னக பண்பாட்டு மையத்தில், தேசிய பரதநாட்டிய அகாடமி சார்பில் 53-வது அகில இந்திய அளவிலான பரதநாட்டிய திருவிழா இன்று காலை 9 மணி முதல் நடைபெற்று வருகிறது. திட்ட அதிகாரிகள் ரவீந்திரகுமார், மைத்ரிராஜகோபாலன், தேசிய பரதநாட்டிய அகாடமி தலைவர் அனிதா ஆகியோர் போட்டிகளைத் தொடங்கி வைத்தனர். இதில் 4 வயது முதல் 60 வயது வரை உள்ள பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்று, தனி நபர் மற்றும் குழுவாக பரதநாட்டியம் நடனமாடினர்.
குழு நடனத்தில் 4 பேர் முதல் 6 பேர் வரை பங்கேற்றனர். இதில் தமிழ்நாடு, புதுச்சேரி, ஆந்திரா, கர்நாடகா, தெலுங்கானா உள்பட இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலிருந்து 100-க்கும் மேற்பட்ட பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்றனர்.
இந்த நாட்டிய விழாவில் பங்கேற்ற அனைத்து கலைஞர்களுக்கும் பிரகதீஸ்வரா தேசிய விருது மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டன. இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை நாட்டிய கலைஞர் சுவாதிபரத்வாஜ் செய்திருந்தார்.