

கோவை: கோவை மாநகராட்சியின் சார்பில், மாநகர் முழுவதும் 33 இடங்களில் கோடைகால முகாம் அமைத்து பொதுமக்களுக்கு குளுக்கோஸ், சத்துமாவு விநியோகிக்கப்படுகிறது.
கோவை மாநகராட்சி நிர்வாகத்தின் சார்பில், காந்திபுரம் நகரப் பேருந்து நிலைய வளாகத்தில் பொதுமக்களின் பயன்பாட்டுக்காக தண்ணீர் பந்தல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த தண்ணீர் பந்தலை, மேயர் கல்பனா ஆனந்தகுமார், மாநகராட்சி ஆணையர் மு.பிரதாப் ஆகியோர் நேற்று தொடங்கி வைத்து பொதுமக்களுக்கு நீர் மோர், பழங்கள், சத்து மாவு ஆகியவற்றை வழங்கினர்.
வெயிலில் இருந்து தற்காத்துக் கொள்வது தொடர்பான விழிப்புணர்வு துண்டுப் பிரசுரங்களையும் வழங்கினர்.
இதுதொடர்பாக, ஆணையர் மு.பிரதாப் கூறும்போது, “மாநகராட்சியின் சார்பில் 33 இடங்களில் கோடைகால முகாம்கள் அமைக்கப் பட்டுள்ளன. முகாம்களில், வார்டு பகுதிகளுக்கு உட்பட்ட மருத்துவ அலுவலர்கள் மூலம் முகாமுக்கு ஒரு செவிலியர் நியமிக்கப்பட்டு, மக்களுக்கு குளுக்கோஸ் பவுடர், சத்து மாவு ஆகியவை விநியோகிக்கப்படும். கோடைகாலத்தில் பொதுமக்கள் உடல்நலன் காக்க, கடைபிடிக்க வேண்டிய பாதுகாப்பு குறிப்பு கள் குறித்த விழிப்புணர்வு துண்டு பிரசுரங்களும் வழங்கப்படும்” என்றார். இதில், துணை ஆணையர்கள் ஷர்மிளா, சிவக்குமார், மண்டல தலைவர் மீனாலோகு உள்ளிட்டோர் பங்கேற்றனர்.