Published : 20 May 2023 06:50 AM
Last Updated : 20 May 2023 06:50 AM
கும்பகோணம்: தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் வட்டம் சோழபுரத்தில் 1,300 ஆண்டுகள் பழமையான காசி விசாலாட்சி அம்மன் சமேத காசி விஸ்வநாதர் கோயில் உள்ளது. போதுமான பராமரிப்பு மேற்கொள்ளாமலும், இயற்கை சீற்றங்களாலும் தற்போது இந்த கோயில் முழுவதும் சிதிலமடைந்து காணப்படுகிறது.
இங்கிருந்த சிலைகள் உருக்குலைந்தும், உடைந்தும் கோயிலைச் சுற்றியுள்ள இடங்களில் கிடக்கின்றன. இதேபோல, இங்குள்ள அம்மன் மண்டபம் முழுவதும் இடிந்துள்ளது. இங்கிருந்த அம்மன் சிலையின் கால் பாதம் உடைந்த நிலையிலுள்ளது.
இக்கோயிலின் தற்போதைய நிலை குறித்து, அங்குள்ள சிலர் கும்பகோணம் அரசு பெண்கள் வரலாற்றுப் பேராசிரியர் மு.கலாவிடம் தகவல் தெரிவித்துள்ளனர்.
இதையடுத்து, பேராசிரியர் மு.கலா அண்மையில் கோயிலுக்குச் சென்று, கோயிலைச் சுற்றிப்பார்த்தபோது, கோயில் 3 அடிக்கு புதையுண்ட நிலையில் இருந்தது தெரியவந்தது. மேலும், மூலவர் விமானத்திலிருந்த யானை மேலுள்ள முருகனான பிரம்மசாஸ்தா சிலை, கோயில் வளாகத்தில் புதையுண்டு இருந்த சனீஸ்வரன் மனைவியான தவ்வை, குழந்தைகளுடன் உள்ள கற்சிலையை கண்டறிந்து மீட்டார்.
சிலையை அப்பகுதியினர் சுத்தம் செய்து, மாலை அணிவித்து வழிபாடு செய்து வருகின்றனர். இதையடுத்து, இக்கோயிலை அறநிலையத்துறை மற்றும் இந்தியத் தொல்லியல் துறையினர் ஆய்வு மேற்கொள்ள வேண்டும் என அப்பகுதியினர் வலியுறுத்தியுள்ளனர்.
இதுகுறித்து வரலாற்றுப் பேராசிரியர் மு.கலா கூறியது: இக்கோயில் குறித்து அங்குள்ளவர்கள் தகவல் அளித்ததை அடுத்து, அப்பகுதியினருடன் சென்று கோயிலை பார்வையிட்டோம். அங்கு, சனீஸ்வரன் மனைவியான தவ்வை, தனது குழந்தைகளான மாந்தி, மாந்தன் ஆகியோருடன் இருக்கும் கற்சிலை புதையுண்ட நிலையில் இருந்தது.
பின்னர், அந்த சிலை மீட்கப் பட்டது. இச்சிலையை வழிபாடு செய்த பின்னர் தான், அப்பகுதியிலுள்ள விவசாயிகள், விவசாயப் பணிகளை மேற்கொள்வார்கள் என வரலாறு கூறுகிறது. இதேபோல, மூலவர் விமானத்தில் பிரம்மசாஸ்தா சிலை உள்ளது. முருகன் யானை மீதேறி போருக்குச் செல்லும்போது பிரம்மசாஸ்தா என்றழைக்கப்படுவார். இத்தகைய 2 சிலைகளும் மிகவும் அரிய சிலைகளாகும்.
எனவே, இக்கோயில் வளாகத்தில் பல அரிய சிலைகள் இருப்பதால், 3 அடிக்கு புதையுண்டுள்ள இக்கோயிலையும், சிலைகளையும் மீட்க, அறநிலையத் துறை மற்றும் இந்தியத் தொல்லியல் துறையினர் உரிய ஆய்வு மேற்கொண்டால் பல அரிய தகவல்கள் கிடைக்கும் எனத் தெரிவித்தார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT