

தஞ்சாவூர்: கணவரை இழந்த பெண்ணுக்கு, வீடு கட்ட தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் நிதி ஒதுக்கீடு செய்ததுடன், தன் விருப்ப நிதியிலிருந்து ரூ.75 ஆயிரத்தை அந்தப் பெண்ணின் குடும்ப செலவுக்கு வழங்கியசம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்தவர் இருதயராஜ். இவரது மனைவி சந்தியா(43). இவர்களது குழந்தைகள் அனுப்பிரியா(13), அன்பு(12).இருதயராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்துவிட்டதால், இரு குழந்தைகளுடன் போதிய வருமானமும் இல்லாமல், வசிக்க வீடும் இல்லாத நிலையில், தனது குழந்தைகளுடன் சாலையோரத்தில் வசித்துவந்தார்.
இந்நிலையில் சந்தியா, தனது இரண்டு பிள்ளைகளுடன் அண்மையில், ஆட்சியர் தினேஷ்பொன்ராஜ் ஆலிவரை சந்தித்து தனது நிலைமையை எடுத்து கூறி, மனு அளித்தார். மனுவை பெற்றுக்கொண்ட ஆட்சியர், சம்பந்தபட்ட துறை அதிகாரிகளை அழைத்து மனுவின் தன்மையை கூறி, அரசின் நலத் திட்டங்கள் அந்த பெண்ணுக்கு வழங்குவது குறித்து ஆலோசித்தார்.
பின்னர், சந்தியாவுக்கு கும்பகோணம் அசூர் அருகே வீடுகட்ட வீட்டு மனைப் பட்டா வழங்கி,ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத் துறை சார்பில் வீடு கட்டித்தர நிதியையும் ஒதுக்கீடு செய்தார்.
மேலும், அவரது குடும்ப சூழ்நிலையை கருத்தில் கொண்டு, ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தன் விருப்ப நிதியில் இருந்து ரூ.75 ஆயிரத்துக்கான காசோலையையும், தனது சொந்த பணம் ரூ.10 ஆயிரத்தையும் சந்தியாவை நேற்று முன்தினம் ஆட்சியர் அலுவலகத்துக்கு வரவழைத்து வழங்கினார்.
இச்சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக தெரிவித்த சந்தியா, கண்ணீர் மல்க ஆட்சியருக்கு நன்றி கூறினார்.